அந்தக் குரல் மென்மை கொண்டு இழைவது. ஆழமான சோகத்தை உள்ளே தரித்துக் கொண்டது. கேட்பவர் மனத்தைத் தவிப்பு கொள்ள வைப்பது. கேட்டு முடித்த உடன் மனம் வேறு எதிலும் லயிக்க விடாதது.. மனம் ஏதேதோ நினைவுகளில் மூழ்கி விடும். சென்னையில் ராஜகுமாரி என்று ஒரு தியேட்டர் இருந்தது. அங்குதான் அந்தக் குரலை முதலாகக் கேட்டேன். அப்போது எனக்குப் பதினாறு வயது. பரிச்சய் என்று ஒரு ஹிந்தித் திரைப்படம். ஆர்.டி.பர்மன் இசை. பாடலை எழுதியவர் குல்ஸார். லதா மங்கேஷ்கர் உடன் இணைந்து பாடிய அந்தக் குரலைப் பற்றி தான் மேலே குறிப்பிட்டேன். அது பூபேந்தர் சிங் என்ற பாடகரின் குரல். ஹிந்துஸ்தானி இசை திரைப் பாடல்களில் இருந்து முற்றிலும் நீங்கி விடாத காலம் அது. எனக்கு ஹிந்தி ஓரளவு அப்போது பரிச்சயம் ஆகி இருந்தது. அதாவது பரிச்சய் என்றால் பரிச்சயம் என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு. நான் சொன்ன பாடல் பீதி நா பிதாயி ரயினா என்று துவங்கும். அந்தக் காட்சியில் ஜெயா பாதுரி யும் சஞ்சீவ் குமாரும் நடித்திருப்பார்கள். ஜெயா மகள். சஞ்சீவ் நோயுற்ற தந்தை. ஜெயா பாடுவார். பாதி பாடும் போது வரிகள் தவறி விடும். அப்போது சஞ்சீவ் அந்த ...