Skip to main content

ஒரு துளி கண்ணீர்

 “வரையின் மாமணியும் வயிரமும் எதிர் உதிர் முத்தும் திரை கொணர்ந்து உந்தும்” என்பார் திருமங்கை ஆழ்வார். கடலின் அலை கொண்டு வருவதில்லை. வலை உலகில். அல்காரிதம் (algorithm) கொண்டு வந்து சேர்க்கிறது நமக்குப் பிடித்ததை. இதை உங்களுக்குப் பிடித்தால் இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம் என்று சொல்லும்.

அப்படித்தான்  நான் விரும்பும் வகைமையில் ஒரு எழுத்து  இன்று வந்து சேர்ந்தது. வயிரமும் முத்தும் போல.  செல்போனில் தேடும் போது. அந்த எழுத்துக்கு உரியவர் யியூன் லீ. சீனத்துப் பெண்மணி. பெய்ஜிங்கைச் சேர்ந்தவர். தந்தை அணு இயற்பியலாளர். (Nuclear Physicist). தாய் ஆசிரியை. படிப்பை பீகிங் பல்கலைக் கழகத்தில் முடிக்கிறார். மேல் படிப்புக்கு அமெரிக்கா செல்கிறார். அபுனைவு எழுதுவதைப் பயில்கிறார். பின்பு புனைவு (Fiction) மற்றும் அபுனைவை (Non fiction) பயிற்றுவிக்கிறார்.



இவர் எழுதிய The ability to cry தான் இன்று படிக்கக் கிடைத்தது என்று மேலே சொன்னேன். நியூயார்க்கர் இதழில் வந்திருந்தது. பெரும்பாலும் இவரது கட்டுரைகள் நியூயார்க்கர் இதழில் தான் வரும். தெளிவான நடை. உணர்வுகளின்  மெலிதான வெளிப்பாடு. அதில் ஒரு வரி. ஒரு துளி கண்ணீர் சிந்தினால் நான் அலீஸ் (Alice) ஆகி விடுவேன். கண்ணீர்த் துளிகளின் கடலில் நீந்தும் அலீஸாக. 


கட்டுரையின் துவக்கத்தில் ஜூலியா பற்றி சொல்கிறார். ஜூலியா யியூன் லீயின் சின்ன மகனைப் பார்த்துக் கொள்கிறார்.தோட்டத்தை செழுமைப் படுத்துகிறார். நாய்களைப் பராமரிக்கிறார். லீயின் கணவர் வேலைக்குச் சென்றுவிடுவார். லீ வேறு ஒரு ஊரில் வேலை பார்க்கிறார்.சின்னவன் அதிகம் பேச மாட்டான். அண்ணன் வின்சென்ட்  தான் அவனுக்கு நெருக்கம். வின்சென்ட் தற்கொலை செய்து கொண்டான். ஜூலியா வந்து இரண்டு மாதங்கள் கழிந்த பின்பு. தொடர்பில் இருக்கும் ஜூலியா வெள்ளிக்கிழமையிலிருந்து குறுஞ்செய்திகளுக்கு பதில் தரவில்லை. குரல் செய்திகளுக்கும். லீ கவலையுறுகிறார். ஏதோ சரியில்லை. கூகுளில் தேடுகிறார். ஜூலியாவின் மரணச் செய்தி கண்ணில் படுகிறது. விம்மி விம்மி அழுகிறார். மகன் வின்சென்ட் இறந்தபோது அவர் அழவில்லை. அது பதினெட்டு மாதங்கள் முன்பு. பிறகு மாமியார்  சீனாவில் இறந்து போனார். அப்போதும் அழவில்லை.  இப்போது அழுகை வந்தது, வட்டியும் முதலுமாக.  ஜூலியாவிற்கு மனிதர்களை விட பிராணிகளை பிடிக்கும்.  அவருடைய பையன்கள் நடுநிலைப் பள்ளியிலும் படித்து வந்தார்கள். அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்திருக்க வேண்டும். அவருடைய குழந்தைப் பருவம் மோசமானது. அம்மா குடிகாரி. அப்பா எப்போழுதும் வசை பாடிக் கொண்டிருந்தவர்.  இதை எல்லாம் ஜூலியா சொல்லியிருக்கிறார். இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு ஜூலியா லீயின் கதையில் வரும் சிறுவனைப் பற்றிக் கேட்கிறார். சிறுவனின் அம்மா தீவிர அரசியல் செயல்பாட்டாளர். அவரைத் தீர்த்துவிடுவார்கள். அந்த சிறுவன் வளர்ந்த பிறகு என்ன ஆவான்.  அம்மாவைப் பற்றி தெரிந்து கொள்வானா. இது ஜூலியாவின் கேள்வி. லீ சொல்கிறார். நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால் ஜூலியா அந்தப் பையனின் கதையை நீங்கள் எழுதலாம் என்கிறார். லீ பதில் சொல்லவில்லை. நினைத்துக் கொள்கிறார். நான் அப்படி எல்லாம் எழுத மாட்டேன் என்று. அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் வரலாம். சில வருடங்கள் தங்கவும் கூட செய்யலாம். ஆனால் விடுதிகள் இல்லங்கள் ஆகாது. எனது இல்லத்தை உங்கள் விடுதியாக  எண்ணுங்கள். இப்படி லீ நினைத்துக் கொள்கிறார்.


வின்சென்ட் இறந்தது லீயின் அம்மாவுக்குத் தெரியும். மாமியாருக்குத் தெரியாது.

லீயின் அப்பாவுக்கும் தெரியாது. அப்பா இதய நோயாளி. வாழ்க்கையின் பாதிக்கும் மேல். ஆறு வயது இருக்கும் போது லீ சுலபமாக அழுது விடுபவராக இருந்தார். அப்பொழுது அப்பா லீயின் முகத்துக்கருகே கணாணாடியைப் பிடிப்பார். "மகளே! உன் முகத்தைப் பார். நன்றாகவா இருக்கிறது. எப்போதும் சிரிக்க வேண்டும் மகளே" என்பார். அன்றிலிருந்து லீ ரொம்பவே அழுவதில்லை. 


வின்சென்ட் இறந்ததை அப்பாவுக்கு சொல்ல வேண்டும் என்று லீ நினைக்கிறார். அப்பாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. லீ  பெய்ஜிங்கில் மருத்துவமனையில் கூட இருக்கிறார். இப்போதாவது சொல்லி விடலாம் என்று நினைக்கிறார். ஆனால் சொல்லவில்லை. அப்பாவிற்கு கவிதைகளில் ஈடுபாடு இல்லை. ஆனாலும் கலிஃபோர்னியா வந்தபோது வின்சென்டின் கவிதையைப் படித்தார். லீயை விட நன்றாக எழுதுகிறான் என்றார்.


அப்பா இறந்து விடுகிறார்.  ஓரு வருடம் கழித்து லீ மீண்டும் பெய்ஜிங் வருகிறார்.  அப்பா வாழ்ந்த வீட்டுக்கு. அப்பா எழுதிய கட்டுரைகளைப் படித்துப் பார்க்கிறார்.அவர் அதிகம் பேசியதில்லை. ஒரே ஒரு முறை லீயை அணைத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் பெய்ஜிங் வந்து மூன்று வாரம் தங்கிவிட்டுக் கிளம்பும் போது.  தனக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பை அப்பாவிடம் பகிரவில்லை என்பதை லீ நினைக்கிறார்.  பகிருவதற்கு வார்த்தைகள் தான் தேவைப்படும். ஆனால் அப்பாவிடம் லீ மெளனத்தையே கற்றிருக்கிறார். அவரிடம் சொல்லாமல் விட்டது அவர் மேல் இருந்த கருணை. ஓரு விதத்தில் பார்த்தால் சொல்லாமல் விட்டது கொடுமை. சொல்லியிருந்தால் அப்பா அவருடைய மெளனத்தால் எதிர் கொண்டிருப்பாரா? இல்லை வேறு விதமாகவா?  அழுதிருப்பாரா? லீயுடன் சேர்ந்து.


லீக்குத் தெரியவில்லை.



தி சந்தானம்



Comments

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...