ரவீந்திர நாத் தாகூர் வங்காளம் தந்த ஒப்பற்ற மனிதர். கவி. காந்தியை மகாத்மாவாக
கண்டவர். காந்திக்கு இவர் குருதேவ். இருவரும் முரண்பட்டாலும்
தமக்குள் மேன்மையான உறவைப் பேணினர். முரண்பட்ட கருத்தைப் பகிர்ந்தாலே
சமூகத் தளங்களில் வெறுப்பு உமிழப்படும் காலம் இது. இப்போது இருவரையும் நினைத்தால் கணகளில் நீர் கசிகின்றது. தாகூர் கீதாஞ்சலி என்ற படைப்புக்காக
விடுதலை பெற்று உயர்ந்தெழுந்த ஆன்மாவின் உன்னதப் படைப்புகள் அவர்
கவிதைகளில். எனது தேர்வாகச் சில கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழ்
ஆக்கியிருக்கிறேன். மிஸ்டிக் (mystic) தனமை மிளிரும் கவிதைகள்.
1
நீ என் வாழ்க்கையின் ஆணி வேராக இருக்கிறாய்
ஒரு வேளை அதுதான் தவறா?
மறந்தவனாய் நான் நடக்கிறேன்
மலர்களை நான் புறக்கணிக்கிறேன் அல்லவா?
நடசத்திரங்களையும் கூட
எனினும் நான் சுவாசிக்கும் காற்றில்
அவை சுகந்தம் தருகின்றன
எனது மறதியின் பிழைகளை
ராகங்களால் நிரப்புகின்றன.
மறதிக் கடலின் மஹாஆழத்தில் நான்
என் நாளங்களில் உன் அலை அதிர்வுகள்
என் கணகள் உன்னைப் பார்ப்பதில்லை
நீ என் கண்களில் குடி புகுந்துள்ளாய்
நீதான் பசுமையில் பச்சை
நீலத்தில் ஊதா
உன்னில் என் மொத்த உலகின் இசைவு எல்லாம்
நான் அறியாமல்
வேறு யார் அறியாமலும்
எனது பாடல்கள்
உனது ராகங்களையே தொடுகிறது
நீயே கவியின் உள்ளத்தில் இருக்கும் கவி
நீ பிம்பம் அல்ல
எழுதிய ஓவியமும் அல்ல
ஒரு அறியாத புலரியில்
நீ என்னுடன் இருந்தாய்
பின்பு
இரவில் நான் உன்னை இழந்தேன்
இருட்டின் நடுவிலே
நான் அறியாத வண்ணம்
மீண்டும் மீண்டும்
நீ தென்படுகிறாய்
நீ வெறும் பிம்பம் அல்ல
எழுதிய ஓவியமும் அல்ல
2
நீ தன்னந் தனியாக இருந்த அன்று
நீயே கூட உன்னைப் பார்த்திருக்க முடியாது
எங்கும் யாருக்காகவும் ஆன
ஆர்வமான காத்திருத்தல் இல்லை
கணகள் அசும்பொழுகத்
தப்பிய காற்றின்
இக்கரைக்கும் அக்கரைக்குமான
அலைச்சலும் இல்லை
நான் வந்தேன்
உன் உறக்கம் முறிந்தது
தூரத்து சூனிய வெளியில்
ஒளி, மலர்களின் குதூகலமாய்
உடைந்து நொறுங்கியது
மலர்களையும் கனிகளையும் சொரிந்து
நீ என்னை முகிழ்க்க வைத்தாய்
என்னை உயர்த்திப் பிடித்து
நட்சத்திரங்களிலிருந்து நட்சத்திரத்திற்கு
எறியவும் செய்தாய்
பின்பு மடியில் ஏந்தினாய்
சாவின் கவசத்தில் என்னை மூடி
புதுப்புது வடிவங்களில்
என்னை வரவேற்றாய்
நான் வந்தேன்
உன் நெஞ்சகம் விம்மித் தணிந்தது
நான் வந்தேன்
உன் துயரும் வந்தது
நான் வந்தேன்
நெருப்பேறிய உன் உவகை வந்தது
ஒரு புயலாகிய வசந்தமும்-
வாழ்வையும் மரணத்தையும்
எதிர்த்துக் கிளர்ச்சி செய்தபடி
என்னைப் பார்த்துத் தடவி
நீ உன்னையே உணர்ந்தாய்
என் கண்களில் நாணம்
என் இதயத்தில் பயம்
ஒரு மெல்லிய திரை
என் முகத்தை மூடுகிறது
உன்னைப் பார்ப்பதற்கு ஒரு தடை
எனவேதான் என் விழிகளில் கண்ணீர்
இருப்பினும் இறையே!
என்னைக் காண்பதற்கான
உனது ஆவல் மீறுகிறது
அநாதி காலம் தொட்டு
இல்லை என்றால்
இந்தச் சூரியனுக்கும் நட்சத்திரங்களுக்கும்
என்னதான் பொருள்?
தி சந்தானம்
Comments
Post a Comment