நண்பர் ராமநாதன் சில வங்கிச் சுற்றறிக்கைகளை விவாதிக்கும் போது “உபநிஷத்தா இருக்கு”என்று மெல்லிய குரலில் கூறுவார். புரியாமல் இருப்பதை அப்படிச் சொல்வார். தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலோ வேதாந்தம் என்று ஒரு பழைய பாடல் வரி உண்டு. எப்படியோ ராமநாதன் சொன்னது உபநிடதங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு உந்துதலாக இருந்தது. ‘த்த்வமஸி’ என்ற புத்தகம். சுகுமார் அழிக்கோடு மலையாளத்தில் எழுதியது. தமிழாக்கம் சாகித்ய அகாடமி வெளியீடு. இதைப் படித்தபோது சில விஷயங்கள் புரிந்தது. ஈசம், கதம், கேனம், தைத்ரீயம் என்றெல்லாம் உபநிடத்த்தின் பெயர்கள்.
ஈசோவாஸ்ய உபநிடதம் காந்தியைக் கவர்கிறது. வியப்பென்ன? தனது வாழ்நாள் முழுதும் சத்திய சோதனை செய்தவராயிற்றே?
‘ ஈசாவாஸ்யம்மிதம் ஸர்வம்’ என்ற மந்திரமும
‘ஹிரண்யமயம் பாத்ரேண
ஸத்யஸ்யாபிஹிதம் முகம்’ என்ற மந்திரமும் காந்தியைச் செலுத்துபவனவாய் இருந்தது. முன்னதன் பொருள் “இந்த உலகம் கடவுள்மயமானது”
இரண்டாவதின் பொருள் “சத்தியத்தின் முகம் தங்கப் பாத்திரத்தினால் மூடப்பட்டு இருக்கிறது”
ஆனால் நான் இப்போது சொல்லப் போவது கதோபநிடதத்தைப் பற்றி. காரணம் அதில் வரும் கதை. நசிகேதஸ். பாலகன். கேள்விகளால் நிரம்பியவன். தந்தை யாகம் செய்வதைப் பாரக்கிறான். தானமாக கொடுக்க இருக்கும் பசுக்களைப் பார்க்கிறான். எலும்பும் தோலுமாய் பால் சுரக்க வழியில்லாத பசுக்கள். தந்தையின் ஈனச் செயலைக் கண்டு பதைக்கிறான். “என்னை யாருக்குத் தானம் செய்யப் போகிறீர்கள்?” தந்தையை நோக்கி இவனது கேள்வி. ஒருமுறை இருமுறை கேட்டும் பதில் சொல்லாத தந்தை. மூன்றாவது முறையும் இந்தக் கேள்வி வந்ததும் வேகத்துடன் தந்தையின் பதில். “உன்னை எமனுக்குத் தருகிறேன்”. அவ்வளவில் அவன் கிளம்பி எமலோகம் செல்கிறான். ஒரு தழல் போல அவன் எழும்பி வருவதைக் கண்டு தேவரும் மற்றவரும் திகைக்கிறார்கள். நசிகேதஸ் எமலோகம் சென்ற போது எமன் அங்கு இல்லை. மூன்று இரவு. மூன்று பகல். அன்னம் தண்ணீர் இல்லாமல் அங்கேயே காத்து நின்றான் சிறுவன். மூன்று நாள் சென்றபின் எமன் திரும்பி வருகிறான். தனது இருப்பிடத்ததிற்கு வந்ந சிறுவனை மூன்று நாட்கள் நீரின்றி சோறின்றி காக்க வைத்தமைக்கு வருத்தம் தெரிவிக்கிறான். “மூன்று வரங்கள் என்னிடம் நீ கேட்டுப் பெறலாம் என்கிறான் மூன்று நாட்கள். மூன்று வரங்ககள். அவை என்ன?
பார்க்கலாம்.
நசிகேதஸ் கேட்ட மூன்று வரங்கள்
சிறுவன் கோரும் முதல் வரம். “என் தந்தை உள்ளம் அமைதி பெற்று என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” தந்தேன் என்றான் எமன்- இரண்டாவது வரம். மூப்பும் மரணமும் அணுகாத சொர்க்கத்ததிற்குச் செல்லும் வழி என்னவென்று சொல்லி அருள வேண்டும். சொர்க்கத்தை அடைவதற்கான யாகத்தின் வித்தையை எமன் உபதேசிக்கிறான். நசிகேதஸ் கேட்டுக்கொண்ட மூன்றாவது வரம். “மனிதன் இறந்த பிறகு ஆன்மா எஞ்சியிருக்குமா? தெளிவு படுத்த வேண்டும்” கேட்டவன் சிறுவன். அவன் தன்னம்பிக்கை எத்தகையது? சோதிக்க விரும்பினான் எமன். உனக்கு நீண்ட ஆயுள், பசுக்கள், அரச பதவி, எல்லா சுகங்களும் தருகிறேன். இதை மட்டும் கேட்க வேண்டாம் என்று வேண்டுகிறான். பாலகன் விடுவதாயில்லை. பதில் பெறுவதில் உறுதியாக இருக்கிறான். விவேகம் மிக்க சிறுவனுக்கு ரகசியமான வித்தையை எமன் உபதேசிக்கிறான்.
அது ஒரு வரியில் விளக்க முடியாத்து. சுருங்கியும் விரித்தும் வர்ணித்தும் விளங்க வைப்பது. ஆனமாவின் சுயரூபம் பிரம்மத்தை அடைவது.
வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து விடுபடுவது. இப்படிப் பலவாறாகச் சொல்லப்படுவது. புத்தியில் நிலை பெற்ற சேதனத்தை ஆன்ம யோகத்தின் வழியே எதிர் கொள்ள, சுகதுக்கங்களிருந்து விடுதலை கிடைக்கிறது.
ஆன்மா ஓங்காரத்திற்கு விஷயமாகிறது. அது பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. உடல் அழியும் போதும் அது நாசமடைவதில்லை.
இப்படிச் செல்கிறது எமனின் உபதேசம்.
சர் எட்வின் ஆர்னால்ட் மரணத்தின் ரகசியம் “The Secret of Death” என்ற பெயரில் கதோபநிடதத்தை மொழி பெயர்த்திருக்கிறார். எல்லாம் அற்புதமான கவிதைகள். மூலத்தின் சாரத்தைப் பிழிந்தெடுத்த கவிதைகள். அவற்றில் ஒன்றை ஆசை மேலிட மொழிபெயர்த்துள்ளேன். கீழே பார்க்கலாம்
கதோபநிடத்த்திலிருந்து…
அவன்
பேதமற்றவன்
இயற்கையோடு இசைந்தவன்
முடிவில்லா பேதங்களை ஆக்குவோன்
யாவற்றையும் விளைப்பவன்
யாவற்றையும் பெறுபவன்
அவன் பிரம்மம்
அவன் அறிவாகிய ஒளியைத் தருவானாக!
அவன் நுட்பமான அனைத்தையும் உரைக்கும்
காணப்படாத உயிர்
அவன் நெருப்பில் தழல்
கதிரவன்,நிலவு,கோள்கள்,இரவிகள்
இவற்றில் ஒளி
அவன் காற்றாய் வீசுகிறான்
அவன் அலைகளில் புரளுகிறான்
அவன் உலகை நிறைக்கிறான்
அவன் ஆண்;அவன் பெண்
அவன் யுவன்;அவன் யுவதி
அவன் புதிதாகப் பிறந்த மதலை
தடி மீது கையூன்றும் நலிவுற்ற பழையோன்
அவன் இருக்கின்ற எல்லாமும்
கருவண்டு, புலி, கயல்
சிவந்த விழியுடைய பச்சைப் பறவை
அவன் மரம், புல்
மின்னலைச் சூல் கொண்ட மேகம்
பருவங்கள், கடல்
அவனால் எல்லாம்
அவனுள் எல்லாம் தொடங்கி முடிவன
Edwin Arnold .. The Song of Death
தமிழில்
தி சந்தானம்

Elemai and aarumai
ReplyDeleteVedhanthamum thelivaga purikiradhu
ReplyDeleteகீதையின் சாரம் அழகாக இங்கே கோடிட்டு காண்பிக்க படுகிறது
ReplyDeleteநன்றி கண்ணன்
Delete