நேற்று கூரியரில் ஒரு பார்ஸல் வந்தது. அது எதிர் வீட்டுக்கானது. அவர்கள் எல்லோரும் ஊருக்குப் போய் விட்டார்கள். கூரியர்காரர் என் வீட்டு அழைப்பு
மணியை அழுத்தினார். திறந்தேன். என்னிடம் அலைபேசியை நீட்டினார்.
பேசியவர் எதிர் வீட்டு மனிதர். பார்ஸலை வாங்கி வைத்திருக்குமாறு வேண்டினார். அளவில் பெரிய அந்த பார்ஸல் எனது வீட்டில் நிறைய இடத்தை எடுத்துக் கொள்ளுமே என்று கவலைப் பட்டார். பரவாயில்லை நான் வாங்கி
வைத்திருக்கிறேன் என்று சொன்னேன். “I think we have enough space in our heart for each other”. இந்த வார்த்தையை நான் சொல்லவில்லை. ஏனென்றால் இருபது மணி நேரம் கழித்துத்தான் இந்த வார்த்தை தோன்றியது. போகட்டும். நான் அவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தாவது சொல்லியிருக்கலாம். மறந்து போனேன்.
பிரியமோ வாழ்த்தோ அப்போதைக்கப்போது சொல்லி விடுதல் உசிதம்.
தேவகுமாரன் தொழுவத்தில் பிறந்தார். ஊர் விட்டு இந்த ஊர் வந்தனர் அவரது அன்னையும் பிதாவும். கடுங்குளிர். எங்கும் இடம் இல்லை. தொழுவம் தான் கிடைத்தது. முன்னதாக ஒரு தேவதை அன்னை மேரியின் முன்னே தோன்றி
உனக்கொரு மகன் பிறப்பான். அவனே யூதர்களின் ராஜா. ம்க்களை நல்ல வழியில் நடத்துவான் என்று சோல்லி மறைகிறது. இந்தக் காட்சியை நான் பார்த்திருக்கிறேன். ஆரம்பப் பள்ளிக் கூடத்தில். தேவதையாக ஒரு பெண்
வெண்ணிற உடையில் வந்தாள். அவளுடைய கால்கள் தரையில் பாவ வில்லை.
அப்படி அந்தக் காட்சியை அமைத்திருந்தார்கள்.
ஏசு பிறக்கும் போது வானில் ஒளி எழுந்தது. அந்த ஒளியின் அறிகுறியைக்
யைக் கண்டபடியே பெத்லகம் நகருக்கு வந்து சேருகின்றனர் மூன்று ஞானியர்.. பரிசுப் பொருட்களைத் தருகின்றனர் பிறந்த குழந்தைக்கு. அவர்களை அனுப்பியவன் ஹெராது என்ற அரசன். வஞ்சக எண்ணம் கொண்டவன். உண்மையிலே யூதர்களின் ராஜா என்று சொல்லும் படியான குழந்தை பிறக்குமா என்று அறிய விரும்பினான். நேரில் கண்டு தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைக்கிறான். தனது பதவிக்கு ஆபத்து வந்து விடும் என்று என்ற அச்சம் அவனுக்கு. ஞானியர் குழந்தையைக் காண்கிறார்கள். பரிசுப் பொருட்களைத் தந்து விட்டு வேறு திசையில் சென்று விடுகிறார்கள். அரசனுக்குத் தகவல் சொல்லாமல். குழந்தைக்கு ஆபத்து நேரிடும் என்று கருதி. Journey of the Magi என்று ஓரு கவிதை. டி.எஸ். எலியட் எழுதியது. கல்லூரிப் பாடத்தில் படித்தது. மேலே சொன்ன மூன்று ஞானியர் ஏசுவைத் தேடி வந்த பயணத்தைப் பற்றி சொல்வது.
அரசன் ஹெராது இரண்டு வயதுக்கு உட்பட்ட எல்லா குழந்தைகளையும் கொல்ல உத்தரவிடுகிறான். ஆனால் அவன் கொல்லக் குறித்த குழந்தை தப்பி விடுகிறது. தப்பிப் பிழைத்து வளர்ந்து உலகோர்க்கு ஞானம் உரைக்கிறது. அத்தனையும் மெய்யாக மெய்யாகவே உரைக்கிறது. குழந்தைகளைப் போல நீங்கள் ஆனாலன்றி மோட்ச சாம்ராஜ்ஜியம் அடைய முடியாது என்கிறது. நிழல் தராத மரத்தைக் கண்டு கோபம் கொள்கிறது. ஊசிமுனைக் காதுக்குள்ளே ஒட்டகம் போனாலும் செல்வந்தன் சொர்க்கம் புகுதல் கடினம் என்கிறது.
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் என்று ஓரு பாடலைக் கேட்டிருக்கிறேன். வாணி ஜெயராம் பாடியது. ஒலிபெருக்கிக் குழாய் வழி தொலைதூரத்திலிருந்து ஓலிக்கும். அநேகமாக அது தேர்வு நாட்களாக இருக்கும்.
எனக்கு ஒரு சென்டிமெண்ட். இந்தப் பாடல் தொலைவிலிருந்து ஒலித்தால் தேர்வு நன்றாக எழுதிவிடுவேன். பெரும்பாலும் அப்படித்தான் அமையும்.
இப்போது எனக்கு எந்தத் தேர்வும் இல்லை. அந்தப் பாடலும் எங்கும் ஒலிப்பதில்லை.
தி சந்தானம்
சமீபத்தில் வாணிஜெயராமின் பழைய நேர்காணல் படித்தேன். அதில் மேற்படி பாடலைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
ReplyDeleteதேவகுமாரன் பிறப்பு பற்றிய கட்டுரை அருமை. திருநெல்வேலி யில் சாப்டர் உயர்நிலைப் பள்ளியில் 6, 7 ம் வகுப்பு படிக்கும் போது தேவகுமாரன் பிறப்பு பற்றிய அலங்காரம் மற்றும் உபன்யாசம் நிறைய கேட்டிருக்கிறேன். நினையூட்டலுக்கு நன்றி.
நன்றி ராம். படித்ததற்கும்
ReplyDeleteஇங்கே பதிவிட்டதற்கும்
ஏசு கதைகள் எதுவுமே அறியாமல் வளர்ந்த நான் பெரியவளானப்றம் ஒரு க்றிஸ்துவ தோழியிடம் ஹேப்பி குட் ஃப்ரைடே சொல்லி ப்ரச்சினை ஆகிடுத்து. அசிங்கப்பட்டு அதுக்கப்றம்தான் பேஸிக்கான விஷயங்களே தெரிந்து கொண்டேன். இன்று போல் கூகுளாண்டவரோ, விக்கியம்மனோ இல்லாத காலம். பாடத்ல இதெல்லாம் உண்டா தெரில. நா தமிழ், ஆங்கிலம், கணக்கு மூணு மட்டும்தான் படிச்சேன். மிச்ச ரெண்டு சப்ஜெக்ட்டும் சாய்ஸ்ல விட்டேன். :)
ReplyDeleteஆதியிலே வார்த்தை இருந்தது. வார்த்தை தேவனிடம் இருந்தது. வார்த்தை தேவனாக இருந்தது. இது புதிய ஏற்பாடு. இந்த மொழி நடையை நான் உள் வாங்கி இருக்கிறேன். பல முறை படித்து இருக்கிறேன். நிறைய வரிகள் மனப்பாடம். படித்து அறிவது தான் அதிகம். கேட்பதும் உண்டு.
Deleteகற்பதும் கேட்டலும் கூகுள் விக்கியின் நன்று என்பது எனது கொள்கை