அவன் வெகு நேரமாக நடந்து கொண்டிருந்தான். கண்கள் சிவந்து காணப்பட்டது. உதடுகள் காய்ந்து இருந்தன. முகத்தில் தாடி மண்டி இருந்தது. அது ஒரு மலைப் பாதை..அவன் செல்ல வேண்டிய இடத்தின் பெயர் அருணகிரி. ஒரு வாகனமும் நிற்கவில்லை. அவன் நடந்து கொண்டே இருந்தான். களைத்துப் போய் ஒரு கல்லில் அமர்ந்தான்.தொலைவில் ஒரு பஸ் வருவது தெரிந்தது. பள்ளிக் குழந்தைகள் பாடும் குரல் சன்னமாக கேட்டது. மெல்ல மெல்ல அந்த குரல்கள் நெருங்கி வந்தது. அவன் எழுந்தான். பஸ்ஸை நிறுத்த கை காட்டினான். பஸ் அவனைக் கடந்து சென்றது. கொஞ்ச தூரம் சென்ற பின் நின்றது. பின்னால் வந்து அவனருகில் நின்றது. பஸ்ஸில் பெரும்பாலும் பள்ளிச் சிறார் சிறுமிகள். ஒரு பாதிரியார். ஆசிரியைகள். அவன் செல்ல வேண்டிய இடத்தை சொல்கிறான். ஏற்றிக்கொள்ள வேண்டுகிறான்.டிரைவர் பாதிரியாரை பார்க்கிறான். அவர் தலை அசைக்கிறார். அந்த மனிதன் பஸ்ஸில் ஏறுகிறான் எல்லோரும் மௌனமாக இருக்கிறார்கள், ஆனால் சொல்லாத ஒரு பரிவு அவன் மேல் எல்லோருக்கும் பிறக்கிறது. மௌனத்தை கலைக்க பாதிரியார் அவனோடு பேச்சு கொடுக்கிறார். நீ எங்கிருந்து வருகிறாய்? ஜெயிலில் இருந்து. செய்த குற்றம் என்ன? ஒருவனைக் கொலை செய்தேன். ஒரு கணம் அனைவரும் உறைந்து போகிறார்கள். உனது மனதில் இருப்பதை சொல். பாரம் நீங்கி விடும் என்கிறார் பாதிரியார். அவரது மனம் அப்படி. அவன் தனது கதையைச் சொல்கிறான்.
உன்னி கிருஷ்ணன் ஒரு வனத்துறை அலுவலர். அந்த மலை கிராமத்திற்கு மாற்றலில் வருகிறான். துளசி என்ற பெண்ணை சந்திக்கிறான். தேயிலைத் தோட்டத்து கங்காணியின் மகள். துளசிக்கு அம்மா இல்லை. அப்பா தினமும் இரவு குடித்து விட்டு வருவார். துளசிக்கு துயரம் மேலிடும். கண்கள் கலங்கும். உன்னி கிருஷ்ணன் யாருமற்ற அனாதை. பாலன் என்று ஒரு நணபன் மட்டுமே. சொந்தமென்று சொல்லிக்கொள்ள. துளசியின் இயல்பான அன்பு .இதமாக இருக்கிறது. நீர் ஊற்று போன்ற அவள் கரிசனம் அள்ளிப் பருகுவதாய் இருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல பழக்கம் வளர்கிறது. ஓரு நுட்பமான தருணத்தில் அவளுக்கு அவனும் அவனுக்கு அவளும் அவசியம் என்று தெரிகிறது. துளசி மெல்ல அப்பாவிடம் சொல்கிறாள். அப்பாவிற்கு மனமில்லை.
இது போன்ற வாலிபர்கள் இரண்டு மூன்று வருடம் இருப்பார்கள். பொழுது போக்காக பழகி விட்டு சென்று விடுவார்கள். கவனம் மகளே என்று சொல்கிறார். ஆனால் துளசி உறுதியாக இருக்கிறாள். உன்னி கிருஷ்ணன் ஒரு முறை குடித்துத் தடுமாறும் அவள் அப்பாவை வீடு கொணர்ந்து சேர்க்கிறான்.
மறுநாள் அவரை வீட்டில் சந்தித்து. துளசியை மணந்து கொள்ளக் கேட்கிறான். அவர் அந்தஸ்தைச் சுட்டிக் காட்டி மறுக்கிறார். உன்னி அது ஒரு தடையாகாது என்கிறான். ஒருவாறு அவன் உண்மையானவன் என்று புரிந்து கொள்கிறார். திருமணத்திற்கு சம்மதிக்கிறார். வேலை விஷயமாக உன்னி ஒரிரு நாட்கள் வேறு ஊருக்குச் செல்ல நேர்கிறது. இந்த சிறு பிரிவிற்கு துளசி கண்ணீர் சிந்துகிறாள். சீக்கிரம் வந்து விட வேண்டும் என்று சொல்கிறாள். மலைப் பாதையில் ஒரு சிறு உயரத்தில் நின்றபடி அவன் வரும் வழி பார்த்து இருக்கிறாள். ஜீப் வருகிறது. உன்னி இறங்குகிறான். இவள் நிற்கும் இடம் தேடி வருகிறான். துளசி விரைந்து எட்டு வைக்கிறாள். அவள் கண்களில் கண்ணீர்.
சில நாட்கள் கழித்து தனது திருமண விஷயத்தை நண்பன் பாலனிடம் சொல்லி வர கிளம்புகிறான். துளசி கடிதம் போட்டு தெரிவிக்க கூடாதா என்கிறாள். போக வேண்டியதன் அவசியத்தை சொல்கிறான். துளசி மனமில்லாமல் விடை கொடுக்கிறாள்.
உன்னி பாலன் வீட்டை அடைகிறான். அங்கே அதிர்ச்சி காத்திருக்கிறது. பாலன் இறந்து விட்டான். ஏன் தகவல் தரவில்லை என்று கேட்கிறான். பாலனின் அம்மா ஏதோ காரணம் சொல்கிறாள். மனதில் ஏறவில்லை. அவளுக்கு ஆறதல் கூறுகிறான். துயரத்தோடு கிளம்புகிறான். வழியில் ஒரு போலீஸ் ஜீப் இவன் அருகில் நிற்கிறது. துப்பாக்கி முனையில் சுற்றி வளைக்கப் படுகிறான். அவர்கள் தேடும் தீவிரவாதியின் சாயலில் இருப்பதால். என்ன சொல்லியும் கேட்கவில்லை. லாக்கப்பில் அடைக்கிறார்கள். குடிக்கத் தண்ணீர் கேட்டால் சிறுநீரைத் தருகிறார்கள்.
வெற்றுத் தாளில் ரேகை வைக்க வற்புறுத்திய போது கைகலப்பு ஏற்படுகிறது. ஒரு காவலரைத் தூக்கி அடிக்கிறான் உன்னி. சுவரில் மோதி அவன் இறந்து விட சிறையில் இடப்படுகிறான்.
சிறையில் ஒரு கைதி பாடுகிறான்.
கொன்னத்தொரு காவுண்டு
காவின் அடுத்தொரு மரமுண்டு
மரத்து நெறய பூ உண்டு
பூப்பறிக்கான் போயல்லோ
பூங்குயிலே பெண்ணாளே
இதைக் கேட்டவுடன் உன்னிக்கு துளசியின் நினைவு வருகிறது. துயரம் மேலிடுகிறது. ஏக்கம் கொண்டு மனம் தவிக்கிறது. ஒரு முறை துளசி உன்னியை சந்திக்கிறாள். அனுமதிக்கப்பட் நேரத்துக்குள் என்ன பேசி விட முடியும்?
காலம் ஓடுகிறது. பருவங்கள் மாறுகின்றன. உன்னியின் தண்டனைக் காலம் முடியும் தறுவாய்- துளசிக்கு ஒரு கடிதம் போடுகிறான்.
விரைவில் விடுதலை ஆகிறேன்-. இன்னமும் நான் உன் மனதில் இருந்தால் ஓரு தீபம். ஒரே ஒரு தீபம். நாம் எப்போதும் சந்திக்கும் மலைச் சரிவில் ஏற்று. நான் புரிந்து கொள்வேன் நீ எனக்கான நம்பிக்கையாய் இன்றும் இருக்கிறாய் என்று. இல்லை என்றால் நான் என் வழியே பயணத்தைத் தொடருவேன். கடிதத்தை முடிக்கிறான்
.
கதையைக் கேட்ட அனைவருக்கும் மனம் கனத்துப் போகிறது. பஸ் மலைப் பாதையில் வளைந்து சென்றபடி இருக்கிறது. அவனுடைய பயணத்தின் இலக்கு தெருங்குகிறது. எல்லோரும் பார்த்தபடி இருக்கிறார்கள். ஒரு வளைவில் சற்றே தொலைவில் உயரே ஒன்றா.. இரண்டா.. நூறு நூறு தீபங்கள். அனைவரும் கரவொலி எழுப்புகிறார்கள். உன்னி கிருஷ்ணன் மெல்ல இறங்குகிறான். காத்திருக்கும் துளசியிடம் தீபங்களின் ஒளியின் ஊடே நெருங்குகிறான்.
யாத்ரா என்ற மலையாளப் படம்.. பாலு மகேந்திரா இயக்கிய படம். மம்முட்டி ஷோபனா நடித்தது. . அதன் கதைதான் மேலே சொல்லப்பட்டது. எங்கள் வீட்டுக்கு மிக அருகே ஒரு தியேட்டர் இருந்தது. .அங்கே நானும் நண்பர் செளந்தரும் இந்தப் படத்தைப் பார்த்தோம். அது 1985ம் வருடம். இந்தப் படம் பார்த்து விட்டு நானும் செளந்தரும் வீட்டுக்கு வந்தோம். வாசல் படிக் கல்லில் அப்பா அமர்ந்திருந்தார். நான் உள்ளே சென்றேன். அப்போது செளந்தரும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் மீண்டும் வாசலுக்கு வந்தேன்.
செளந்தர் அப்பாவிடம் சொல்லிக் கொண்டார். இருவரும் கிளம்பினோம்..
அப்பாவிடம் செளந்தர் என்ன பேசினார் என்று அவர் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை.
சில நாட்களுக்கு முன் நானும் செளந்தரும் பேசிக் கொண்டிருந்தோம். யாத்ரா திரைப்படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்ததை நினைவு கூர்ந்தார். அவர் அப்பாவிடம் படத்தின் கதையைச் சொல்லியிருக்கிறார். அப்பா சொன்னாராம்.
The course of true love never did run smooth
தி சந்தானம்
Ahaaa
ReplyDelete🙂
Deleteயாத்ரா கதை படித்தேன். Touching story. BGM கேட்டேன். உன் அப்பாவின் comment super. அவர் பாணியில் நிதானமான பேச்சு. ரசித்தேன்.
ReplyDeleteநன்றி ராம். கம்பி அழி கல்லால் ஆன வாசற்படி
Deleteவீட்டு யனிதர்கள் யாவும் நீ அறிவாய்
மதி : 👌🏻
ReplyDeleteநன்றி
Deleteயாத்ரா லிஸ்ட்டில உள்ள படம். பார்க்கனும். சமீபத்தில் மதிலுகள் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது.
ReplyDeleteமதிலுகள் முகமது பஷீருடைய கதை என்று ஞாபகம். அடூர் கோபாலகிருஷணனின் மிகச் சிறந்த படம். யாத்ரா பாரு. நிதானமா
Delete