பள்ளியில் ஆசிரியர்களிடம் அடி வாங்காமல் தப்புதல் கடினம். சிலர் கையால் அடிப்பார்கள். சிலர் அடி ஸ்கேலால் விளாசுவார்கள். இது போக எளிமையாக காதைத் திருகுதல் கன்னத்தைக் கிள்ளி இழைத்தல் போன்ற முறைகளும் உண்டு. வள்ளியம்மை டீச்சர் கசகசவென்று இரைச்சல் செய்தபடி பெஞ்சில் நாங்கள் அமராமல் இருக்கும் போது தலையில் ஸ்கேலால் போடுவார். யார் இவரென்ற கணக்கு கிடையாது. வசந்தா டீச்சர் மனக்கணக்கில் தவறு செய்தால் அருகில் வரவழைத்து அடிவயிற்றில் கிள்ளுவார். இதெல்லாம் ஆரம்பப் பள்ளி வரை.
உயர்நிலைப் பள்ளி வந்த பின்பும் அடி விவகாரம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. பள்ளியில் மெளனமான நேரம் என்று உண்டு. மதிய இடைவேளையில் உணவு உண்டு பத்து நிமிடம் சென்று வகுப்புக்கு வர வேண்டும். யாரும் யாரோடும் பேசக் கூடாது. அமைதியாகப் பாடங்களைப் படிக்கலாம். யாரும் அசைந்தாலோ..ஏன் பக்கத்தில் திரும்பினால் கூட பெயரை கரும்பலகையில் எழுதி விடுவான் வகுப்பு லீடர். உடற்கல்வி ஆசிரியர் வகுப்பு வகுப்பாகச் சுற்றி வருவார். கையில் நீளமான குச்சி வைத்திருப்பார். பெயர் சொல்லி அழைத்தவுடன் வகுப்புக்கு வெளியே செல்ல வேண்டும். அவர் குச்சியை உயர்த்துவார். உள்ளங்கை சிவந்து போகும் நொடிப் பொழுதில்.
பத்து பன்னிரண்டு வயதில் திகில் படங்கள் பற்றி அதிகம் தெரியாது. பெரியவர்கள் திரைப்படத்திற்கு செல்லும் போது அவர்கள் அறியாமல் பின் தொடருவது வழக்கம். டிக்கெட் கவுண்டரை நெருங்கும் போது திடுமென தோன்றி திகைக்க வைப்பது உண்டு. வேறு வழியின்றி எனக்கும் டிக்கெட் வாங்கி அழைத்துச் செல்வார்கள். இது ஒரு யுக்தி. ஆனால் இந்த யுக்தி யார் நீ என்ற திரைப்படத்திற்கு செல்லுபடியாக வில்லை. அது திகில் படம். என் போன்ற சிறுவர்கள் பார்க்கலாகாது என்று சொல்லி தெரு முனையிலேயே திருப்பி அனுப்பப் பட்டேன்.
இப்படி இருக்க பள்ளியில் ஒரு ஓவிய ஆசிரியர் இருந்தார். என்னுடைய மொத்தப் பெயர் அவர் பெயரில் முதல் பாதி. ஓவியம் தவிர அழகாக புகைப்படம் எடுக்கும் திறமை உண்டு. பள்ளியில் பவ முக்கிய நிகழ்வுகளைக் காமிராவில் அவர் தான் பதிவு செய்வார். எங்களுக்கு ஓவியம் கற்றுத் தந்த பொழுதுகள் போக ஆங்கிலத் திரைப்படக் கதைகளைச் சுவையாகச் சொல்லுவார். எல்லாம் திகில் கதைகள். குறிப்பாக அவர் சொன்னது எல்லாம் டிராகுலா என்று சொல்லப் படும் ரத்தம் குடிப்பவன் பற்றிய கதைகள்.
ஓவிய ஆசிரியரின் மூக்கு ஒன்றும் அத்தனை பெரிது அல்ல. நாசித் துவாரங்கள் சிறியவை. சதுர பிரேம் கண்ணாடி அணிந்திருப்பார். எண்ணெய் தடவி நன்கு வாரப்பட்ட கிராப்பு. சின்னஞ் சிறிய கிருதா. டெர்லின் சட்டை அணிந்திருப்பார். தலையைச் சற்றே சாய்த்து சதுர பிரேம் கண்ணாடி வழியாக கண் இமைக்காமல் ஒரு பார்வை பார்ப்பார். டிராகுலாவாக நடித்த கிறிஸ்டிடோபர் லீ போல. எனக்கும் வீரராகவனுக்கும் திகிலுடன் சிரிப்பும் ஒரு சேர வரும். இரவில் கனவு வரும். கனவில் ஓவிய ஆசிரியர் வருவார். டிராகுலா பார்வை பார்ப்பார். கோரைப் பற்களால் பின்னங் கழுத்தில் கடித்து ரத்தம் உறிஞ்ச வருவார். திடுக்கிட்டு விழித்துக் கொள்வேன்.
ஓவிய வகுப்புகளில் மற்றெந்த வகுப்பிலும் இருப்பது போன்ற இறுக்கம் இருந்ததில்லை. காரணம் ஆசிரியர் சொல்லும் கதைகள். மற்றும் ஓவியம் வரைய எல்லோரும் செய்யும் ஆயத்தங்கள். சிலர் நீரிலே வண்ணம் குழைப்பார்கள். எனக்கு வாய்த்தது ஆறு வண்ணங்களில் அரை பென்ஸில்கள் அடங்கிய அட்டைப் பெட்டிதான். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். ஆனால் நான் வல்லவன் இல்லையே?
ஒரு முறை ஆசிரியர் அவரவர் கற்பனையில் தோன்றியதை வரையச் சொன்னார். எல்லோரும் வரைந்தார்கள். பறவை, வண்ணத்துப் பூச்சி, ரயில் எஞ்சின், பூ, பொம்மை என்றெல்லாம். நானும் ஒரு ஓவியம் வரைந்தேன். என்ன தெரியுமா? மர ஸ்டாண்டோடு கூடிய ஒரு கரும்பலகை. ஆரம்பப் பள்ளி காலத்தில் எனது நினைவில் பதிந்த கரும்பலகை. பெருமையுடன் ஆசிரியரிடம் சென்று காண்பித்தேன். பார்த்தார். அருகில் வரச் சொன்னார். அரைக்கைச் சட்டை அணிந்திருந்தேன். கையின் பின்புறம் தனது கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் அகப்பட்ட சதையை நெருக்கினார். வலித்தது.
தண்டனைகளுக்கு காரணம் இருந்தே தீரும் என்று கட்டாயம் இல்லை. நமக்கு என்ன காரணம் என்று புரிய வேண்டிய அவசியமும் இல்லை.
Nice reading .
ReplyDeleteI did a minor edit to onne of your sentences:
தண்டனைகளுக்கு காரணம் இருந்தே தீரும் என்று கட்டாயம் இல்லை.
Ok Thank you
Deleteமதி : அருமை.
Deleteநீ வல்லவன் தான்.
நன்றி மதி
Delete