திருக்குறள் செய்த திருக்கூத்து என்று ஒரு கதை. புதுமைப்பித்தன் எழுதினார்.
அன்று இரவு என்ற கதைத் தொகுப்பில் அது ஒரு கதை. புதுமைப்பித்தன் எழுதும் முறையில் ஒரு அலட்சியம் இருக்கும். மேதமைக்கே உண்டான அலட்சியம். மேலும் கேலி. திருக்குறள் செய்த திருக்கூத்து என்ற கதை கூடுதலான அலட்சியத்தோடு எழுதப் பட்டது போலத் தோன்றும். வெற்றிலையின் நரம்பைக் கீறி எறிந்த மாதிரி.
வித்தல் ராவ் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ரகசிய போலீஸ் இன்ஸ்பெக்டர். சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆவது அவரது வாழ்க்கை லட்சியம். ஒரு நாள் கசங்கிய காகிதம் அவர் கையில் அகப்படுகிறது. அதில் சிகப்பு மசியில் இவ்வாறு எழுதப் பட்டிருக்கிறது.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூவும் மழை
வித்தல் ராவுக்கு இது ஏதோ புரட்சிக்காரர்களின் சதி வேலை என்று படுகிறது.உடை முள் புதரோடு தவழ்ந்து சென்று காலடிகளைத் தொடருகிறார்.
ஒரு சிறிய கூட்டம். நடுவே ஒரு இளைஞன். சர்வகலாசாலை அதாவது பல்கலைக் கழக மாணவன். கழுத்தில் சிகப்புப் பட்டி. இந்தக் கொடுமை.. நாளைக்கு என்று சில வாரத்தைகள் காதில் விழுகிறது. புரட்சிக் கும்பல்தான்.
சந்தேகமே இல்லை. வித்தல் ராவ் அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கிறார். மறுநாள் கிழவனைப் போல வேடமணிந்து கல்லூரி வளாகத்தில் நுழைகிறார். அங்கே மரத்தடியில் நேற்று பிரசங்கம் செய்த புரட்சிக்காரன் இருக்கிறான். அவன் பெயர் நடேசன். மாணவர் தலைவன். இங்கும் அவனைச் சுற்றிக் கூட்டம். ஒரு தீர்மானம் நிறைவேற்றி வயதில் சிறிய மாணவனிடம் கொடுத்து விடுகிறார்கள். பிரின்ஸ்பால் துரை விரைந்து மாணவர் தலைவனைச் சந்திக்க வருகிறார். கிழவர் வேடத்தில் இருந்த வித்தல் ராவ் அசம்பாவிதம் நடந்து விடக் கூடாது என்று புரட்சிக்காரன் நடேசன் மேல் பாய்ந்து வீழ்த்துகிறார். இவ்வளவில் பிரின்ஸ்பால் துரை குறுக்கே வருகிறார். மாணவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துப் போராடுவதைச் சொல்கிறார். இது எங்கள் பிரச்னை. நாங்கள் பேசி முடிவு செய்கிறோம். ரகசிய போலீஸுக்கு வேலையில்லை என்கிறார். கதை முடிகிறது.
திருக்குறள் என்ற புத்தகத்தை நான் பார்த்தது எனது எட்டாவது வயதில். கிராமத்து வீடு. கூடத்தில் நுழைந்தவுடன் இடப்புறம் ஒரு பெரிய கண்ணாடி பீரோ. கீழ்ப் பகுதியில் இழுப்பறை. இழுப்பதற்கு இரண்டு பெரிய பிடிகள். இழுத்தால் உள்ளே புத்தகங்கள். மணிப்ரவாள நடையில்-எழுத்தில் வைணவ நூல்கள். தடிமனான நூல்கள். புரியாது. இவற்றின் ஊடே சிகப்பு நிற காலிகோ பைண்டில் வெளிர் பச்சை அட்டை. ஓரே மாதிரி அடுக்கப்பட்ட புத்தகங்கள். ஐந்தாறு இருக்கும். அத்தனையும் திருக்குறள் புத்தகங்கள். பரிமேலழகர் உரையோடு. விருதுநகரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி நாடார் என்பவர் பதிப்பித்ததாக அதில் கண்டிருக்கும். எடுத்துப் படித்திருக்கிறேன். கடவுள் வாழ்த்தைத் தாண்டியதில்லை அந்த வயதில்.
ஆரம்பப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்கு வந்தேன். வகுப்புகள் துவங்கு முன்பு கூடுவோம். வழிபாட்டுப் பாடல். உறுதி மொழி. திங்கள் என்றால் கொடி வணக்கம். சில அறிவிப்புகள். இப்படி இருக்கும் நிரல். ஒவ்வொரு நாளும் திருக்குறள் மைக்கில் சொல்லப்படும். தமிழ் ஆசிரியர் மைக் முன் கோவில் சிலை போல இடுப்பை வளைத்து நிற்பார். ஒரு கை மைக்கைப் பற்றியும் பற்றாதது போல் இருக்கும். மற்றொரு கை ஆசி வழங்குவது போல் இருக்கும். தேவனிடமிருந்து ஒலிப்பது போல் குறள் அலை அலையாய் பரவும். பள்ளிக் கட்டிடத்தின் இரு புறமும் எதிரொலிக்கும். அன்றன்றைய குறள் பொதுவான கரும்பலகையில் எழுதி வைக்கப்படும்- நாங்கள் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொள்வோம். மறுநாள் காலைக் கூட்டத்தில் தமிழ் ஆசிரியர் ஏதாவது ஒரு வகுப்பின் மாணவி அல்லது மாணவனை முந்தைய நாளின் குறளை முன்னே வந்து சொல்லப் பணிப்பார். இப்படி ஒன்றா.. நூறா சில நூறா.. எத்தனையோ குறட்பாக்கள் மனதில் ஏறி விட்டது. வாய்மையாய்,அன்புடைமையாய்,இனியவையாய், நன்றி உணர்வாய்,அறமாய்,பொருளாய்,அத்தனையுமாய்….....
பள்ளியில் பாடமாய் வந்த குறள்கள் எல்லாமே அறமும் பொருளும்தான்.
மதுரையில் வீட்டருகே ஒரு ரிக ஷாகாரர் இருந்தார். கண்ணாடி அணிந்து உயரமாக இருப்பார். அவருடைய நண்பரான சக ரி்க் ஷாக்காரர் வயிற்று வலியால் துடித்தபடி இருந்தார். உயரமான ரிக் ஷாகாரர் அவரிடம் சொன்னார்.
கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
'புலாலை தவிருங்கள். வயிற்று வலி தீரும்" என்றார். இது அறத்துப் பாலில் வரும் குறள்.
பீஹாரில் பணியாற்றும் போது உயர் பதவியில் இருந்த அரசு அதிகாரியைச் சந்தித்தேன். அவர் தமிழர். ஏதோ பேசிக் கொண்டிருந்தவர் திடுமென Delegation பற்றி ஒரு அழகான குறள் உண்டு என்று நெற்றிப் பொட்டில் தட்டிக் கொண்டார். நான் உடனே
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
என்று சொன்னேன். சந்தோஷத்தில் துள்ளினார்.
அந்தக் குறள் பொருட்பாலில் அடங்கும்
இது போக, பயணத்தில் அரசுப் பேருந்துகளில் குறள் காணக் கிடைக்கும். .ஊரகப் பள்ளியின் வெள்ளைச் சுற்றுச் சுவர்களில் குறட்பாக்கள் எழுதப் பட்டிருக்கும்.
கடந்து போகும் போது கனல் பொறியாய் ஞானம் தரும்.
கல்லூரியில் நான் தமிழ் கற்கவில்லை. இன்பத்துப் பாலை யாரும் படித்தாரா தெரியவில்லை- அது விலக்கப்பட்ட கனி. பின்னிட்டு வளரந்த பின்பும் இன்பத்துப் பாலை புரட்டிக் கூட பார்த்ததில்லை. உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே என்று அந்நாளில் ஒரு திரைப் பாடல் வரியைக் கேட்டது உண்டு. இந்த வரியோடு இயைந்த குறள் ஒன்று உண்டு. பேச்சாளர்கள் துவைத்து எடுத்த அந்தக் குறள்.
யானோக்கும் காலை நிலம் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்.
மிஞ்சிப் போனால் இன்னொரு குறள் தெரியும்.
கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
சில நாட்களுக்கு முன் அறத்தையும் பொருளையும் தாண்டி இன்பத்துப் பாலைப் புரட்டிப் பார்த்தேன். ஒன்றே முக்கால் அடியில் எத்தனை சுவை. எத்தனை ஆழம் எத்தனை மேன்மை. காதலை வேண்டிக் கரைகின்றேன் என்று பாரதியின் சின்னக் குயிலி உருகியது நினைவில் வந்தது. சில பாக்களை பார்க்கலாம்.
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல்;அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு
மலர்அன்ன கண்ணால் முகம்ஒத்தி
யாயின் பலர்காணத் தோன்றல் மதி
கண்ணுள்ளிற் போகார்,இமைப்பின் பருவரார்;
நுண்ணியரெம் காத லவர்
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு
'புதிய வார்ப்புகள் 'என்று ஒரு திரைப்படம் நான் வேலையில் சேர்ந்த வருடம் வந்தது. அதில் ஓரு பாடல். நான் மேலே சொன்ன இன்பத்துப் பாலின் நான்கு குறன்களில் ஓன்றோடு பொருந்தும். பிரிவைச் சொல்லும்.
I read this myself went to my schooldays before 45 yrs. So nice
ReplyDeleteமதி : அருமை.
ReplyDelete( சில நாட்கள் ஓய்வு எடுத்தாயா ).
நன்றி மதி.. மனதில் பலதும் இருந்தது. எழுதவில்லை
Deleteநல்ல முயற்சி
ReplyDeleteமுயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்
Delete//உன்னோட இதயத்தக் கொடுத்தாத்தான் வாத்தியார் குங்குமம் கொடுப்பாராம்// பு வா ஃபேமஸ் டயலாக். நீங்க அப்ப p 13 ல இருந்தேளோ?
ReplyDeleteநா எப்பவும் கோட் பண்ற குறள் // எண்ணித் துணிக கருமம்//
குட்ஷெட் தெரு. நான் வேலையில் சேர்ந்து சில மாதங்கள் ஆகியிருந்தது ஜூலை 1979 may he
Deleteஅண்ணா! உங்களுடைய திருக்குறள் பற்றிய அனுபவங்களை பற்றி படித்தேன். நன்றாக இருந்தது.
ReplyDeleteஉங்களின் வார்த்தை பிரயோகத்தின் தரம் மிக அதிகம்.
இன்றைய தலைமுறையினர் இதனை தமிழில்தான் எழுதப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்ட வார்த்தைகளெல்லாம் தமிழில் கிடையாது என்று வாதிடவும் வாய்ப்புள்ளது.
நீங்கள் கருத்து தெரிவிக்கும் விதத்திற்கும் அதை படிப்பவர்கள் புரிந்துகொள்ளுவதற்கும் உள்ள இடைவெளி மிக மிக அதிகம்.
உங்கள் பணி சிறக்கட்டும்.
👍👍👍👏👏👏🙏🙏🙏
நான் கற்றதும் தமிழ். எழுதுவதும் தமிழ்தான். இயன்றவரை எளிமையாகவே எழுதுகிறேன். இன்றைய தலைமுறை சரியாகத் தமிழ் கற்கவில்லை என்பதற்கு நானும் நீங்களும் எல்லோரும் தலை குனிய வேண்டும்
Deleteநன்றி படித்ததற்கும் கருத்துக்களை பதிவிட்டதற்கும்
Delete