அப்பொழுதெல்லாம் கிராமத்தில் நடந்து செல்லும் போது வழித்தடங்களில் முட்கள் குறுக்கிடும். கவனியாமல் நடந்தால் காலில் பாய்ந்து விடும். நெருஞ்சிமுட்கள் பல முனைகளில் கூராக இருக்கும். கொத்தாக அப்பிக் கொள்ளும்.கருவேல முள் பாய்ந்தால் கண்களில் நீர் வரும். ரத்தம் வந்துவிட்டால் ஒரு ஆறுதல். முள் உள்ளே தங்கி விட்டால் வேளியே எடுக்கும் வரை நோகும். எடுப்பது ஒரு பாடு. எடுக்கும போதும் வலி. பிள்ளைமனம் குத்திய முள் மீது கோபம் கொள்ளும். தைத்த முள்ளை உபாயங்கள் செய்து வெளியே எடுக்கும் வரை வேதனை தான்.
சச்சிதானந்தம் மலையாளக் கவிஞர். இரு மொழி ஞானம் கொண்டவர்.
மலையாளத்தில் எழுதிய கவிதைகளை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விடுவார். வேறு எங்கும் கிடைக்காத விடைகளை அவர் கவிதையில் தேடிக் கண்டறிவார். சமயங்களில் இவரது கவிதைகள் நெஞ்சைத் தைத்துவிடும்.
உண்மை அதைத்தானே செய்யும். கவிதையைப் பார்ப்போம்.
முட்கள் எனது மொழி
எனது இருப்பை
ரத்தம் தோய்ந்த தொடுகையால்
அறிவிக்கிறேன்
ஒரு காலத்தில்
இந்த முட்கள் மலர்களாக இருந்தன
ஏமாற்றும் காதலர்களை நான் வெறுக்கிறேன்
கவிஞர்கள் பாலையைக் கைவிட்டனர்
சோலைகளுக்குத் திரும்பிச் சென்றனர்
ஒட்டகங்கள்தான் இங்கு இருக்கின்றன
மேலும் வணிகர்களும்
எனது மலர்ச்சியை மிதித்து
மண்ணோடு மண்ணாகச் செய்தபடி
ஒவ்வொரு முள்ளுக்கும் ஒரு அரிய நீர்த்துளி போதும்
நான் வண்ணத்துப் பூச்சிகளை ஈர்ப்பதில்லை
ஒரு பறவையும் என்னைப் புகழ்ந்து பாடுவதில்லை
வறட்சிக்கு நான் பணிந்து போவதில்லை
நான் வேறொரு அழகைப் படைக்கிறேன்
நிலவொளிக்கு அப்பால்
கனவுகளின் இந்தப் புரம்
ஒரு கூரிய தைக்கின்ற இணை மொழி
****முட்கள் தைப்பதில்லை. நம்மோடு பேசவே செய்கின்றன. நாம் ஒரு போதும் அதை அறிவதில்லை.
தி சந்தானம்
Comments
Post a Comment