அந்தத் தேவாலயத்தின் பெயர் தூய பேதுரு ஆலயம்.வளாகத்தின் உள்ளே நுழைந்தேன். பேதுரு ஏசுவின் பன்னிரண்டு சீடர்களில் தலையானவர்
யூதாஸ் ஏசுவை காட்டிக் கொடுக்கிறான். மற்ற சீடர்கள் சிதறி ஓடி விடுவார்கள்.ஆனால் பேதுரு மட்டும் ஏசுவை பிடித்துச் செல்ல வந்தவர்களில் ஒருவன் காதை வெட்டி விடுவார். இப்படிப் பட்ட சீடரை நோக்கி ஏசு சொல்லுவார். " கோழி கூவுவதற்குள் நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்" அது அவ்வாறே நடக்கும். உள்ளே நுழையும் போது இத்தனையும் ஞாபகம் வந்தது
தேவாலயத்துக்குள்ளே இருக்கைகள் காலியாக இருந்தன.
அந்த வெறுமை இசைக் கோவைகளுக்கு இடையே நேரிடும் மெளனம்போலத் தோன்றியது. வலப்பக்கமாக இருந்த அறையில் மதிவாணன் இருந்தார்.
எழுதிக் கொண்டிருந்தவர் நிமிர்ந்தார்.. பெரிய விழிகள்.அகலப் பார்த்தார். பார்வை கனிவாயிற்று. வெண்பல் தெரியச் சிரித்தார் . எழுதியது போலப் புருவங்கள். பெரிய நெற்றி. மதிவாணன் பாதிரியார் அல்ல. எனது நண்பர். நண்பர்களைப் பார்ப்பதும் வார்த்தையாடுவதும் சுகம். குறிப்பாக வெறுமை விசிறியடிக்கும் கொரோனா காலங்களில். பலதும் பேசி பழைய நினைவுகளைப் பரிமாறிக் கொண்டோம். அபியைப் பற்றியும்.
1979. மதிவாணன் வங்கிப் பணிக்கு வந்து சேர்ந்தார். அவர் வருவதற்கு நான்கு மாதங்கள்முன்பே நான் அங்கு பணியில் இருந்தேன்.லா.ச.ராமாமிருத்த்தைப் பற்றி அவர் என்னுடன் பேசுவதற்கு அதிக காலம் பிடிக்கவில்லை. லா.ச.ராவின் அபிதா மற்றும் சில கதைகளைப் ஏற்கனவே படித்திருந்தேன். அப்படிப் படித்ததில் ஒரு கதை.அபூர்வ ராகம். அந்தக் கதை இப்படித் துவங்கும்.
“வீணையின் ஸ்வரக்கட்டுக்களை விருதாவாய் நெருடிக் கொண்டிருக்கையில்
திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வரஜாதிகள் புதுவிதமாய்க் கூடி
ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பது போல் அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாது முளைத்தாள்.” வார்த்தைகளா? ஒளிச் சிதறல்கள்!. ரத்தினக் குவியல்கள்!! என்னவென்று புரியாத உணர்வில் மனம் கிளர்ச்சியுற்று அலையும். சொற்கள் சுடும். சொற்கள் குளிர்ச்சி தரும். சொற்கள் அமைதியைக் குலைத்து விடும். சொற்கள் அமைதியைக் கொண்டு வந்து சேர்க்கும் சொற்கள். அம்மம்மா! லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் அப்படித்தான்.
இப்படியான லா,ச,ராவின் படைப்புகளை தனது முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்தார் அபி. மதிவாணன் படித்த போது மேலூர் அரசினர் கலைக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர். மதிவாணன் அபியின் “அந்தர நடை”
என்ற கவிதைத் தொகுப்பைப் படிக்கத் தந்தார். அபூர்வமான கவிதைகள்அடங்கிய தொகுப்பு. விதம் விதமான நுட்பங்கள். நிசப்தம் “வெடித்துச் சிதறுகிறது” அவர் கவிதைகளில். ஈர விரலின் உரசலில் ஈமத்தீ எழுகிறது. வேறு வேறு சாயைகள்- வேறு வேறு கூறுகள்- வேறு வேறு படிமங்கள்.
மதிவாணனும் நானும் இந்தக் கவிதையை அடிக்கடி பேசுவோம்.
இந்தப் பழக்கம்
விட்டுவிடு
எங்காயினும்
வானிலேனும் மண்ணிலேனும்
புள்ளியொன்று கிடக்கக் கண்டால்
சுற்றிச் சுற்றி
வட்டங்கள் வரைவதும்
சுழன்று சுழன்று
கோலங்கள் வரைவதும்
குறுக்கும் நெடுக்குமாய்ப்
புள்ளியின் வழியே
பரபரத்துத் திரிவதும்-
இந்தப் பழக்கம் விட்டுவிடு
முடிந்தால்
புள்ளியைத் தொட்டுத்தடவி
அதன் மூடிதிறந்து
உள்நுழைந்து
விடு
அபியின் கவிதைகள் பல்வேறு தொகுப்புகள் கண்டன. மெளனத்தின் நாவுகள்,
என்ற ஒன்று , என்றெல்லாம். ஆனால் மேலே கண்ட கவிதையின் இறுதி வரி மட்டும் மதிவாணனையும் என்னையும் காலமெல்லாம் தொடர்ந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன் ஹிந்து தமிழ் திசையில் அபியின் பேட்டியைப் படித்துவிட்டு மதிவாணன் அலைபேசியில் தொடர்பு கொண்டார், அவர் குரலில் பரவசம் இருந்தது. முதன் முதலில் அபியைப் பற்றியும் அவர் கவிதைகளைப் பற்றியும் பேசிய போது இருந்த அதே பரவசம்.
தி சந்தானம்
அழகு
ReplyDeleteஎளிய தமிழ்
சரள நடை
27 வயது சந்தானம்
இன்னும் இருப்பது குறித்து மிக சந்தோசம்
நன்றி
DeleteNicely written 🙏⭐
DeleteThank you Blessy
Delete👏 👏👌🏻👍
ReplyDeleteபா. மதிவாணன் இன்பராஜ்
ReplyDeleteநன்றி மதிவாணன்
Delete🌹
ReplyDelete😀
ReplyDeleteஅழகா எழுதற.. அபியின் கவிதை அருமை.
ReplyDeleteநன்றி தொடர்ந்து படிப்பதற்கும் எழுதுவதற்கும்.
Delete