நடனத்திற்குப் பிறகு (After the Dance) டால்ஸ்டாய் எழுதிய கதை. அதன் துவக்க வரியை மேலே பாருங்கள். இந்தக் கதையைச் சொல்பவர் இவான் வாஸிலிவிச். தனது இளமைப் பருவத்தில் நடந்த சம்பவத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் அப்போது பல்கலைக்கழக மாணவன். ,படிப்பு, பனிச்சறுக்கு விளையாட்டு, குதிரையேற்றம், நண்பர்கள், இளமை,கொண்டாட்டம் இவையே வாழ்க்கை. ஒரு சமயம் நடன விருந்துக்குச் செல்கிறார். பிரபுக்களும் படைத் தளபதிகளும் மாதர்களும் நிறைந்த அறை. காலரியில் இசைக்குழு. தின்பதற்கு ஏராளமாய் பண்டங்கள். நதி போல வழிந்து ஓடும் ஷாம்பெயின். ஆனால் இவான் வாஸிலிவிச்சுக்குக் காதலின் போதை மட்டுமே ஏறியிருந்தது. காரணம் மெல்லிய தேகமும் உயரமும்,, இனிமையும் கனிவும் ததும்பும் கண்களும் உடைய வரின்கா. செலுத்தப் பட்டவர் போல் வலியச் சென்று அவள் கைகளைப் பற்றி நடனம் ஆட அழைக்கிறார். இணக்கத்தோடு அழைப்பை ஏற்ற வரின்கா அவரோடு இணைந்து ஆடுகிறாள். அறை முழுதும் பரவி சுழன்று சுழன்று ஆடுகிறார்கள். வெள்ளை உடை அணிந்த அவளது அண்மை வாஸிலிவிச்சை வேறு ஒர் உலகத்திற்கு இட்டுச் செல்கிறது. இடையினில் கைகளை வளைத்தும் தோள் மீது கை வைத்தும் சிறி...