Skip to main content

திக்கற்ற பார்வதி

 நான் கல்லூரியில் புதுமுக வகுப்பில் இருந்தேன். வணிகத் திரைப்படங்களைத் தாண்டி எதுவும்  தெரியாது. அப்போது தான் திக்கற்ற பார்வதி என்ற திரைப்படச் சுவரொட்டியைப் பார்த்தேன். அந்தப் பெயரில் ராஜாஜியின் கதை படித்தது ஞாபகம் வந்தது. குடிப்பழக்கத்தின் கேட்டை விளக்கும் கதை. கருப்பனை "வேறே" வைத்தார்கள் என்று துவங்கும். அந்தக் கதைதான் திரைப்படம் ஆயிற்று என்று புரிந்து கொண்டேன். திரை அரங்கம் தொலைவில்  இல்லை.. அதன் பெயர் அப்போது ஜகதா. கையில் அபூர்வமாக காசு இருந்தது. தனியே கிளம்பி விட்டேன். அரங்கத்தில் கூட்டம் இல்லை. வெகு சிலர் தான் இருந்தார்கள். நிஜமாகவே காற்றாடியது. திறந்திருந்த மடங்கு கதவு வழியாக. மாலைக் காட்சி. இயற்கையாகவே இருட்டி விடும். எனவே கதவுகள் திறக்கப்பட்டு விடும்.


நடிகர் ஸ்ரீகாந்த் கருப்பனாக நடித்தார். அவருக்கு இணையாக பார்வதி என்ற பாத்திரத்தில் லட்சுமி. கருப்பு வெள்ளைப் படம். சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் என்பவர் இயக்கியிருந்தார். அப்போது கேள்விப் படாத பெயர். கேள்விப் பட்டிருந்தாலும் பெரிதாக ஒன்றும் இல்லை. திரை நாயகர்களைச் சுற்றித்தான் திரைப்படம் என்பதே அப்போதைய கோட்பாடு. 


கருப்பன் ஏழைக் குடியானவன். பார்வதியை மணக்கிறான். இருவரும் குடிசையில் வாழ்கிறார்கள். வண்டி மாடு வாங்கி ஓட்டிப் பிழைப்பு நடத்த எண்ணுகிறான். வட்டிக்கு கடன் வாங்குகிறான். எல்லாம் சரியாகச் செல்லும் போது குடிப்பழக்கம் ஏற்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக குடியில் மூழ்குகிறான். பிழைப்பை மறக்கிறான். பார்வதியின் கண்ணீருக்குப் பயன் இல்லை. வறுமை மேலும் வறுமை. இடையில் அவர்களுக்கு  ஒரு குழந்தை பிறந்து இறந்து விடுகிறது. கடன் கொடுத்தவனின் மகன் அடிக்கடி கருப்பன் இல்லாத சமயம் வருகிறான். பணத்தைத் திருப்பித் தர நெருக்குகிறான்.  அவனுக்குப் பார்வதி மேல் ஒரு கண். தொடர்நத வருகை. தொடரும் பார்வை. ஓரு நாள் பார்வதி அவனிடம் தன்னை இழக்கிறாள். விஷயம் அறிந்த கருப்பன் மிகுந்த ஆவேசம் கொள்கிறான். கடன் கொடுததவனின் மகனைக் கடுமையாகத் தாக்குகிறான். சிறை செல்ல நேர்கிறது. வக்கீலின் யோசனையைக் கேட்ட பார்வதி தானே தாக்கியதாக வாக்குமூலம் தருகிறாள். கருப்பன் விடுதலை ஆகிறான். பார்வதியை புறக்கணிக்கிறான். மனமுடைந்த பார்வதி தற்கொலை செய்து கொள்கிறாள்.


இந்தத் திரைப்படம் அந்த வயதில் ஓரு மாறுபட்ட அனுபவம். சப்தம் குறைவாக இருந்தது. எல்லோரும் சாதாரணமாகப் பேசினார்கள். காமிரா கோணங்கள் வித்தியாசமாக  இருந்தது.


ஒப்பனை மிகையாக இல்லை. லட்சுமியின் தோற்றமும் நடிப்பும் இயல்பாக இருப்பதாக தெரிந்தது. லட்சுமி தலையை இறுக்கிப் பின்னியிருந்தார். நெற்றியில் வட்டமாகப் பெரிய பொட்டு வைத்திருந்தார். அளவில் பெரிய மூக்குத்தி அணிந்திருந்தார்.  ஸ்ரீகாந்த் பாத்திரம் உணர்ந்து நடித்திருந்தார்.


படத்திற்கு இசை சிட்டிபாபு. வீணை இசை மேதை. பின்னணி இசை அதிர்ச்சி தராத மென்மையுடன் கூடி இருந்தது.


படத்தில் ஓரு பாடல் காட்சி. பார்வதி கருவுகிறாள். சிசு மெல்ல வளருகிறது.

சூல் கொண்ட மேகங்கள் அசைகிறது. மழை வரப் பார்க்கிறது. உருவடைந்த்

பிள்ளை  வெளிவர நேரம் பார்த்து இருக்கிறது.


இந்தப் பாடல் காட்சியில் லட்சுமி திறம்பட நடித்திருந்தார். தாய்மை பூண்ட பெண்ணின் இன்பம், வேதனை எல்லாம் முகத்தில் அழகாக வெளிப்படுத்தி இருந்தார். சிட்டிபாபுவின் இசை அருமை. நாட்டுப்புற இசையும் செவ்வியல் இசையும் சேர்ந்த அற்புதக் கலவை. மேலும் வாணி ஜெயராமின் குரல்.


திரையில் இந்தப் பாடலைக் கேட்டும் கண்டும் பிடித்தது. வானொலியில் ஒலிக்கும் போது வானொலிப் பெட்டியின் அருகே நின்று கேட்கப் பிடித்தது.


இன்றளவும்  பிடிக்கிறது.


கேளுங்கள். பாருங்கள்.




Comments

  1. ஆஹா, ஜெகதா நினைவுகள். அக்காவும் நானும் போனால் 90 பைசா டிக்கெட், அண்ணாவுடன் செல்கையில் 1.45 பால்கனி. பாப்கார்ன், கோக் செலவுல்லாம் கிடையாது. எவ்வளவு படங்கள். சில சமயம் தண்ணி குடிக்க அம்மா ஃப்ரெண்ட் மாமி, பேர் மறந்து போச்சு அவாத்துக்கு போவோம்.
    இந்த படம் பார்த்ததில்லை. லிஸ்ட்ல இருந்திருக்கலை. எப்டி கோவையாக உனக்கு நினைவு இருக்கு?

    ReplyDelete
    Replies
    1. நகரத்தில் ஓடித் தேய்ந்த படங்கள் நடுவாந்தர ஹீரோக்களின் படங்கள் பழைய படங்கள் அபூர்வமாக ஹிந்திப் படங்களும் ஜகதாவில் பார்த்தது உண்டு.

      Delete
    2. ஆமா டி வி எஸ் நகர்ல இருந்த வரைக்கும் நான்லாம் படம் ரிலீஸ் ஆனவுடன் டவுன் தியேட்டர்ல போய் பார்த்ததே இல்ல. எப்பவுமே செகண்ட் ரவுண்ட் ஜெகதால வரச்சதான். சில அரிதான சமயங்களில் ஜெய்ஹிந்திபுரம் முருகன்லயும் பாத்திருக்கோம். ஜெகதான்ன உடன் இன்னொரு நினைவு. நான் ஆறாவது படிக்கும் போது ஜெகாதாக்கு அருகில் உள்ள மருத்துவமனையில், ஜெனனி ஜெனனம். மழைத் தூரலில் ஓடியே ஆஸ்பிடலை அடைந்தப்ப, எங்க அம்மா ஜன்னல் வழியா குழந்தைய காமிச்சது அப்டியே ஞாபகம் இருக்கு.

      Delete
    3. தென்னையின் கீற்றைச் சலசலவெனச் செய்து வரும் காற்றே என்ற பாரதியின் கவிதை ஞாபகம் வந்தது. காற்றாய் மழைச் சாரலாய் எத்தனை நினைவுகள். அற்புதமான நருணத்தை நினைவு கூர்ந்தாய்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...