நான் வேலைக்குப் சேர்ந்த புதிது. ஒரு புதிய திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் இரண்டு பஸ் மாறி கம்பம் செல்ல வேண்டி இருந்தது. கூட வேலை பார்க்கும் நண்பர்களுக்கும் சினிமா பார்ப்பதில் ஆர்வம் மிகுந்து இருந்தது. இளமை நுரைத்து வரும் பானமாக இருந்தது. எனவே எதிலும் பெரிய சிரமம் இல்லை. கம்பத்தில் கிரஸென்ட் என்று ஓரு தியேட்டர் இருந்தது. அங்கே "பகலில் ஒரு இரவு"என்ற படம் ரிலீஸ் ஆகியிருந்தது. ஸ்ரீதேவி நடித்த படம். எனவே எல்லோரும் போவது என்று முடிவாயிற்று. எந்தத் திரைப்படம் ஆனாலும் அதில் ஆழ்ந்து விடுவது எனது பழக்கம். இந்தப் படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே அது ஏற்கனவே பார்த்த படம் போலிருந்தது. ஆலிங்கனம் என்ற மலையாளப் படத்தின் மறு ஆக்கம் என்று புரிந்தது. என்றாலும் இந்தப் படத்தின் பாடல்கள் கேட்கும் போதே ஒரு மாறுபட்ட உணர்வைத் தந்தது. "இளமை என்னும் பூங்காற்று" என்ற பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது. பின்னும் ஒரு பாடல். அதைக் கேட்டு அசந்து போனேன். ஒரு பாடலின் பல்லவிக்கும் சரணத்திற்கும் ஊடே வரும் இசை வெறும் குரல்களாக மட்டுமே இருக்க முடியுமா? முடியும் என்று காட்டியிருந்தார் இளையராஜா. இசையமை...