பல வருடங்களுக்கு முன்னால் மதுரையில் சார்லி சாப்ளின் திரைப்பட விழா ஒரு வாரம் நடந்தது. மாப்பிள்ளை விநாயகர் என்ற தியேட்டர். City Lights, The Great Dictator Modern Times என்று வரிசையாக சாப்ளின் படங்கள். இறுதி நாளன்று Limelight என்ற திரைப்படம். அது மட்டும் முழுக்க முழுக்க பேசும் படம். The Great Dictator ல் கொஞ்சம் பேச்சு உண்டு. ஏனைய படங்கள் முழுக்க முழுக்க மெளனப் படங்கள். இந்த விழாவில் ஒரு படத்தைக் கூட தவறவிடவில்லை. நானும் நண்பர் ராமச்சந்திரனும். இன்று வாட்ஸப்பில் The Great Dictator என்ற படத்தில் சாப்ளின் பேசும் வசனத்தின் எழுத்து வடிவத்தை பதிவு செய்து அனுப்பியிருந்தார். ஏறக்குறைய அதே சமயத்தில் நானும் சாப்ளினை நினைத்தபடி இருந்தேன். இந்த தற்செயல் வியப்பு அளித்தது. இன்று 16 ஏப்ரல் சாப்ளின் பிறந்த தினம் வேறு. நான் மேலே குறிப்பிட்ட சாப்ளின் திரைப்பட விழாவிற்கு முன்னரே பார்த்திருந்த திரைப்படம் City Lights. சாப்ளினை முதன் முதல் அறிந்தது இந்தத் திரைப்படம் மூலமாகத்தான். மூக்குக்கு கீழே வித்தியாசமாக மீசை. தலையில் தொப்பி. இறுக்கமான அளவில் சிறிய சட்டை மற்றும் கோட். தொளதொள பேண்ட். பழைய ஷூ. க...