அன்னி மைக்கல்ஸ் எழுதிய Held என்ற நாவலைப் படிக்க வாய்த்தது. அன்னி கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர். இந்தப் புத்தகம் புக்கரின் நீள் வரிசைப் பட்டியலில் உள்ளது. இவரது எழுத்து நடை பிரமிக்க வைத்தது. கவிதை நடை. எளிய பிரார்த்தனை போல எத்தனை எத்தனை வரிகள். கரையில் ஒதுங்கிய கிளிஞ்சல்களை அள்ளி அரை நிஜார் பையில் நிரப்பிக் கொள்ளும் சிறுவனைப் போல உணர்ந்தேன். ஐந்து தலைமுறைப் பெண்களைப் பற்றிப் பேசுகிறது கதை. வேறு வேறு காலங்கள். வேறு வேறு நிலப் பரப்புகள். துண்டு துண்டாக நிகழ்வுகள். ஒரு நேர் கோட்டில் செல்வது இல்லை. ஒரு தேர்ந்த சினிமா எடிட்டரைப் போல அழகாக வெட்டி வெட்டிச் செல்கிறார் அன்னி. 1917. எஸ்காட் நதிக்கரை. யுத்த களம். குண்டடி பட்டு, பனி பெய்த நிலத்தில் தலை கவிழ்ந்து வீழ்ந்திருக்கும் ஜேம்ஸ். காலை அசைக்க முடியவில்லை இல்லை இல்லை..அவனது கால் காலணியைப் போல கழன்று சற்றே அருகில்.. இவனது பார்வையிலிருந்து கதை துவங்குகிறது. மிக அருகில் காயமுற்று ஒரு இளைய படை வீரன் வீழ்ந்திருப்பதை அவன் உணருகிறான். இரவு விழுவது போல இருக்குமா அவனது இறுதிக் கணங்கள்? நினைவுகள் கசிகிறது. . தனது அன்புக...