வாழ்க்கைப் பயணம் நம்மை எங்கோ எடுத்துச் செல்கிறது. பழகிய
மனிதர்கள் நினைவில் புள்ளியாகத் தேய்ந்து மறைகிறார்கள். இருள் வந்து
சேர்ந்து அந்தியை மறைக்கிறது. எழுகின்ற நிலவை மேகம் மறைக்கிறது.
மறைவதில் ஒரு அழகு காண்கிறது. ஆனாலும் மனது பதைக்கிறதே? மறைவதை மனது ஏற்க மறுக்கிறது.
எவ்குனே எவ்டுசென்கோ (Yevgune Yevtushenko) ரஷ்யக் கவிஞர். சைபீரியாவில் பிறந்தவர்.மேடைகளில், விளையாட்டு அரங்கங்களில் கைகளை அசைத்து அசைத்து இவர் கவிதை வாசிப்பதைக் கேட்க ஒரு பெருங்கூட்டம் காத்திருக்கும்.ரஷ்யாவில் ஒரு தலைமுறையே அவர் கவிதைகளை உள் வாங்கி வளர்ந்தது.அவரும் ஆயிரக்கணக்கில் கவிதைகளை எழுதித் தள்ளினார் ஒரு கவிதையைப்பார்க்கலாம். ரஷ்ய மூலத்தை ஆங்கிலம் வழியாகத் தமிழில்
மொழிபெயர்த்திருக்கிறேன்.
மறையாதே
மறையாதே
என்னிடமிருந்து மறைந்தால்
நீ உன்னிடமிருந்தே மறைந்து விடுவாய்
நிரந்தரமாக
உன்னுடைய சுயத்திற்குத் துரோகம் செய்தபடி
அது மிகவும் மோசமான நேர்மையின்மை
மறையாதே
மறைவது எளிது, மிகவும் எளிது
நாம் ஒருவரை ஒருவர் உயிர்ப்பிப்பது கடினம்
மரணம் நம்மை மிக ஆழத்தில் கீழே இழுக்கின்றறது.
மரணம், ஒரு கணமானாலும் ஒரு யுகம் தான்
மறையாதே
உனது உள்ளங்கையைக் காட்டு
நான் அதில் எழுதப்பட்டிருக்கிறேன்
இது எனது நம்பிக்கை
நீ இருப்பதில் பயமில்லை
உன்னை இழப்பதில்தான்
தி சந்தானம்
Comments
Post a Comment