Skip to main content

Posts

Showing posts from November, 2021

ஒருவர் மட்டும் திரும்பவில்லை

  “ஒருவர் மட்டும் திரும்பவில்லை” (And One did not return) என்று ஒரு சிறுகதை- எழுதியவர் கே.ஏ.அப்பாஸ்.  டாக்டர் துவாரக்நாத் கோட்னீஸ் என்பவரைப் பற்றியது- இந்தக் கதையை கே.ஏ.அப்பாஸ் சாந்தாராமிடம் கொடுத்தார்.சாந்தாராம் படத்தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்.  நடிகரும் கூட. (தோ ஆன்கேன் பாரா ஹாத் நினைவுக்கு வருகிறதா?) அந்தக் கதையை திரைப்படமாக்க முடிவு செய்தார் சாந்தாராம்- படத்தின் பெயர் டாக்டர் கோட்னீஸ்கீ அமர் கஹானி”.  அதாவது டாக்டர் கோட்னீஸின் அழியாச் சரிதம்.கே. ஏ.அப்பாஸ் திரைக்கதை எழுத வசந்த் தேசாய் இசை அமைத்த படம். டாக்டர் கோட்னீஸ் கீ அமர் கஹானி- இந்தப் படப் பெயரை நான் அறிந்தது அம்மாவிடமிருந்து. தனக்கே உரிய ஹிந்தி உச்சரிப்பில் அதைச் சொல்வார். அப்போது அவர் முகம் பிரகாசமாக இருக்கும். ஆனால் படத்தின் கதையைச் சொன்னதில்லை. நானும் கேட்டுக் கொள்ளவில்லை. 1946ல் வெளிவந்த இப்படத்தை யூ டியூபில் பார்த்தேன். இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாக ஓடியது.டாக்டர் துவாரக் நாத் கோட்னீஸ் என்பவரின் உண்மைக் கதை. சிறு வயதில் சினிமா தியேட்டர்களில் பாட்டுப் புத்தகம் விற்பார்கள். பாடல்களுக்கு முன்னால் திரைப...

அபி-மதி-நான்

  அந்தத் தேவாலயத்தின் பெயர் தூய பேதுரு ஆலயம்.வளாகத்தின்  உள்ளே நுழைந்தேன்.  பேதுரு ஏசுவின் பன்னிரண்டு சீடர்களில் தலையானவர்  யூதாஸ் ஏசுவை காட்டிக் கொடுக்கிறான். மற்ற சீடர்கள் சிதறி ஓடி விடுவார்கள்.ஆனால்  பேதுரு மட்டும் ஏசுவை பிடித்துச் செல்ல வந்தவர்களில் ஒருவன் காதை வெட்டி விடுவார்.  இப்படிப் பட்ட சீடரை நோக்கி ஏசு சொல்லுவார். " கோழி  கூவுவதற்குள் நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்"   அது அவ்வாறே நடக்கும்.  உள்ளே நுழையும் போது இத்தனையும் ஞாபகம் வந்தது தேவாலயத்துக்குள்ளே  இருக்கைகள் காலியாக இருந்தன. அந்த வெறுமை இசைக் கோவைகளுக்கு இடையே நேரிடும் மெளனம்போலத் தோன்றியது. வலப்பக்கமாக இருந்த அறையில் மதிவாணன் இருந்தார். எழுதிக் கொண்டிருந்தவர் நிமிர்ந்தார்.. பெரிய விழிகள்.அகலப் பார்த்தார்.  பார்வை கனிவாயிற்று. வெண்பல் தெரியச் சிரித்தார் . எழுதியது போலப் புருவங்கள். பெரிய நெற்றி. மதிவாணன் பாதிரியார் அல்ல. எனது நண்பர். நண்பர்களைப் பார்ப்பதும் வார்த்தையாடுவதும் சுகம்.  குறிப்பாக வெறுமை விசிறியடிக்கும் கொரோனா காலங்களில். பலதும் பேசி பழைய நினைவு...

இன்பமும் துன்பமும்

  நம்மாழ்வாரின் திருவாய் மொழி. இந்தப் பாசுரம் ஓரு தரிசனம். யானும் நீ தானே ஆவது மெய்யே     அருநரகு அவையும்நீ ஆனால் வானுயர்ந்த இன்பம் எய்திலென்? மற்றை           நரகமே எய்திலென்? எனினும்  யானும் நீ தானாய்த் தெளிதொறும்  நன்றும்         அஞ்சுவன் நரகம் நான் அடைதல் வானுயர்இன்பம் மன்னி வீற்றிருந்தாய்           அருள் நின் தாள்களை எனக்கே  "அடியேன் சிறிய ஞானத்தன்" என்பார் நம்மாழ்வார். நாம் எம்மாத்திரம்? ஒருவாறு பொருள்கொள்வோம்.காக்கை வாயிலும் கட்டுரை கொள்க. நானும் நீ தான் என்பது உண்மை. நரகமும் நீயே என்றால், வான் போல் உயர்ந்த இன்பம் அடைந்தால் என்ன? நரகத்தை அடைந்தால் தான் என்ன? என்றாலும் நானும் நீ என்ற தெளிவு வரும் வரை நரகம் அடைவதற்கு நான் பயப்படுவேன்.  வான் போன்ற இன்பத்தில் நிலை பெற்று வீற்றிரூப்பவனே! உனது தாள்களை எனக்கு அருளுக! தெளிவாகியது. இன்பம் வந்தால் என்ன? நரகமே அடைந்தால் என்ன? எல்லாம் நீ என்னும்போது ஏது மயக்கம்...

நிலவில் தயங்கி விடாதே

  பெரி கோமோ அமெரிக்கப் பாடகர். எனக்கு இவரைப் பற்றி தெரியாது. "நடசத்திரங்களை உன் கண்களுக்குள் வாங்கி விடாதே” என்று ஒரு பாடல். பெரி கோம் பாடியது. இந்தப் பாடல் எனக்குத் தெரிய வந்தது. எப்படி என்றால் அ முத்துலிங்கம் மூலமாக. அ.முத்துலிங்கம் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர். நுட்பமான எழுத்தாளர்.  கனடாவில் இருக்கிறார். ஒரு கதையில் இந்தப் பாடலைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இவருடைய கட்டுரைகள் கதை போலவும், கதைகள் கட்டுரை போலவும் சுவாரசியம் குன்றாமல் இருக்கும்.- ஒரு கதையில் இந்தப் பாடலை ஒரு பெண் கிடார் இசைத்தபடி தோட்டத்தில் பாடுவாள். இணையத்தில் தேடும் போது இந்தப் பாடல் கேட்க  கிடைத்தது.என்ன குரல்.. பாடல் இசையோடு துள்ளாட்டம் போட வைத்தது.1952ம் வருடம் வெளிவந்து இந்தப் பாடல் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் சக்கைப் போடு போட்டிருக்கிறது. வின்ஸ்டன் மூர் என்பவர் எழுதியிருக்கிறார். எளிய வரிகள்.; மெல்லிய உணர்வுகள். பாடலைத் தமிழில் பார்ப்போம். நட்சத்திரங்களை உன் கண்களுக்கு உள்ளே வாங்கி விடாதே நிலவை உன் இதயத்தை நொறுக்க விடாதே காதல் இரவில் மலர்கிறது பகலில் மரிக்கிறது நட்சத்திரங்களை உன் கண்களு...

பால் போல ஒரு பாடல்

  சில பாடல்கள் பிடித்து விடுகிறது.. இசையோ குரலோ எதுவோ பிடித்து விடுகிறது. நமக்கு சிலரைப் பிடிக்கும். அவருக்கு ஒரு பாடல் பிடித்தால் நமக்கும் பிடித்து விடும். பத்து பனிரெண்டு வயதில் நமது விருப்பங்கள் அப்படித்தானே?  என்னுடைய தாய் மாமனுக்கு அந்தப் பாடல் பிடிக்கும். அது எந்தப் பாடல்? சொல்கிறேன். “மாமன்மார் மூவர் தம்பி” என்று அம்மா அடிக்கடி பாடுவார். எனக்கு அன்பான மூன்று மாமன்கள். அவர்களில் எல்லோருக்கும் இளையவருக்குத்தான் நான் சொல்லப் போகும் பாடல் பிடிக்கும். மாமா மதுரைக்கு வருவார். வருடத்தில் ஓரிரு முறை. பூனைக்குட்டிகளைப் போல் அவரைச் சுற்றிச் சுற்றி வருவது எங்கள் வழக்கம். தின்பதற்கு வாங்கி வந்ததைத் தருவார். அப்படி  ஒருமுறை வந்த சமயம் பாடல் எங்கோ ஒலித்தது. அது “பால் போலவே “என்று தொடங்கியது. மாமா ஒரு கணம் காதில் வாங்கினார். அந்தப் பாடல் வந்த திசையை நோக்கி நடந்தார்- வழக்கம் போல நானும் அவர் பின்னால் நடந்தேன்- பாடல் முழுதும் கேட்டு ரசித்தார். நானும். பாடல் காட்டிய உணர்வுகளோ இசை நுணுக்கமோ அப்போது புரியவில்லை.- இப்போது கொஞ்சம் புரிகிறது. கேட்டால் இனிக்கிறது. மலையில் அந்தப் பெண் பாடுக...

குறிஞ்சி மலர்

 " பிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் பூத்துக் கொண்டிருந்தது.” இப்படித் துவங்குகிறது அந்தக் கதை. கதைகளின் துவக்க வரிகள் மனதில் தங்கி விடுகின்றன. கதைகள் மறந்து விடுகின்றன  மனக்குகையின் இருளில் மங்கி விடுகின்றன. மறு வாசிப்பு என்ற வெளிச்சம் படும் போது எல்லாம் துலங்கி வருகின்றன. அப்படி சமீபத்தில் ஒரு கதையை வாசித்தேன். அந்தக் கதை “குறிஞ்சி மலர்”. மணிவண்ணன் என்ற பெயரில் நா. பார்த்தசாரதி எழுதியது. கல்கியில் முப்பத்து ஏழு வாரங்கள் தொடர்கதையாக வந்திருக்கிறது. மக்கள் வாரா வாரம் காத்திருந்தார்கள். மெல்ல மெல்லக் கதை வளருவதைக் கண்டு ஆனந்தம் கொண்டார்கள். நெஞ்சொடு சேர்த்து அணைத்து குழந்தை போல் சொந்தம் கொண்டாடினார்கள். எனக்கு வாசிக்கக் கிடைத்தது கல்கியில் தொடராக வந்தபோது அத்தியாயம் அத்தியாயமாகப் பிரித்து பைண்டிங் செய்யப்பட்ட பிரதி. தொட்டால் நொறுங்கி இதழ் இதழாக உதிரும் நிலையைக் கொண்டிருந்தது. கவனத்துடன் பக்கங்களைக் கடக்க வேண்டியிருந்தது. லதாவின் ஓவியங்கள் மனதைக் கவர்ந்தன.  நல்ல தமிழ்- எழுதியவர் தமிழாசிரியர் அல்லவா? மதுரைத் தமிழ் சங்கத்தில் தமிழ் பயின்றார். அவர் உள்வாங்கியது த...

பதினான்காம் நாள் நிலவு

  குருதத் உன்னதக் கலைஞன். ஒளியும் நிழலும் ஊடும் பாவுமாக அவன் நெய்த காவியங்கள் தான் எத்தனை அற்புதமானவை. ஜானி வாக்கர், வஹீதா ரஹ்மான் போன்றவர்கள் குரு தத்தால் கண்டறியப் பட்டவர்கள். அவராலேயே த்த்தம் திறமைகளை வளர்த்து எடுத்துக் கொண்டவர்கள். கருத்துக்களையும் உணர்வுகளையும் காட்சிப் படுத்துவதில் அபாரமான திறமை கொண்டவராக இருந்தார் குருதத். அதற்குத் துணையாக இருந்தவர் வி.கே.மூர்த்தி என்ற ஒளிப்பதிவாளர். வெகு ஜன  சினிமாவின் எல்லையில் நின்று கொண்டே அற்புதமான கலைப்படைப்புகளை உருவாக்கினார் குருதத். ப்யாஸா, காகஸ் கே பூல், ஸாஹேப் பீபீ அவுர் குலாம் என்ற திரைப்படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் நாம் இங்கு பேசப் போவது செளத்வீன் கா சாந்த் ( பதினான்காம் நாள் நிலவு) என்ற திரைப்படத்தைப் பற்றி. வியாபார ரீதியாக பெரும் வெற்றி கண்ட படம்.. இதற்கு முந்தைய படமான காகஸ் கே பூல்  குரு தத் இயக்கத்தில் பெரும் தோல்வி கண்டிருந்தது.   அதனால் இந்தப் படத்தைத தயாரித்த போதிலும் தான் இயக்காமல் வேறு ஒருவரை இயக்க வைத்தார்.  ஒரிஸ்ஸாவில் பணியாற்றும் போது அலுவலக நண்பர் இந்தப் படத்தின் சி.டி யை தந்தார்.-பாரத்தேன...

குரல் கொடு

  “அன்மோல் கடீ “( விலை மதிப்பில்லாத கடிகாரம்) என்று ஒரு ஹிந்தித் திரைப்படம். 1946ம் வருடம் வெளிவந்தது.இதன் இசையமைப்பாளர் நெளஷாத் அலி. மேதை. தனித்தனமை கொண்டவை இவர் இசையமைத்த பாடல்கள். இவரது பாடல்களைக் கேட்டால் நெஞ்சிலே ஏக்கம் எழும். முடிவற்ற சோகத்தில் கண்களில் நீர் கட்டும். தடையற்ற ஆனந்தத்தில் உள்ளம் துள்ளிக் குதிக்கும். அழகான உணர்வுக் கோலங்கள் இவரது பாடல்கள். நாம் முன்பு குறிப்பிட்ட “ அன்மோல் கடீ” என்ற திரைப்படத்தில் ஒரு பாடல். "ஆவாஜ் தே கஹான் ஹை." பாடியவர்கள் நூர்ஜஹான் மற்றும் சுரேந்திரா. ஒரு பேட்டியில் ஒரு பாடலை எப்படி அமைக்கிறீர்கள என்ற கேள்விக்குப் பதிலளித்த நெளஷாத் இப்படிக் கூறுகிறார். "எப்படி ஒரு பாடலை அமைக்கிறீர்கள் என்று கேட்டீர்கள். அன்மோல் கடீ என்று ஒரு படம். மஹபூப் கான் இயக்கியது. அதில் ஒரு பாடல் பெரிதும்  பேசப்பட்டது. இன்றளவும் நூர்ஜஹான் ஒவ்வொரு மேடைக் கச்சேரிகளிலும் பாடுகிறார். அந்தப் பாடல் “ஆவாஜ் தே கஹான் ஹை துனியா மேரி ஜவான் ஹை” இந்தப் பாடலுக்கு ஒரு ஆன்மீகத்தன்மை வர வேண்டும் என்று நினைத்தேன். ஆன்மாவிலிருந்தே இப்பாடல் வெளிக்கிளம்பி வருவது போல. ஆனால் என்னால...

பாரதியும் மிஸ் ரீஸும்

  பாரதி சுதேசமித்திரனில் எழுதிய கட்டுரைகள் செறிவானவை. எளிய நடை, கருத்துத் தெளிவு கூடி வந்தவை. பன்முகத் தன்மை வாயந்தவை.  “ஹொக்கு” அதாவது ஹைக்கு(haiku) பற்றி “ஜப்பானியக் கவிதை என்ற தலைப்பில் எழுதுகிறார்- சிறிய வடிவம். பெரிய பொருள்.  சுருங்கச் சொல்லி விளக்குதல். அதுதான் ஹொக்கு. “மாடர்ன் ரிவ்யூ” என்ற பத்திரிகையில் நோகுச்சி என்ற ஜப்பானியக் கவிஞரின் கட்டுரை அடிப்படையில் இதை எழுதியிருக்கிறார். சொல் சிக்கனத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் மிஸ் ரீஸ் என்ற அமெரிக்கப் பெண் கவியின் பெயர் வருகிறது. “ அமெரிக்காவில் மிஸ் ரீஸ் (Lizette Woodworth Reese) என்பதோர் கவிராணியிருக்கிறார். வேண்டாதவற்றைத் தள்ளி விடுவதில் அந்த மிஸ் ரீஸ் என்ற புலவர் பெயர் வாங்கியிருக்கிறார். அநாவசியமானப் பதச் சேர்க்கை, அநாவசியமான கருத்து விளக்கம் என்ற இரண்டுமில்லாமல் முத்துப் போலே பதங்கள் கோக்கும் நல்ல தொழிலாளியாகிய அக்கவிராணி இங்கிலீஷ் பாஷையில் எழுதியிருக்கும் அடிகள்...... “ என்று பாரதி எழுதிச் செல்கிறார்  மிஸ் ரீஸின் கவிதைகளில் எனது தேர்வாக இரண்டு கவிதைகள்.தமிழில் செய்தேன்.       ...