மரத்தடியில் மம்மூட்டி நின்றிருந்தார். கை விரல்களில் பீடி புகைந்து கொண்டிருந்தது. அவரைச் சுற்றி நாலைந்து பேர். அந்திப் பொழுது. அப்போது சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டப வளாகத்தின் விளக்குகள் ஏற்றப் பட்டன. மம்மூட்டியின் கரிய தலைமுடி வெளிச்சத்தில் மினுங்கியது.
உலகத் திரைப்பட விழா அன்று.பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஷாகா பிரஷோகா (மரத்தின் கிளைகள்) என்ற படம் திரையிடப்பட இருந்தது. இசையும் இயக்கமும் சத்யஜித் ரே.
நானும் ஏ.ஜி. அலுவலகத்தில் பணி புரிந்த நண்பர் சுரேஷும் மண்டபத்துக்கு வெளியே இருந்தோம். மம்மூட்டியைப் பார்த்தபடி வேறொரு மரத்தடியில். உள்ளே நுழைய அனுமதிச் சீட்டு எங்களிடம் இல்லை. ரேயின் படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தது. தமிழக அரசு விழாவை நடத்தியது. அரசு அலுவலர்கள் தான் அரங்க நுழைவில் இருப்பார்கள். படம் துவங்கும் போது உள்ளே அனுமதித்து விடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் அப்படி நடக்க வில்லை. நுழைவில் தடுத்து நிறுத்தப் பட்டோம்.
என்ன செய்வது என்று தெரியவில்லை. எனது நண்பன் ஐ.ஓ.பி நரசிம்மன் அங்கே தென்பட்டது தற்செயல். விஷயத்தைச் சொன்னேன். அவன் என்னையும் சுரேஷையும் அரங்க நுழைவுக்கு அழைத்து வந்தான். முன்னதாக அனுமதி மறுத்த அலுவலரிடம் இவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றான் தோரணையாக. நீங்கள் யார் என்று அவனைக் கேட்டார். தனது பெரிய கண்களால் அவரை ஏறிட்டுப் பார்த்தான் நரசிம்மன். ஒரு வினாடி தாமதித்து I am a writer என்றான். உடனே நாங்கள் உள்ளே அனுமதிக்கப் பட்டோம். திரைப்படம் அப்போதுதான் துவங்கி இருந்தது. இருட்டில் துழாவி இருக்கையில் சென்று அமர்ந்தோம். படத்தின் டைட்டில் ஓடிக் கொண்டிருந்தது. ஏற்கனவே சொன்னபடி படத்தின் இசையும் ரே தான். ரேயின் இசை அறிவு நுணுக்கமானது. அவர் மேற்கத்திய செவ்விசையை நன்கு உள்வாங்கியவர். டைட்டில் திரையில் ஓடியது. புரிதலுடன் நண்பர் சுரேஷின் கைகளை அழுத்தினேன். ஒத்த ரசனை கொண்ட இருவருக்கிடையில் ஆன சங்கேத மொழியாக அது அமைந்தது.
சாதாரணமாக சத்யஜித் ரே படங்களில் வசனத்தை விட காட்சிப் படுத்துதலே முதன்மை பெறும். மாறாக இந்தப் படத்தில் உரையாடல்கள் அதிகம் இருந்தது. நீண்ட உரையாடல்கள் ரஷ்ய நாவல்களில் வருமே அது போல. அதே போல வெளிப்புறக் காட்சிகளும் அதிகம் இல்லை. பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் தான். இதயத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருந்ததால் அதிகப்படியான சிரமங்களை ஏற்க முடியாத நேரம். என்றாலும் படத்தில் கலைத்தன்மை சிறிது கூட குறையவில்லை.
ஆனந்த் மஜூம்தார் சமூகம் பெரிதும் மதிக்கும் மனிதர். முதுமை கூடி வாழ்வு அனுபவம் நிறைந்து விளங்குபவர். நேர்மை வாழ்நாள் முழுதும் அவருக்கு வழிகாட்டும் விளக்காக இருந்தது. அவருடைய நான்கு மகன்களுக்கும் அவர் போதித்தது நேர்மையே. இப்படிப் பட்ட மனிதருக்கு விருது கிடைக்கிறது. அதைப் பாராட்டி கூட்டம் நடக்கிறது. ஒவ்வொருவராகப் பாராட்டிப் பேசுகின்றனர். ஆனந்த் மஜும்தாருக்கு வழக்கத்துக்கு அதிகமாக வியர்க்கிறது. அவரைப் பேச அழைக்கிறார்கள். இருக்கையிலிருந்து எழ முடியாமல் முன்புறம் சரிகிறார்.
ஹார்ட் அட்டாக்.
ஆனந்த் மஜும்தாருக்கு நான்கு மகன்கள். அவருடன் வசிக்கும் மகன் பெயர் ப்ரஷாந்தோ. விபத்து ஒன்றில் மூளையில் அடிபட்டு பித்துப் பிடித்தவனாக இருக்கிறான். மற்றவர்களுக்கு அவரவர் வியாபார சாம்ராஜ்ஜியங்கள். அப்பாவின் ஹார்ட் அட்டாக் சேதியைக் கேட்டு அனைவரும் வருகிறார்கள். முதல் கட்ட சிகிச்சை முடிந்து பெரியவர் வீட்டில் இருக்கிறார். அவருடைய படுக்கை அறை குட்டி மருத்துவ மனையாக மாறியிருக்கிறது. வீட்டோடு டாக்டர் மற்றும் நர்ஸ்.
படுக்கையறையில் ஒவ்வொருவராக டாக்டர் அனுமதிக்கிறார். ஒரு சம்பிராதாயமாக உடல் நிலையை விசாரிக்கிறார்கள். அதில் ஒட்டுறவு இல்லை. பணத்தைத் துரத்தும் வாழ்க்கையில் பெரியவரின் சுகக்கேடு ஒரு குறுக்கீடு. அவ்வளவே. இந்த இடத்திலிருந்து மீண்டு தங்கள் அன்றாட வாழ்வைத் தொடரும் அவசரத்திலேயே அனைவரும் இருக்கிறார்கள்.
சாப்பாட்டு மேஜையில் ஒரு காட்சி. திரைப்படத்தில் முக்கியமான காட்சி. கதையின் மையப் புள்ளியை நோக்கி நம்மை நகர்த்தும் காட்சி. வாழ்வில் வெற்றி அடைய கொஞ்சம் நேர்மையைக் கை விட்டால் தான் என்ன? நேர்மையை லட்சியமாகக் கொண்டவரின் வாரிசுகள் கொஞ்சம் சூதாடுகிறார்கள். கொஞ்சம் வரி ஏய்ப்பு செய்கிறார்கள். ஆமாம்.. முழுவதும் நேர்மையாக இருக்க வேண்டும் என்றால் பித்தனாக இருக்க வேண்டும். பிரஷாந்தோவைப் போல.
காட்சி மூலம் ரே எழுப்பும் கேள்விகள் ஆழமானவை. நேர்மையின்மையை சமூகம் அனுமதிக்கிறது. மெல்ல மெல்ல ஏற்கிறது. அது மிகவும் சாதாரணமான விஷயம் ஆகிவிடுகிறது.
மேதமை எளிமையானது. சிக்கல்கள் அற்றது. சிறுவனின் உள்ளம் போல் களங்கம் அற்றது. கேள்விகள் எழுப்புவது.
ரேயும் அப்படித்தான். கேள்விகள் எழுப்புகிறார்.
தி சந்தானம்
அருமை அருமை நுணுக்கமான செரிவான பார்வையின் பதிவு
ReplyDeleteநன்றி படித்ததற்கும் இங்கே பதிவிட்டதற்கும்
ReplyDelete