Skip to main content

Posts

Showing posts with the label சினிமா

மழையோடு நடந்து

 A walk in the spring rain என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். அது தற்செயலாக நடந்தது. தலைப்பிலே ஒரு கவிதை இருப்பது போல தோன்றியது. ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம் அது.  இந்தப் படம் பார்க்கும் வரை இன்கிரிட் பெர்க்மன் என்ற பெண்மணியைப் பற்றித் தெரியாது. A walk in the spring rain 1970ம் ஆண்டு வந்திருக்கிறது. இன்கிட் பெர்மன் இந்தப் படத்தில் தோன்றும் போது ஐம்பது வயதைக் கடந்து விட்டிருந்தார். திரைக்கதை என்னவென்றால் பெர்க்மனின் கணவர் ஒரு புத்தகம் எழுதுகிறார். அதற்கான தனிமை வேண்டி நாட்டுப்புறப் பகுதிக்கு வருகிறார்கள். வளர்ந்த மகளை ஊரில் விட்டு விட்டு. பெர்க்மன் கணவர் புத்தகம் எழுத உதவிகள் செய்கிறார். அன்டனி க்வின் அவர்கள் தங்குவதற்கு ஏற்ற வசதிகள் செய்து தருகிறார். பெர்க்மன் இவருடைய எளிய கிராமியப் பண்புகளால் கவரப்படுகிறார். இயற்கையோடு இயைந்து இருக்கிறது அந்த மனிதனின் வாழ்வு. அவனால் சின்னச் சின்னச் சந்தோஷங்கள் வாய்க்கிறது. உள்ளங்கைகளில் அணில் குஞ்சின் குறுகுறுப்பை உணர்வது போல. அழகழகாய் ஆட்டுக் குட்டிகளை கைகளில் ஏந்துவதைப் போல. அந்த நல்ல பெண்மணி இந்த மனிதனிடம் பழகுவதில் ஆர்வம...

மதிலுகள்

  வைக்கம் முகமது பஷீர். இந்தப் பெயரை நினைத்த மாத்திரம் எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானை இருந்தது என்ற புத்தகத் தலைப்பு ஞாபகம் வரும். பல வருடங்களுக்கு முன்னால் புத்தகக் கடையில் இந்தப் புத்தகத்தை புரட்டி இருக்கிறேன். ஆனால் வாங்கினேன் இல்லை. பஷீர் மலையாளத்தில் எழுதியது தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது. தொண்ணூறுகளில் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய மதிலுகள் என்ற திரைப்படத்தை தூர்தர்ஷனில் ஒளிபரப்பினார்கள். பார்த்தேன். அற்புதமான படம். ஆகஸ்ட் புரட்சியில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசு  கைது செய்து சிறை வைத்த ஒருவனின் கதைதான் மதிலுகள். அது வைக்கம் முகமது பஷீரின் கதை.  பஷீர் ஏனைய அரசியல் கைதிகளோடு சிறையில் இருக்கிறார். ஜெயிலர், ஜெயில் உயரதிகாரி அவரது மனைவி எல்லோரும் பஷீரின் தீவிர வாசகர்கள். அதனால் சிறை வாசத்தில் அவருக்கு சலுகைகள் பல உண்டு. மீன் துண்டு கூடுதலாக சோற்று உருண்டை, பீடி இதெல்லாம் எத்தனை பெரிய சலுகைகள். பஷீருக்கு மிகவும் கடினமான வேலைகள் சிறையில் இல்லை. அவருக்குப் பிடித்த மாதிரி பல வகை ரோஜாப் பதியன்களை நட்டு நீரூற்றி வருவது அவரது வாடிக்கை.  அவ்வப்போது அவரை ஒத்த அரசியல் கைதிகளோ...

கண்கள் செய்து விட்ட மாயம்

பட்னா நகரில் ஓரு நகலச்சகத்துக்கு நான் போவது உண்டு. அதன் உரிமையாளர் பெயர் ஆன்கிட். இளைஞன். அவன் அமர்ந்திருக்கும் மேசை நாற்காலிக்குப் பின்னால் அளவில் பெரிதான நிழற்படம் ஒன்று சுவரில் ஒட்டப்பட்டிருக்கும். அது மதுபாலாவின் படம்.  கனவில் மிதக்கும் கண்கள். கன்னங்களின் மீது விளையாடும் கூந்தல் இழைகள். சற்றே பிரிந்த உதடுகள். சிறிய பற்கள் பாதி தெரிந்தும் தெரியாமலும். அந்த கறுப்பு வெள்ளைப் படம் காண்பவரைக் கவரும் விதமாக இருந்தது. காலங்கள் எல்லாம் கடந்தும் அந்தக் கண்களும் உதடுகளும் உயிர் பெற்று வருவது போல ஒரு மயக்கம் தோன்றியது. நான் ஆன்கிட்டைக் கேட்டேன். உனக்கு மதுபாலாவைப் பிடிக்குமா என்று.  ஜீ(ஆமாங்க) என்று வெட்கத்துடன் சொன்னான். யாருக்குத் தான் அவரைப் பிடிக்காது என்று நினைத்துக் கொண்டேன். பேசும் படம் என்று ஒரு பத்திரிக்கை உண்டு. அது ஒரு சினிமாப் பத்திரிக்கை. அந்தப் பத்திரிக்கையின் பழைய இதழ்களின் தொகுப்பு அழகாக பைண்டு செய்யப் பட்டு கிராமத்து வீட்டில் இருக்கும்.   எட்டு ஒன்பது வயதில் விடுமுறைக்குச் செல்லும் போது பார்க்கக் கிடைக்கும். காகிதங்கள் வழவழப்பாக இருக்கும். அச்சு நல்ல தரத்த...

மரம் அறியும்

  I carry inside myself my earlier faces, as a tree contains its rings.                                          Tomas Transformer மரங்கள் எப்படியாவது கவர்ந்து இழுத்து விடுகிறது. நடை பழகும் காலை நேரங்களில் பெரிய பெரிய மரங்களைப் பார்த்தபடியே நின்று விட நேர்கிறது.மரத்தின் கீழே அமர்ந்து கண்மூடி அசையாமல் எவரேனும் இருந்தால் அவரும் மரமே என்றே தோன்றுகிறது. மாலை நேரங்களில் இள வயது ஆணும் பெண்ணும் மரத்தடியில் தான் பேசுகிறார்கள். என்ன ஒரு பேச்சு. தீராத பேச்சு. மரத்தின் இலைகள் ஒன்றுடன் ஒன்று பேசுவதைப் போல. மரத்தடியில் தான் கெளதமனுக்கு ஞானம் பிறந்தது. பின்பு அவர் புத்தர் ஆகிவிட்டார். அவர் பல நாட்கள் அலைந்து திரிந்தார். மனிதர்கள் துக்கத்தில் வீழ்ந்து அல்லல் படுகிறார்கள். இதைத் தீர்க்க வழி ஏதும் உண்டா என்றே அவருக்குச் சிந்தனை.  பல நாள் அலைச்சல். பல நாள் பசி. சுருண்டு விழுந்து விடுகிறார். அப...

சந்தேகத்தின் நிழல்

  சுஜாதா எழுதிய ஒரு  கதை ஒரு விபத்தின் அனாடமி. பல வருடங்களுக்கு முன்னால் படித்திருக்கிறேன். விபத்து ஒன்று நடக்கிறது. ஹிட் அண்டு ரன் (Hit and run) கேஸ். குற்றவாளியை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பது கதை. அது சுஜாதாவின் ஆரம்பகாலக் கதைகளில் ஒன்று. அனாடமி என்ற வார்த்தையை அறிந்தது மேலே சொன்ன கதையைப் படிப்பதற்கும் பல வருடங்கள் முன்னால்.  மதுரை மருத்துவக் கல்லூரிக்கு பள்ளி மாணவர்கள் ஒரு கூட்டமாகச் சென்றோம்.அங்கே ஒரு கல்விக் கண்காட்சி. ஒவ்வொரு துறையாக அழைத்துச் சென்றார்கள்.அதில் ஒர் துறை அனாடமி பற்றியது. அனாடமி என்றால் உடற்கூறு இயல் என்று பின்புதான் தெரிந்தது. அந்த அறையில் ஒரு உயிரற்ற உடல் இருந்தது. நடுத்தர வயது மதிக்கத்தக்க மனிதனின் உடல். கைகளில் ரப்பர் உறை அணிந்திருந்த ஒரு அண்ணன் உடற் பாகங்களைச் சுட்டிக் காட்டி ஏதேதோ விளக்கம் சொல்லியபடி இருந்தார். மிகச் சமீபமாக Anatomy of a fall என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப் பட்ட படம். இதை இயக்கியவர் ஜஸ்டின் ட்ரட்.  இதை டைப் அடிக்கும் போது சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது இவருக்குக் கிடைத்திருக்கிறது. ...

நினைவுகள் உலர்ந்து போகும்

ஷைலஜா திடீரென்று  சொன்னாள். வெங்குலாவுக்குப் போக வேண்டும். முந்தைய தினம் தான் விருப்ப ஓய்வு பெற்றிருந்தாள். அவளுக்கு குடும்ப நீதிமன்றத்தில் மண விலக்குப் பிரிவில் வேலை. கணவர் தீபாங்கருக்கு ஒன்றும் புரியவில்லை.  ஏன் என்று  கேட்டதற்கு நான் ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அங்கு படித்தேன். உடனே சென்று அந்த ஊரைப் பார்க்க வேண்டும். நாளை எனது நிலைமை எப்படி ஆகும் என்று சொல்ல முடியாது என்கிறாள்.  மறுநாளே ரயிலைப் பிடிக்கிறார்கள். வெங்குலா ஒரு அழகிய ஊர். கொங்கன் கடற்பகுதியில் அமைந்த ஊர்.  தென்னையும் வாழையும் இன்ன பிற மரங்களும் செழித்து வளர்ந்திருக்கும் ஊர். ஷைலஜாவிற்கு சமீபமாக மறதி ஏற்படுகிறது. செய்ய வேண்டிய சின்னச் சின்ன விஷயங்கள் மறந்து விடாமல் இருக்க டைரியில் குறித்து வைக்க வேண்டியிருக்கிறது. எப்போதும் அவள் கைப்பையில் அந்த டைரி இருக்கிறது. அது ஒரு நரம்பு சம்பந்தமான கோளாறு. Dementia. தனது நிலைமை அவளுக்குப் புரிகிறது. பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற அதுவும் ஒரு காரணம்.  நினைவுகள் உலர்ந்து மறைந்து விடுமா? வெயிலில் ஈரம் காய்ந்து மறைந்து விடுவது போல. இந்த நில...

ஜானி

 ஜானி என்று ஒரு திரைப்படம் 1980ம் வருடம் வெளிவந்தது. மகேந்திரன் இயக்கம். .  ஜானி என்ற திரைப்படம் ஒன்றும் காவியம் அல்ல. அது ஒரு மென்மையான உணர்வுக் கோலம்.  குறிப்பாக பாடகி அர்ச்சனா (ஸ்ரீதேவி) ஜானி (ரஜினி) சம்பந்தப்பட்ட காட்சிகள் . இளையராஜா என்ற கலைஞன் தொட்டுச் சென்ற  புதுப்புது இசைப் பரிமாணங்கள்.  அது ஒரு காலம். அது ஒரு விதமான திறமைகளின் தற்செயலான சேர்க்கை. அந்திச் சூரியன் விழும் பொழுது வானில் வந்து விழும் வண்ணக் கோடுகள் போல. ஜானி என்ற திரைப்படத்தைப் பார்த்தேன் அது வெளியான போது.  மீண்டும் பாரத்தேன்.  சில வருடங்கள் சென்ற பின் மறுபடியும் பார்த்தேன். ஏன் என்று விளக்க முடியுமா?  இளமை தரும் பரவசமும்  மன வெழுச்சியும் யாவரும் அனுபவித்தது தானே? ஒரு சின்னக் காணொளி

மிலன் நகரில் ஒரு அற்புதம்

  ஒரு சின்னப் பொந்து போதும் தங்கிட  அங்கேயே உறங்கி விழ ஒரு சின்னத் துண்டு நிலம் போதும் வாழ்ந்திட அங்கேயே மடிந்து விட ஓரு ஜதை காலணி காலுறைகள்  மென்றிட  ஓர் துண்டு ரொட்டி  இதுவே நாங்கள் வேண்டுவது நாளைய தினத்தை நம்புதற்கு  மிலன் நகரில் ஓர் அற்புதம்  (Miracle in Milan) என்று ஓரு இத்தாலியத் திரைப்படம். இதில் மேலே சொன்ன பாடல் வரும்.  Bicycle Thieves என்ற படத்தை இயக்கிய விட்டோரியா டி சிகா தான் இந்தப் படத்தின் இயக்கம். ரியலிஸம் தான் விட்டோரியா வின் முத்திரை என்றாலும் இந்தப் படத்தில் கொஞ்சம் ஃபான்டஸியும் கலந்திருப்பது ஒரு மாறுபட்ட திரை அனுபவத்தைத் தருகிறது.  லோலட்டா முதிய பெண்மணி. தனியே வசித்து வருகிறாள். ஒரு நாள் தான் பயிரிட்டிருந்த முட்டைக்கோஸ் செடிகளுக்கு நடுவே ஒரு குழந்தையைப் பார்க்கிறாள். எடுத்து வளர்க்கிறாள். அவன் வளர்ந்து பையன் ஆகிறான். அவனுக்கு வாய்ப்பாடு சொல்லித் தருகிறாள். ஒருநாள் இறந்து போகிறாள். பையன் அனாதை இல்லத்தில் வளர்கிறான். வாலிபனாக வெளியே வருகிறான். அவன் பெயர் டோடோ. சிரித்த முகமும் உதவி செய்யும் குணம் உடையவனாகவும் இருக்கிறான். எனவே ...

அன்றே அப்போதே வீடு

  வீடென்று எதனைச் சொல்வீர்? அது இல்லை என் வீடு ஜன்னல் போல் வாசல் உண்டு எட்டடிச் சதுரம் உள்ளே பொங்கிட மூலை  ஒன்று புணர்வது மற்றொன்றில் நண்பர்கள் வந்தால் நடுவிலே குந்திக் கொள்வர் தலை மேலே  கொடிகள் ஆடும் கால்புறம் பாண்டம் முட்டும் கவி எழுதி விட்டு செல்ல கால் சட்டை மடித்து வைக்க வாய் பிளந்து வயிற்றை எக்கிச் சுவரோரம் சாய்ந்த பீரோ அது மாலன் எழுதிய கவிதை. எண்பதுகளில் வாசித்திருக்கிறேன். அது மாலன் சாவி பத்திரிக்கையில் எழுதிய சிறுகதையின் துவக்க வரி. சிறுகதையின் தலைப்பு " கல்லுக்குக் கீழும் பூக்கள்".  எந்திரமாகிப் போன மனித வாழ்க்கை. அதில் கொஞ்சம் போல கவிதை.   சுமைகள் வந்து அழுத்தும் நடுத்தர வர்க்க வாழ்க்கை. அதில் துளியூண்டு ரசனை. கதையைச் சொல்லும் "இவன்" காலைப் பனியில் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிறான். தண்டவாள இரும்புக்கும் குவிந்திருக்கும் சரளைக் கற்களுக்கும் இடையே நீல மலர்கள் மலர்ந்து கிடப்பதைப் பார்க்கிறான். இது தான் கதை.  "மனே" என்று ஒரு கன்னடத் திரைப்படம். மனே என்றால் வீடு. கிரீஷ் காசரவல்லி இயக்கம். நசிருதீன் ஷா மற்றும் தீப்தி நாவல் நடித்திருந்தனர்.  தேசிய விர...