அலைபேசியடன் நமக்கான தொடர்பு வினோதமானது. கணமும் எனை நீ மறவாதே என்பது அல்ல. கணமும் என் கைவிட்டு அகலாதே என்பதானது. அலைபேசி மூலம் பேசவும் கூடுகிறது. அது மிகவும் அருகி வருகிறது சமீப காலத்தில். உரையாடல்கள் சென்று தேய்ந்து இற்று விட்டன். அலைபேசியில் நிலை குத்தி நிற்கின்றன கண்கள். சில போது எழுத்துக்கள் மீது கைவிரல்கள் நடனமாடுகின்றன. வயதைப் பொறுத்து வேகம். கூடுதலோ குறைவோ.
போகட்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் அலைபேசியில் அழைத்தார்.
“குணாதீதன் என்றால் யார்?” என்று கேட்டார். ஒரு கணம் தாமதித்தேன்.
“அடடா, அது குணத்ரய விபாக யோகம் ஆயிற்றே? என்ன பகவத் கீதையா?” என்றேன். "ஆமாம்" என்றார். மேலே இருவருக்கும் நடந்த உரையாடல்.
நண்பர்: ஆமாம். கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லையே?
நான்: குணாதீதன் என்றால் குணங்களைக் கடந்தவன். குணங்களாவன மூன்று சத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று.
நண்பர்: சரி சத்வம் ஒளியின் இயல்பு நிர்மலமானது. ரஜஸ் விருப்பம் வேகம் செயலில் ஊக்கம் தருவது. தமஸ் இருள், மந்தம், சோம்பர் உறக்கத்தில் கொண்டு சேர்ப்பது. இந்த மூன்றையும் கடந்தால் கடவுளாகி விடலாமா?
நான்: கடவுளாவது இருக்கட்டும். இந்தக் குணஙுகளைப் புரிந்து கொள்ள வேண்டுமே? குணங்கள் உடம்பில் ஆத்மாவைப் பிணைக்கிறது. சத்வம் ஞானம் என்ற இன்பத்தால் ரஜஸ் செயல் என்ற விருப்பத்தால். தமஸ் சோம்பர் என்ற மயக்கத்தால்.
நண்பர்: இந்த குணங்கள் மாறி மாறி இயல்கிறதா?
நான்: ஆமாம். சில வேளை சத்வம் ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி விடுகிறது. சில வேளை ரஜோ குணம் சத்வத்தையும் தமோ குணத்தையும் அடக்கி மேலெழுந்து நிற்கிறது. அவ்வாறே சத்வத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கி தமோ குணம் எஞ்சுகிறது. மட்டையடியாக உதாரணம் சொல்ல வேண்டுமானால் ஒரு நல்ல புத்தகத்தை படித்தபடி சிந்தனையில் ஆழ்ந்தால் சத்வம். டி.வி. சானலை ஒன்றை விட்டு ஒன்று மாற்றிக் கொண்டோ, வேக வேகமாக வாட்ஸப்பில் பார்வர்டு செய்தபடியோ இருந்தால் ரஜஸ். வெறுமனே படுக்கையில் புரண்டு கொண்டிருந்தால் தமோ குணம்.
நண்பர்: சரி.. இந்த குணங்கள் எப்படி வந்து சேருகிறது?
நான்: உடம்பெடுத்தவன் சத்வம் ஓங்கி நிற்கையில் இறப்பான் என்றால், உத்தம ஞானிகளின் உலகை அடைகிறான். ரஜோ குணத்தில் இறப்பவன் செய்கைப் பற்று உள்ளவரிடையே பிறக்கிறான். தமோ குணத்தில் இறப்பவன் மூடர்களிடையே தோன்றுகிறான்.
நண்பர்: குணங்களைக் கடந்தவன் எவ்வாறு நடந்து கொள்வான்?
நான்: அவன் இந்த குணங்கள் தோன்றும் போது அஞ்சமாட்டான்.நீங்கும்போது அவற்றை விரும்ப மாட்டான்.அவற்றைப் புறக்கணித்த மாதிரி இருப்பான் இன்பம்- துன்பம் மானம்-அவமானம் எல்லாம் அவனுக்கு ஒன்றே..ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவான். மாறாத பக்தியுடன் இறைவனை வழிபட்டு குணங்களைக் கடந்தவனாய் இருப்பான்.
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி
என்ற குறளை இந்த இடத்தில் சொல்லி முடித்தேன்
இந்த உரையாடல் நண்பருக்கு மகிழ்ச்சியைத் தந்தது
உரையாடலின் ஆரம்பப் பகுதியும் முடிவிலே நான் சொன்ன குறளும் அசலானது. உரையாடலின் மற்ற பகுதிகள் மகாகவி பாரதியின் பகவத் கீதையை ஆதாரமாகக் கொண்டு புனையப்பட்டது.
தி சந்தானம்
Comments
Post a Comment