சங்க இலக்கியப் பாடல்கள் சுவைக்கும் தோறும் இன்பம் தருவதாய் இருக்கிறது. அதிலும் குறுந்தொகைப் பாடல்கள்.
நான் சொல்லப் போகும் இந்தப் பாடல் நாம் எல்லோரும் அறிந்தது. திருவிளையாடல் திரைப்படம் மூலமாக நம்மில் அனேகர் தெரிந்து கொண்டது. அதில் தருமிக்காக சிவபெருமான் எழுதிய பாடல். நக்கீரன் குற்றம் கண்டுபிடித்த பாடல். சிவாஜி கணேசன் கம்பீரக் குரலில் பதினைந்து வினாடிகளுக்கும் சற்றே குறைவான நேரத்தில் சொல்லி முடித்த பாடல்.
அது "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி" எனத் துவங்கும் பாடல். எத்தனையோ முறை வசனங்களைக் கேட்டிருந்தாலும் முதல் இரண்டு வரிகள் தவிர மற்றவை பிடிபடுவதில்லை. என்னிடம் 'தனிப்பாடற்றிரட்டு' என்று ஒரு புத்தகம் இருக்கிறது. பழைய புத்தகம். கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டுப் பழசு. விலை ஒரு ரூபாய் எட்டு அணா என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. பூமகள் விலாச அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது என்று காண்கின்றது.இந்தப் புத்தகம் என்னிடம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. நம்மிடம் இருந்த புத்தகங்கள் எப்படிச் சென்றது என்றும் தெரியாது. நட்பைப் போல. இந்தப் பாடலை எழுதியவர் மதுரைச் சொக்கநாதர் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. என்றாலும் இறையனார் எழுதிய குறுந்தொகை ,குறிஞ்சிப் பாடல் என்ற வகைமை என்று அறிய முடிகிறது. பாடல் வருமாறு:
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின்
மயிலியற்
செறியெயிற்றரிவை கூந்தலின்
நறியவுமுளவோ நீயறியும் பூவே
இதனை இப்படிப் பொருள் கொள்ளலாம்.
தேன் உண்டு வாழும் அழகிய சிறகுகள் உடைய வண்டே. நான் விரும்பவேண்டும் என்று எண்ணாமல் நீ அறிந்ததைச் சொல். நீ அறிந்த பூக்களிலே பல பிறவிகளில் நன்கு பழகிய நட்புடைய, மயில் போன்ற மென்மையும் நெருக்கமான பற்களும் உடைய அரிவையின் கூந்தலில் இருப்பது போல மணம் உண்டா?
இது தலைவன் கூற்றாக வருகிறது.
குறிஞ்சித் திணை.
திரைப்படத்தில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று நக்கீரர் வாதிடுவதாகக் காட்சி வரும். சங்கறுக்கும் குலத்தில் பிறந்தவனா என் கவியை ஆராய்வது என்று சிவன் தீ போல விழிப்பார். அதற்கு மறுமொழியாக சங்கரனார்க்கு ஏது குலம்? என்று நக்கீரர் கேட்பார். அந்தப் பாடல் நான் மேலே குறிப்பிட்ட புத்தகத்தில் கிடைத்தது. அது இப்படி
சங்கறுப்பதெங்கள்குலஞ்சங்கரர்க்கங்கேது குலம்
பங்கமுறச் சொன்னாற் பழுதாமோ-சங்கை
அரிந்துண்டுவாழ்வோமரனாரைப் போல்
இரந்துண்டுவாழோமினி.
காணொளியைக் காண்போம்
*************
இன்னொரு குறுந்தொகைப் பாடல்.
நெய்தல் நிலப் பாடல். காமஞ்சேர் குளத்தார் எழுதியது. தலைவி தோழியிடம் சொல்வதாக அமைந்தது. சோக ரசம் கொண்டது.
நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே,
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்,
அமைவிலர் ஆகுதல், நோம் என் நெஞ்சே:
பிரிவைத் தாங்க முடியாமல் தலைவி சொல்கிறார்
என் நெஞ்சம் வருந்துகின்றது.
என் நெஞ்சம் வருந்துகின்றது.
என் இமைகள் தீய்கிறது, கண்ணீரால்
அந்தக் கண்ணீரைத் துடைத்து, அளவளாவி எனக்குப் பொருத்தமாக அமைந்த காதலர் இப்போது பொருந்தாதவர் ஆகிவிட்டார். என் நெஞ்சம் நோகின்றது.
குறுந்தொகைப் பாடல்கள் நெருக்கமாகப் பேசுகின்றன. ஒரு நேரடித் தன்மையோடு. இயல்பாக.
தி சந்தானம்
மதி :
ReplyDeleteநன்று. சந்தானம், நன்கு தேர்ச்சியுள்ள எழுத்தாளன் ஆகி விட்டாய்.
நிறைய பழைய நினைவுகள்.
1979 ல் உத்தமபாளையம் ஞானாம்பாள் விடுதியில் இருக்கும் போது, அந்த சாலை சந்திப்பில் இந்த காட்சி ஒலி பரப்பில் வந்துகொண்டே இருக்கும்.
நன்றி மதி. ஞானாம்பாள் விடுதியை மறக்க முடியுமா? பழைய நினைவுகள் தாலாட்டுப் போல. ஆசுவாசம் கொள்ளச் செய்பவை அல்லவா?
Deleteகேட்டு கேட்டு தேஞ்சு போன கேசட் திருவிளையாடலும் வீரபாண்டிய கட்டபொம்மனும். பின்னால முதல் மரியாதை. கொங்குதேர் எதோ ஒரு க்ளாஸ்ல மனப்பாடப் பகுதியா வந்த நினைவு. அழகா எழுதற. குறுந்தொகைப் பாடல் வச்சு ஒரு கதை எழுதினேன். அனுப்பறேன்.
ReplyDeleteநாங்கள் கேட்டது தொலைவில் ஒலிபெருக்கிக் குழாய் வழியாக. காதுகளைக் தீட்டியபடி கேட்போம்.
Deleteநன்றி படித்ததற்கு
நறியவும் அ அறியவும்னு ரொம்ப நாள் சொல்லிண்டு இருந்தேன். 😀😀😀
ReplyDelete😂
Delete