சமீபத்தில் ஒரு பாடலைக் கேட்டேன். அது பெரியசாமி தூரன் எழுதியது. இந்தப் பெயரை நம்மில் அநேகர் கேட்டிருப்போம். இவர் எழுதிய எளிமையான பாடல்கள் ஆரம்பப் பள்ளிக் கால தமிழ் பாட நூல்களில் படித்த ஞாபகம் இருக்கிறது. குறிப்பாக நத்தையாரே நத்தையாரே அத்தை வீடு பயணமா என்ற பாட்டு. ஞாபகம் வருகிறதா? அத்தை வீடு போக முதுகில் தண்ணீர்க் குடம் வேணுமோ என்று அடுத்த வரி மனதில் தோன்றுகிறதா? சரி. நான் கேட்ட பாடலுக்கு வருகிறேன். அது கரையேற வேண்டாமா என்ற பாடல். டி.எம். தியாகராஜன் என்ற கர்நாடக இசைப் பாடகர் பாடியிருந்தார். இந்தப் பாடல் அமைந்த ராகம் ரசிக ரஞ்சனி என்று கண்டிருந்தது. நான் கர்நாடக இசையைப் பயின்றவன் அல்ல. நிறையக் கேட்டிருக்கிறேன். கற்றலிற் கேட்டலே நன்று என்பது வேதம் அல்லவா? எனது சிறு வயதில் சங்கீதம் வானொலிப் பெட்டியிலிருந்து பெருகி வரும். அப்பா அதைக் கேட்டுக் கொண்டிருப்பார். சில சமயம் கண்ணாடி அணிந்த அவர் கண்களில் நீர் நிறைந்து இருக்கும். ஆஹா என்று ஒரு அனுபூதியில் திளைத்து இருப்பார். அந்தக் காட்சியைப் பார்க்கவே பரவசமாக இருக்கும். கேட்டுக் கேட்டுப் பழகிய மனம் இது இன்ன ராகம் என்று ...