Skip to main content

Posts

Showing posts from February, 2022

மஞ்சள் ரிப்பன்

 எனது முந்தைய பதிவின் தொடர்ச்சியாக இதைக் கருத வேண்டுகிறேன். ஒரு ஹங்கேரியக் கவிதை. அதன் தலைப்பு மஞ்சள் ரிப்பன். ஆங்கிலத்தில் இருந்ததன் தமிழாக்கம் செய்தது இவ்வாறு. நான் வீடு திரும்புகிறேன் என் தண்டனைக் காலம் முடிந்தது இப்போது எது எனது எது எனதல்ல என்று தெரிந்து கொள்ள வேண்டும் எனது கடிதம் உனக்குக் கிடைத்திருக்கக் கூடும் நான் வெகு சீக்கிரம் விடுதலை ஆகி விடுவேன்  என்றால் உனக்குத் தெரியும் நீ என்ன செய்ய வேண்டும் என்று இன்னமும் நீ என்னை விரும்பினால்  அந்தப் பழைய நெடிய மரத்தைச் சுற்றி ஒரு மஞ்சள் ரிப்பனை நீ கட்டி விட வேண்டும் நெடு நாட்கள் ஆகிவிட்டது நீ இன்னமும் என்னை விரும்புகிறாயா? ஒரு வேளை மரத்தைச் சுற்றி கட்டிய மஞ்சள் ரிப்பனை நான் காணவில்லை என்றால் நான் பஸ்ஸிலேயே அமர்ந்து இருப்பேன் மறந்து விடு , பழியை என் மீது போட்டு விடு இது பஸ் டிரைவருக்கு ஒரு வேளை மரத்தைச் சுற்றி கட்டிய மஞ்சள் ரிப்பனை நான் காணவில்லை என்றால்... என் மேல் கவனம் வையுங்கள் என்னால் அந்தக் காட்சியைக் காண முடியாது நான் இன்னமும் சிறையிலேயே இருப்பேன் சிறையின் சாவி எனது அன்பிடம்  இருக்கிறது ஒரு எளிய மஞ்சள் ரிப்பன் ...

ஒரே ஒரு தீபம்

 அவன் வெகு நேரமாக நடந்து கொண்டிருந்தான். கண்கள் சிவந்து  காணப்பட்டது. உதடுகள் காய்ந்து இருந்தன. முகத்தில் தாடி மண்டி இருந்தது. அது ஒரு மலைப் பாதை..அவன் செல்ல வேண்டிய இடத்தின் பெயர் அருணகிரி. ஒரு வாகனமும் நிற்கவில்லை. அவன் நடந்து கொண்டே இருந்தான். களைத்துப் போய் ஒரு கல்லில் அமர்ந்தான்.தொலைவில் ஒரு பஸ் வருவது தெரிந்தது. பள்ளிக் குழந்தைகள் பாடும் குரல் சன்னமாக கேட்டது. மெல்ல மெல்ல அந்த குரல்கள் நெருங்கி வந்தது.  அவன் எழுந்தான். பஸ்ஸை நிறுத்த கை காட்டினான். பஸ் அவனைக் கடந்து சென்றது. கொஞ்ச தூரம் சென்ற பின் நின்றது. பின்னால் வந்து அவனருகில் நின்றது. பஸ்ஸில் பெரும்பாலும் பள்ளிச் சிறார் சிறுமிகள். ஒரு பாதிரியார். ஆசிரியைகள். அவன் செல்ல வேண்டிய இடத்தை சொல்கிறான். ஏற்றிக்கொள்ள வேண்டுகிறான்.டிரைவர் பாதிரியாரை பார்க்கிறான். அவர் தலை அசைக்கிறார். அந்த மனிதன் பஸ்ஸில் ஏறுகிறான்  எல்லோரும் மௌனமாக இருக்கிறார்கள், ஆனால் சொல்லாத ஒரு பரிவு அவன் மேல் எல்லோருக்கும் பிறக்கிறது.  மௌனத்தை கலைக்க பாதிரியார் அவனோடு பேச்சு கொடுக்கிறார். நீ எங்கிருந்து வருகிறாய்? ஜெயிலில் இருந்து. செய்த கு...

என்னை எடுத்து--

  பள்ளியில் தமிழ் படித்தேன். பின்பு ஏனோ கல்லூரியில் முதல் மொழியாகத் தமிழைத் தேர்வு செய்யவில்லை. "யாயும் யாயும் யாயாகியரோ" என்று சங்கத் தமிழை என் நண்பர்கள் படித்தார்கள். நான் படித்ததோ ஹிந்திக் கவிதைகள். சங்கத் தமிழை படிக்காதது ஒரு குறை. அந்தக் குறை தனிப்படத் தேடித் தேடிப் படிப்பதில் தீருகிறது. ஐங்குறுநூறில் ஒரு பாடல் அம்மூவனார் என்ற புலவர் இயற்றியது. அது நெய்தல் நிலப் பாடல்-. தலைவி தோழியிடம் கூறுவதாக அமைந்திரூக்கிறது. அந்தப் பாடல் வருமாறு கோடு புலம் கொட்பக் கடல் எழுந்து முழங்கப் பாடு இமிழ் பனித் துறை ஓடு கலம் உகைக்கும துறைவன் பிரிந்தென, நெகிழ்ந்தன வீங்கின மாதோ தோழி, என் வளையே.:  இதன் பொருளைப் பார்க்கலாம் தலைவி கூறுகின்றாள்- தோழி! சங்குகள் கடற்கரையில் சுழல்கின்றன. கடல் அலைகள் ஆரவாரம் செய்கின்றன. ஒலி மிகுந்த துறையிலிருந்து, மரக்கலங்கள் விரைந்து செல்கின்றன- அந்தக்  குளிர்ந்த துறையின் துறைவன் என்னைப் பிரியும் பொழுது என் வளையல்கள் நெகிழ்கின்றன.  அவன் வரும் பொழுது என் கைகள் பருத்து விடுகின்றன. வளைகள் நெகிழாது நிற்கின்றன. இந்த சங்க காலப் பாடல் கொண்டு வந்த சூழல் ஒரு பழைய திரை...

ஷேக்ஸ்பியரோடு நானும்

  Some are born great Some achieve greatness and  Some have greatness thrust upon them பள்ளியில் தங்கை ஆங்கிலத்தில் பேசினாள். அதன் துவக்கம் மேலே சொன்னவாறு இருந்தது. அந்தப் பேச்சை அக்கா எழுதிக் கொடுத்தார். தங்கையை பேச்சுக்குத் தயார் செய்யும் போது எனக்கும் மனதில் ஏறிவிட்டது ரொம்ப நாள் அது அக்கா எழுதிய வரி என்று நினைத்திருந்தேன். பிற்பாடு தெரிந்தது. அது ஷேக்ஸ்பியரின் வரி என்று. அக்கா கல்லூரியில் ஷேக்ஸ்பியரின் இரண்டு நாடகங்களை பாடமாகப் படித்தார். அவை Macbeth மற்றும் Antony and Cleopatra. அக்கா ஒருபோதும் வாய் விட்டுப் படித்ததில்லை.  அக்காவின் கண்களில் நீர் நிற்கும். அது ஒரு போதும் உருண்டு விழி விளிம்பைத் தாண்டியது இல்லை. நான் அப்படி இல்லை. சொர்க்கம் என்று ஒரு திரைப்படம் 1970 வாக்கில் வெளிவந்தது. அதில் ஒரு நாடகக் காட்சி. சிவாஜி கணேசன் ஜூலியஸ் சீசராக நடித்திருப்பார். நீளமான சிகப்பு  அங்கியை வலது தோளில் வழியும்படி அணிந்திருப்பார்.  முன்னங்கைகளில் வழியும் துணியைக் கைகளில் ஏந்தியபடி வசனம் பேசுவார். சுற்றி வளைத்து அனைவரும் கத்தியால் குத்துவார்கள். கடைசியாக புரூடஸ். சீசரின்...

பாரதியின் காதல்

   உலகமே பெரிய கனவு. அந்தக் கனவிலும் ஒரு கனவு. உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்வு. ஒளி பொருந்திய நெற்றியில் திலகம் அணிந்த பெண்ணிடம் கொள்ளும் மையல் தெய்வீக கனவு. அது சில தினங்கள் ஆனாலும் உயிர்க்கு அமுதம் சேர்க்கிறது. இப்படிச் சொன்னது பாரதி. பாரதி ஸ்வசரிதை என்று ஒரு செய்யுள் நூலை 1910ம் ஆண்டு பதிப்பித்தார்- கதாநாயகன் தன் கதையைத் தானே சொல்லும் நடை. இது நவீனமானது என்று நூலின் முன்னுரையில்  குறிப்பிடுகிறார். இதில் தான் தனது பிள்ளைக் காதலைப் பற்றிப் பேசுகிறார்.  அதை ஒருவாறு சொல்ல முற்படுவோம்.  அந்தப் பெண்ணிற்கு ஒன்பது வயது. காவியத்தில் வரும் சகுந்தலை போன்றவள். இதைக் கேட்பவர் வியக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. அன்பு என்னும் பெருவெள்ளம் இழுக்கிறது. தப்புவது எப்படி?  குமரகுருருபரன், சம்பந்தன், துருவன் போன்றோர் பிள்ளைப்பருவத்தில் கடவுள் மீது பக்தி செலுத்தினர். ஆனால் பாரதியோ காதல் வயப்பட்டார்.  அந்தப் பெண் தண்ணீர் எடுக்க வருகிறாள்.  முத்துப் போல அவள் புன்னகை சுடர் விடுகிறது. பாரதி அவள் வருகைக்குக் காத்திருக்கிறார். பார்க்கிறார். இ...

பாதி முடிந்த சொர்க்கம்

  டாமஸ் ட்ரான்ஸ்ஃபார்மர் இவர் ஸ்வீடன் தேசத்துக் கவி. நோபல் பரிசை வேன்றிருக்கிறார். 1931ம் வருடம் பிறந்தார். 2015ம் வருடம் மறைந்தார். நிலத்தில் தோண்டும் போது பீரிட்டு வரும் நீரைப் போன்றது இவரது கவிதைகள். அழுத்தமான படிமங்கள். ஒரு கவிதையைத் தமிழாக்கிப் பார்க்கலாம். பாதி முடிந்த சொர்க்கம் ஏமாற்றம் தனது பாதையை விட்டு விலகுகிறது துயரம் தனது பாதையை விட்டு விலகுகிறது கழுகு பறக்கும் பாதையை விட்டு விலகுகிறது ஒளி ஆர்வத்துடன் வெளியே பாய்கிறது நமது ஓவியங்கள் பகலொளியைக் காண்கின்றன பனி யுகத்தின் சிகப்பான மிருகங்கள் யாவையும் சுற்றிலும் பார்க்கின்றன நாம் நூறு நூறாக வெய்யிலில் நடக்கிறோம் ஒவ்வொரு மனிதனும் பாதி திறந்த கதவு எல்லோருக்குமான அறைக்கு இட்டுச் செல்லும் கதவு நமக்கு கீழே முடிவற்ற நிலம் மரங்களின் ஊடே பளபளக்கும் தண்ணீர் பூமியின் கண்ணாடி சன்னலாக ஏரி டாமஸ் ட்ரான்ஸ்ஃபார்மர் மூலம் ஸ்வீடன் ஆங்கிலம் வழித் தமிழில் தி சந்தானம்

விழியற்ற கலைஞன்

  அது 1981ம் வருடம். இரண்டு ஆண்டுகள் வெளியூரில் பணியாற்றி விட்டு மதுரைக்கு வந்த சமயம். அந்த வருடம்  உடல் ஊனமுற்றவர் ஆண்டாக அறிவிக்கப் பட்டிருந்தது. அப்போது தான் அந்தப் படம் வெளியாகி இருந்தது. ராஜ பார்வை. கமலஹாசன் தயாரித்து நடித்த படம். விழியற்ற வயலின் கலைஞராக நடித்திருப்பார். இணையாக மாதவி. ஓரு மெல்லிய காதல் கதை. இளையராஜாவின் பின்னணி இசை பிரமிப்பூட்டும்  வகையில் இருந்தது.  அதில் ஓரு காட்சி. ரகு பார்வையற்றவன் என்று நான்ஸிக்குத் தெரியாது.  ரகு கண்களில் கறுப்புக் கண்ணாடி அணிந்திருப்பான். லிப்டில் போகும் போது தன்னை  தவறான முறையில் உற்றுப் பார்க்கிறார் என்று பொங்கிவிடுவாள்.லிப்டில் இருந்தவர்கள் ரகுவை அடித்துத் தள்ளிவிடுவார்கள். கீழே விழுந்த ரகு கண்ணாடியைத் துழாவுவான். நான்ஸிக்குத் தன் தவறு புரியும்.  நான்ஸியின் தாத்தா அவளுக்கு நல்ல நண்பர். தாத்தாவிடம் நான் ரகுவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லுவாள்.  இதோ உனக்கு ஒரு சந்தர்ப்பம் என்று பேப்பர் செய்தியைச் சுட்டிக் காட்டுகிறார். நகரத்தில் ஒரு பெரிய அரங்கில் ரகுவின் வயலின் கச்சேரி நடக்கிறது. உடனே கி...

ஒரு துளி கண்ணீர்

  “வரையின் மாமணியும் வயிரமும் எதிர் உதிர் முத்தும் திரை கொணர்ந்து உந்தும்” என்பார் திருமங்கை ஆழ்வார். கடலின் அலை கொண்டு வருவதில்லை. வலை உலகில். அல்காரிதம் (algorithm) கொண்டு வந்து சேர்க்கிறது நமக்குப் பிடித்ததை. இதை உங்களுக்குப் பிடித்தால் இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம் என்று சொல்லும். அப்படித்தான்  நான் விரும்பும் வகைமையில் ஒரு எழுத்து  இன்று வந்து சேர்ந்தது. வயிரமும் முத்தும் போல.  செல்போனில் தேடும் போது. அந்த எழுத்துக்கு உரியவர் யியூன் லீ. சீனத்துப் பெண்மணி. பெய்ஜிங்கைச் சேர்ந்தவர். தந்தை அணு இயற்பியலாளர். (Nuclear Physicist). தாய் ஆசிரியை. படிப்பை பீகிங் பல்கலைக் கழகத்தில் முடிக்கிறார். மேல் படிப்புக்கு அமெரிக்கா செல்கிறார். அபுனைவு எழுதுவதைப் பயில்கிறார். பின்பு புனைவு (Fiction) மற்றும் அபுனைவை (Non fiction) பயிற்றுவிக்கிறார். இவர் எழுதிய The ability to cry தான் இன்று படிக்கக் கிடைத்தது என்று மேலே சொன்னேன். நியூயார்க்கர் இதழில் வந்திருந்தது. பெரும்பாலும் இவரது கட்டுரைகள் நியூயார்க்கர் இதழில் தான் வரும். தெளிவான நடை. உணர்வுகளின்  மெலிதான வெளிப்பாடு. அதில் ...

என்னை மறந்து விட்டாயே

  சில குரல்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. வாழ்க்கை முழுதும். குரல்கள் நம்மோடு உறவாடுகின்றன. பாசத்தைச் சொன்ன குரல்கள். பிரியத்தில் நெகிழ்ந்த குரல்கள். பிரியும் போது நடுங்கிய குரல்கள். அறிவறியாப் பருவத்தில் ஆழத்தில் தங்கிவிட்ட அம்மாவின் தாலாட்டுக் குரல்.   இசையாய் ஒலித்து நம்மை எங்கெங்கோ கூட்டிச் சென்ற குரல்கள். உணர்வுகளை மீட்டி உள்ளத்தை உருக்கிய குரல்கள்.  அவற்றில் ஒரு தனிப்பட்ட குரல் லதாவுடையது. ஆளரவமற்ற ரயில்நிலையத்தில் பனி விழும் பின்னிரவில் தனித்து ஒலிக்கும் பறவையின் குரல் போன்றது அவர் குரல். அந்தக் குரல் ஒலித்தால் மட்டுமே போதுமானதாயிருந்தது. இசையின் எல்லாப் பரிமாணங்களும் எல்லா சாத்தியங்களும் இயல்பாகக் கூடி வந்தது. மூன்றரை நிமிடங்களே ஒலிக்கும் பாடல்களில் பெரிய இசை அனுபவம் நாடி வரும் போது மொழி ஒரு தடையாக இருந்ததில்லை. சிறு வயதில் பள்ளியின் இறுதி மணி ஓலித்து வீட்டுக்கு அவரவர் கிளம்பும் போது இந்த அடியை மறக்காதே என்று ஓருவர் ஒருவரை அடித்து விட்டு விடை பெறுவோம் மறந்து விடக் கூடாது என்ற பயம். இந்த பயம் வாழ்க்கை பூராவும் தொடர்ந்தபடியே இருக்கிறது. இந்தப் பாடல் இப்படித் துவங்கு...

நான் தான் அவன்

  அவர் சொன்னார். நானே உண்மையாக இருக்கிறேன் என்று. அவர் பெயர் மன்சூர் அல் ஹல்லஜ். பாரசீகத்தைச் சேர்ந்தவர். சூஃபி அறிஞர். சூஃபி என்பது கடவுளுடன் ஆன அன்பு. தெய்வீக உறவு. கடவுளை ஒவ்வொருவரும் தானே அனுபவித்து அறிவது. இதைத்தான் சூஃபிக்கள் மக்களிடையே பரப்பினர். கவிதையால், பேச்சால், எழுத்தால். அதைத்தான் மன்சூர் செய்தார். மன்சூர் பிறந்தது ஒன்பதாம் நூற்றாண்டு மத்தியில். ஈரானில். மறைந்தது அடுத்த நூற்றாண்டின் இருபத்தியிரண்டாம் வருடம் ஈராக்கில்.  நானே உண்மை என்று அவர் சொன்னதை மேலே பார்த்தோம். அவர் அத்தோடு நிற்கவில்லை. உங்கள் நெஞ்சங்களிலே காபாவை எழுப்பிக் கொள்ளுங்கள் என்றார். காபா என்பது இஸ்லாமியரின் தொழுகை இடம். மெக்காவில் இருப்பது.  நானே உண்மை என்று அவர் சொன்னது நானே கடவுள் என்று  அவர் சொன்னதாகக் கருதப்பட்டது. அதனாலேயே அவர் தண்டிக்கப்பட்டார்.  தண்டனை பாக்தாத் நகரில் யூப்ரடீஸ் ந்திக்கரையில் மக்கள் பார்க்க நிறைவேற்றப்பட்டது. அவரை ஊன் ஊனாகச் சிதைத்தார்கள். அவர் சிரித்தபடியே இருந்தார். அவர் கண்கள் சிரித்தன. கண்களைப் பிடுங்கினார்கள். அவருடைய மொத்த இருப்பும் சிரித்தபடி இருந்தது. த...

நறியவும் உளவோ

சங்க இலக்கியப் பாடல்கள் சுவைக்கும் தோறும் இன்பம் தருவதாய் இருக்கிறது. அதிலும் குறுந்தொகைப் பாடல்கள். நான் சொல்லப் போகும் இந்தப் பாடல் நாம் எல்லோரும் அறிந்தது. திருவிளையாடல் திரைப்படம் மூலமாக நம்மில் அனேகர் தெரிந்து கொண்டது. அதில் தருமிக்காக சிவபெருமான் எழுதிய பாடல். நக்கீரன் குற்றம் கண்டுபிடித்த பாடல். சிவாஜி கணேசன் கம்பீரக் குரலில் பதினைந்து வினாடிகளுக்கும் சற்றே குறைவான நேரத்தில் சொல்லி முடித்த பாடல். அது "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி" எனத் துவங்கும் பாடல். எத்தனையோ முறை வசனங்களைக் கேட்டிருந்தாலும் முதல் இரண்டு வரிகள் தவிர மற்றவை பிடிபடுவதில்லை. என்னிடம் 'தனிப்பாடற்றிரட்டு' என்று ஒரு புத்தகம் இருக்கிறது. பழைய புத்தகம். கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டுப் பழசு. விலை ஒரு ரூபாய் எட்டு அணா என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. பூமகள் விலாச அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது என்று காண்கின்றது.இந்தப் புத்தகம் என்னிடம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. நம்மிடம் இருந்த புத்தகங்கள் எப்படிச் சென்றது என்றும் தெரியாது. நட்பைப் போல. இந்தப் பாடலை எழுதியவர் மதுரைச் சொக்கநாதர்...