Skip to main content

Posts

Showing posts from December, 2021

தேவன் வருகிறார்

  நேற்று கூரியரில் ஒரு பார்ஸல் வந்தது. அது எதிர் வீட்டுக்கானது. அவர்கள் எல்லோரும் ஊருக்குப் போய் விட்டார்கள். கூரியர்காரர் என் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினார். திறந்தேன். என்னிடம் அலைபேசியை நீட்டினார். பேசியவர் எதிர் வீட்டு மனிதர். பார்ஸலை வாங்கி வைத்திருக்குமாறு வேண்டினார். அளவில் பெரிய அந்த பார்ஸல் எனது வீட்டில் நிறைய இடத்தை எடுத்துக் கொள்ளுமே என்று கவலைப் பட்டார். பரவாயில்லை நான் வாங்கி  வைத்திருக்கிறேன் என்று சொன்னேன்.  “I think we have enough space in our heart for each other”. இந்த வார்த்தையை நான் சொல்லவில்லை. ஏனென்றால்  இருபது மணி நேரம் கழித்துத்தான் இந்த வார்த்தை தோன்றியது. போகட்டும். நான் அவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தாவது சொல்லியிருக்கலாம். மறந்து போனேன். பிரியமோ வாழ்த்தோ அப்போதைக்கப்போது சொல்லி விடுதல் உசிதம். தேவகுமாரன் தொழுவத்தில் பிறந்தார். ஊர் விட்டு  இந்த ஊர் வந்தனர் அவரது அன்னையும் பிதாவும்.  கடுங்குளிர். எங்கும் இடம் இல்லை. தொழுவம் தான் கிடைத்தது. முன்னதாக ஒரு தேவதை அன்னை மேரியின் முன்னே தோன்றி உனக்கொரு மகன் பிறப்பான். அவனே யூதர்களின் ராஜா....

வெள்ளிவீதியார்

 பொன்னகரம் என்று ஒரு கதை. புதுமைப்பித்தன் எழுதியது. கணவன் கடுமையான நோய் கண்டு படுத்த படுக்கை. வேலைக்குப் போனால் தானே கூலி?  சிறு குழந்தை பசியில் அழுகிறது. வறுமை. பட்டினி உயிரைத் தின்கிறது.அந்தப் பெண் முடிவெடுக்கிறாள். கதையின் இறுதி வரி இப்படி இருக்கும். “கற்பு கற்பென்று கதைக்கிறீர்களே ஐயா?  இதுதான் பொன்னகரம்.“காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்து கற்பு கற்பென்று உலகோர் கதைக்கின்றாரே” என்பது பாரதியின் வரி. அதை எடுத்தாண்டிருப்பார் புதுமைப்பித்தன். " கதைக்கிறீர்களே? இதுதான் ஐயா பொன்னகரம் "என்ற கேள்வியின் சாடல் தொந்திரவு செய்வதாய் இருக்கும். கேலியும் துயரமும் கலந்த பாவத்தோடு புதுமைப்பித்தனின் முகம் முன்னால் தோன்றும்  மதுரையில் பொன்னகரம் என்று ஒரு பகுதி உண்டு. அங்கு வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேனிலைப் பள்ளி இருக்கிறது. பள்ளிகளுக்குப் பெயர் இருப்பது இயல்பு. பெரும்பாலும் பள்ளிகள் நிறுவனர் பெயராலேயே அழைக்கப்படும். வெள்ளிவீதியார் நிச்சயமாக இந்தப் பள்ளியின் நிறுவனர் அல்லர். அவர் சங்ககாலக் கவி. பெண் கவி. இந்தப் பெண்மணியின் கவி உள்ளத்தை என்னவென்று சொல்வது?  அவர் ப...

நானும் ஒரு பூ நானும் ஒரு தீ

   குஞ்ஞுண்ணி கவிதைகள். இந்தப் புத்தகம் மகிழகம் வெளியீடு.இது மதுரைப் பதிப்பகம். விலை பன்னிரண்டு ரூபாய். மலையாளக் கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் பா.ஆனந்தகுமார். முப்பது வருடங்களுக்கு முன்னால் வாங்கியிருக்கிறேன். பல ஊர்களுக்கு என்னோடு பயணம் செய்து தப்பிப் பிழைத்திருக்கிறது. புத்தக அலமாரியைக் குடையும் போது கிடைத்தது. மறுபடியும் வாசித்துப் பார்த்தேன். ஒரு வரியில் கவிதைகள். இரண்டு வரிகளில். நான்கு வரிகளில். ஐந்து வினாடிகள். அதிக பட்சம் பத்து வினாடிகளில் கவிதையைப் படித்து விட முடிகிறது. ஆனால் அதன் பொருள் மணியின் கார்வையைப் போல் மனதில் நீள்கிறது. நீண்டு ஒலிக்கிறது. ஊற்றுத் தண்ணீரைப் போல் மெல்லப் பெருகி வருகிறது. விவரிப்புகளைக் கடந்து நின்று நம்மைக் கண்டு பரிகசிக்கிறது. எத்தனை எளிமையோடு கூடி வருகிறது. ஆவியிலே எளிமையுடையவன் பாக்கியவான் என்பது பைபிள் வாசகம். வார்த்தையை வசப்படுத்துவோன் வலியோன் என்கிறார் குஞ்ஞுண்ணி. சில ஒரு வரிக்கவிதைகள் பழமொழி போலத் தொனிக்கின்றன. இனி கவிதைகளைப் பார்ப்போம். நாட்டின் அகம் நாடகம். இது ஒரு கவிதை. ஒரு வரியில் முடிந்து விடுகிறது. பின்னால் மட்டும் மடங்குகி...

என்னைத் தெரியுமா

  ஜான்ஸி ராணி பூங்கா என்று மதுரையில் ஒரு இடம் உண்டு. மேல ஆவணி மூல வீதியும் நேதாஜி ரோடும் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது. அது பூங்காவாக இருந்ததும் உண்டு.  பின்னர் கார்கள் நிறுத்தும் இடமாக ஓரு புறமும் நவீனக் கழிப்பறையாக மறுபுறமும் ஆனது.  இப்போது ஸ்மார்ட் சிடி திட்டத்தில் அது ஜான்ஸி ப்ளாஸா ஆகப் போகிறது என்று  செய்தி படித்தேன். குதிரை  வண்டிகள் மதுரையில் புழங்கிய காலம். அங்கே ஒரு தண்ணீர் தொட்டி இருக்கும். குதிரைத் தொட்டி என்று நாங்கள் அழைப்போம். குதிரைகளுக்கு சேணம் கண்களுக்குப் பட்டை கட்டாயம். சில குதிரைகளுக்கு இப்போதெல்லாம் பொருட்காட்சியில் கிடைக்கும் நீளமான பஞ்சு மிட்டாய் போன்ற ஒன்றை நெற்றிப் பட்டையில் செருகி இருப்பார்கள். குதிரையின் ஓட்டத்திற்கு ஏற்ப அது அசைந்தாடுவது பார்க்க அழகாக இருக்கும்.  குதிரை வண்டிக்கு லைசென்ஸ் உண்டு. மேலே குறிப்பிட்ட குதிரைத் தொட்டியில குதிரைகளுக்கு தண்ணீர் காட்டுவார்கள். குதிரைகளின் ஆபரணங்கள் களையப்பட்டு அங்கே குளிப்பாட்டுவதும் உண்டு.  சிறுவர்களான நாங்கள் அங்கே நின்று வேடிக்கை பார்ப்பது வாடிக்கை. குதிரைச் சாணமும் புல் வாசனையும...

விழியிலே மின்னல்

  மழை பெய்கிறது. காற்றடிக்கின்றது. இடி குமுறுகின்றது. மின்னல் வெட்டுகின்றது. புலவர்களே மின்னலைப் பாடுவோம். வாருங்கள். மின்னல் ஒளித் தெய்வத்தின் ஒரு லீலை- ஒளித் தெய்வத்தின் ஒரு தோற்றம். அதனை யவனர் வணங்கி ஒளி பெற்றனர். மின்னலைத் தொழுகின்றோம்  அது நம்மறிவை ஒளியுறச் செய்க. மேகக் குழந்தைகள் மின்னற்பூச் சொரிகின்றன. மின் சக்தி இல்லாத இடமில்லை. எல்லாத் தெய்வங்களும் அங்ஙனமே. கருங்கல்லிலே, வெண்மணலிலே, பச்சை இலையிலே, செம்மலரிலே, நீல மேகத்திலே, காற்றிலே, வரையிலே- எங்கும் மின்சக்தி உறங்கிக்கிடக்கின்றது. அதனைப் போற்றுகின்றோம். நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக. நமது நெஞ்சிலே மின்னல் விசிறிப் பாய்க. நமது வலக்கையிலே மின்னல்  தோன்றுக. நமது பாட்டு மின்னலுடைத்ததாகுக. நமது வாக்கு மின்போல் அடித்திடுக. மின் மெலியதைக் கொல்லும். வலியதிலே வலிமை சேர்க்கும். அது நம் வலிமையை வளர்த்திடுக. ஒளியை, மின்னலை, சுடரை மணியை, ஞாயிற்றை, திங்களை, வானத்து வீடுகளை, மீன்களை– ஒளியுடைய அனைத்தையும் வாழ்த்துகின்றோம். அனைத்தையும் வாழ்த்துகின்றோம். ஞாயிற்றை வாழ்த்துகின்றோம். சொற்கள். பாரதியின் சொற்கள். சொல் ஒன்று வேண்டு...

உருகும் பனியோடு

   டாக்டர் ஷிவாகோ. போரிஸ் லியோனிடோவிச் பாஸ்டர்நாக் எழுதிய ஆகச்சிறந்த கதை. பாஸ்டர்நாக் மாஸ்கோவில் 1890 ம் வருடம் பிறந்தார். அம்மா பியானோ வாசிப்பவர். இதனால் தானோ என்னவோ ஆர்வத்துடன் இசையைத் தீவிரமாகப் பயின்றார் பாஸ்டர்நாக். பின்னர் 22 வயதுக்குப் பின் இசையைக் கைவிட்டு தத்துவம் பயில ஆரம்பித்தார்.ஒரு வருடம். தத்துவத்தை விட்டு விட்டு கவிதை எழுதுவதற்கு தன்னை முழுவதுமாக ஒப்புவித்தார்.இரண்டு கவிதைத் தொகுதிகள். 1912 மற்றும் 1917.  ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது மற்றும் முப்பதுகளில் புனைகதைகள் எழுத ஆரம்பிக்கிறார். ஷேக்ஸ்பியர் மற்றும் கதேயை இவர் மொழிபெயர்த்தது ரஷ்ய மொழிக்குப் பெரும் கொடையாக அமைந்தது. நாம் மேலே குறிப்பிட்ட டாக்டர் ஷிவாகோ 1957 58 ல் மேலை நாடுகளில் பதிப்பைக் கண்டது. பாஸ்டர்நாக் 1958 ல் நோபல் பரிசை ஏற்றார். தொடர்ச்சியான பிரச்சாரம். துரத்திய ஏச்சுக்கள். நோபல் பரிசைத் துறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 30 மே 1960ல் மறைந்தார். டாக்டர் ஷிவாகோ நாவல் முடிவில் பிற்சேர்க்கையாக " டாக்டர் ஷிவாகோ கவிதைகள்" என்ற தலைப்பில் இருபதுக்கும் அதிகமான கவிதைகள். அற்புதம். மாதிரிக்கு ஒரு கவிதைய...

மறதி என்னும் மலர்

  இஸுமி ஷிகிபு ஜப்பானியப் பெண் கவி. இவர் பிறந்து வாழ்ந்து மறைந்தது பத்தாவது  பதினோராம் நூற்றாண்டுக் காலங்களில்- இஸுமி என்ற மாகாணத்தின் ஆளுநரை மணக்கிறார். இஸுமி இவர் பெயரோடு இப்படித்தான் ஒட்டிக் கொள்கிறது. அவருடைய கணவர் பெயர் டச்சிபானா. திருமணம் ஆகும்போது இஸுமி ஷிகிபுவுக்கு வயது இருபது. கணவர் இவரை விட பதினேழு வயது பெரியவர். சில நாட்களுக்குப் பின் திருமணம் முறிகிறது. பின்பு ஒரு ராஜகுமாரனை மணக்கிறார். பின்பு.... சரி.. இவருடைய திருமணங்களை விட்டு விட்டு இவர் எழுதிய கவிதைகளைப் பார்க்கலாம். காதல் வயப்பட்ட மனம் இவருடையது. அதே நேரம் அந்த மனத்தில் ஒரு புத்தன் இருக்கிறான். புத்தன் என்றால் விழிப்பு நிலை அடைந்தவன் அல்லவா?   மடை தாண்டிப் பெருகும் காதலும் விழிப்பும்  தரிசனமும் இவர் கவிதைகளில் விரவியிருக்கிறது. இனி கவிதைகள். ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். பொழிவு நீண்ட மழை  எங்கும் எப்போதும் பொழிந்து கொண்டிருப்பதையே நினைந்து கொண்டிருக்கிறாய் என் இதயத்திலும் மழை பொழிகிறது நீண்ட துயர நாட்கள் நிலவைப் பார்த்து ஆளில்லாத அவளது வீட்டில் நிலவைப் பார்த்தபடி இருக்கிறா...

சாகசம் விரும்பு

  அயன் பிளமிங் என்ற பெயரை நான் கேள்விப் பட்டபோது எனக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். “The Man with the golden gun” என்ற புத்தகம் கண்ணில் பட்டது. யார் வாங்கி வைத்தார்களோ தெரியவில்லை. பிரபலமான  வார இதழ்களில் வந்திருந்த கதைகள் கல்கி நா.பா.,அகிலன், ஜெகசிற்பியன், லட்சுமி, ராஜம் கிருஷ்ணன் இவர்கள் எழுதி பைண்டிங் தொகுப்பாக இருந்த தமிழ் கதைகள்  மட்டும் தான் அப்போது படித்திருந்தேன். ஆங்கிலப் புத்தகம் படித்ததில்லை. இந்தப் புத்தகத்தை எடுத்தேன் படிப்பதற்காக. மேலட்டை வழுவழு என்றிருந்தது. பக்கங்கள் ஒரு வித பழுப்பு நிறம். டீ டிகாக்‌ஷனில் தோய்த்து எடுத்தது போல. எடுத்துப் படித்தேன். சரளமாகத் தமிழ் நாவலைப் போல் கடக்க முடியவில்லை. கதை உலகம் புதிதாக இருந்தது. சாகசங்கள் நிரம்பி இருந்தது. ஜேம்ஸ் பாண்ட் 007, வந்தியத் தேவன், இளங்குமரன் இவர்களிடமிருந்து மாறுபட்டிருந்தார். உடைவாளை உருவவில்லை. துப்பாக்கியை அதை எங்கு மறைத்திருப்பாரோ தெரியாது, எடுத்து நீட்டுகிறார்.  கதையின் துவக்கம் திருப்பம் இறுதி எல்லாம் சுத்தமாக நினைவில்லை.  ஆனால் அந்த வாசிப்பு அனுபவம் புதிதாக இருந்தது. பிரமிப்பைத் தந்தது...