பொன்னகரம் என்று ஒரு கதை. புதுமைப்பித்தன் எழுதியது. கணவன் கடுமையான நோய் கண்டு படுத்த படுக்கை. வேலைக்குப் போனால் தானே கூலி? சிறு குழந்தை பசியில் அழுகிறது. வறுமை. பட்டினி உயிரைத் தின்கிறது.அந்தப் பெண் முடிவெடுக்கிறாள். கதையின் இறுதி வரி இப்படி இருக்கும். “கற்பு கற்பென்று கதைக்கிறீர்களே ஐயா? இதுதான் பொன்னகரம்.“காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்து கற்பு கற்பென்று உலகோர் கதைக்கின்றாரே” என்பது பாரதியின் வரி. அதை எடுத்தாண்டிருப்பார் புதுமைப்பித்தன். " கதைக்கிறீர்களே? இதுதான் ஐயா பொன்னகரம் "என்ற கேள்வியின் சாடல் தொந்திரவு செய்வதாய் இருக்கும். கேலியும் துயரமும் கலந்த பாவத்தோடு புதுமைப்பித்தனின் முகம் முன்னால் தோன்றும்
மதுரையில் பொன்னகரம் என்று ஒரு பகுதி உண்டு. அங்கு வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேனிலைப் பள்ளி இருக்கிறது. பள்ளிகளுக்குப் பெயர் இருப்பது இயல்பு. பெரும்பாலும் பள்ளிகள் நிறுவனர் பெயராலேயே அழைக்கப்படும். வெள்ளிவீதியார் நிச்சயமாக இந்தப் பள்ளியின் நிறுவனர் அல்லர். அவர் சங்ககாலக் கவி. பெண் கவி. இந்தப் பெண்மணியின் கவி உள்ளத்தை என்னவென்று சொல்வது? அவர் பாடுகிறார். பிரிவாற்றாமையில் பாடுகிறார். உடல் மெலிந்ததையும் ஒளி குன்றியதையும் சொல்கிறார். அது தலைவியின் கூற்றாக வருகிறது. பாடல் வருமாறு.
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்-
திதலை அல்குல் என் மாமைக் கவினே.
நல்ல பசுவின் பால் இனிமை உடையதாக இருக்கிறது. ஆனால் பாலைக் கன்றும் உண்ணவில்லை. கறக்கின்ற பாத்திரத்திலும் விழுந்து நிறையவில்லை. நிலத்திலே பரந்து வீணாகிறது. அது போல என்ன பயன் கண்டது என் பேரழகு. தலைவன் கொள்ளாத அழகு. எனக்கும் ஆகாது. என்னைக்கும் உதவாது.
வெள்ளி வீதியார் சங்க காலப் பெண்மணி. பெண்மையின் தன்னுடை உண்மை நிலையை உரைத்துவிட்டார். மிகவும் அழகாகச் சொல்லி விட்டார். எல்லாப் பெண்களாலும் அப்படிச் செய்ய முடியுமா? "மலரும் மங்கையும் ஒரு ஜாதி தன் மனதை மறைப்பதில் சரி பாதி "என்று ஒரு பழைய திரைப்பாடல். அந்தப் பாடல் எனக்குப் பிடிக்கும். அதில் நடித்த லட்சுமியைப் பிடிக்கும். அந்தக் காட்சியில் லட்சுமி ஊன்று கட்டையின் உதவியோடு நடப்பார். புழக்கடையில்நடந்தபடியே பாடுவார். பாடியபடியே மலர்களைப் பறிப்பார். ஆசையின் கோலத்தை வண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்? கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்? இப்படியெல்லாம் கேட்பார். சிவகுமார் தனது அறையின் ஜன்னல் வழியாக கரிசனத்துடன் பார்த்தபடி இருப்பார்.பாடலின் இறுதியில் சற்றே உயரத்தில் இருக்கும் மலரைப் பறிக்கத் தடுமாறும் போது சிவகுமார் வந்து உதவுவார். பன்னிரண்டு வயதில் பார்த்த காட்சி. மனதை மறைக்கும் கன்னிப் பெண்மைக்காக மனம் கசிந்தது.
இதற்கெல்லாம் பல வருடங்கள் கழிந்து கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தாமரை என்ற பெண் “வசீகரா” என்று ஒரு பாடலை எழுதினார். ஒரு பெண்ணின் உள்ளத்து உணர்வை எல்லாம் வெளிப்படையாகச் சொல்வதாக அமைந்தது அந்தப் பாடல்.
OTT தளத்தில் சிறிது நாட்கள் முன்பு ஒரு திரைப்படம் பார்த்தேன். சிவரஞ்சனியும் சில பெண்களும். மூன்று பெண்கள். மூன்று கதைகள்.மூன்று வெவ்வேறான காலகட்டங்கள். மூன்று எழுத்தாளர்கள் எழுதிய கதைகள். அசோகமித்திரன், ஜெயமோகன் மற்றும் ஆதவன். அதில் ஒரு கதை ஒரு சிறுவனின் பார்வையில். தேவகிச் சித்தி அவனோடு நன்குபழகுகிறார். விளையாடுகிறார். கூட்டுக் குடும்பம். அம்மா வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்ளுகிறார். தேவகிச் சித்தி வங்கிப் பணிக்கு ஸ்கூட்டியில் செல்கிறார்.சிறுவன் ஒரு நாள் அறை ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது தேவகிச் சித்தி டைரி எழுதுகிறார். எழுதிய டைரியைப் பீரோவிற்குள் பூட்டி வைக்கிறார், பூட்டிய சாவியைக் கைப்பையில் போட்டு வங்கிக்குச் செல்லும் போது எடுத்துச் சென்று விடுகிறார். சிறுவன் வீட்டுப் பெரியவர்களிடம் இதைச் சொல்கிறான்.
மறைத்து எழுதுவது ஏன்? அதை மறைத்து வைப்பது ஏன்? அப்படி என்னதான்டைரியில் எழுதியிருக்கிறது? வீட்டார் பிரச்னையைக் கிளப்புகிறார்கள். தேவகிச் சித்தி அதை எதிர்கொள்கிறார்கள். இது கதை.
பிறந்த வீட்டிலிருந்து வரும் கடிதங்களை குடும்பத்தினர் எல்லார் முன்பும் படித்துச் சொல்ல நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட பெண்களின் நிஜக்கதைகள் சில எனக்குத் தெரியும்
இதை எல்லாம் பார்க்கும் போது வெள்ளிவீதியார் தன்னை எத்தனை சுதந்திரமாக உணரந்திருக்கிறார்? வெளிப்படுத்தியிருக்கிறார்..இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக.
மூன்று கதைகளில் என்னை ரொம்ப கவர்ந்தது தேவகிச் சித்தி கதை. அவரவர்களுக்கான ஸ்பேஸ்ங்கறது எவ்ளவ் முக்யம். அது கிடைக்காமலே பலர் வாழ்க்கை முடிஞ்சுடுத்து. பலரோடது இன்னும் தொடர்கிறது. அந்த குட்டி பையன் பெருசாகி நிச்சயம் கில்டியா ஃபீல் பண்ணும்.
ReplyDeleteஇந்த எல்லா விஷயமும் எல்லாருக்கும் தெரியனும்ன்ற அடாவடில்லாம் நாம.வளர்ந்த காலத்ல நார்மலா இருந்ததுல்ல. 😀😀😀
நம் குழந்தைகள் விஷயத்லயே ஒரு வயதுக்கு மேல் தலையிடவோ கருத்து சொல்லவோ நமக்கு உரிமை கிடையாது. ஒரு Kahlil gibran கவிதை வருமே அது மாரி,
//You may give them your love but not your thoughts,
For they have their own thoughts.
You may house their bodies but not their souls,//
அழகாகச் சொன்னாய்
Delete