என்னுடைய முந்தைய பதிவைப் படித்துவிட்டு தம்பி சேகர் எழுதியிருந்தான். தீவிரமாக மொழிபெயர்ப்பில் இறங்கலாமே என்று. நண்பர் ராமச்சந்திரன் பாப்லோ நெருடாவின் The Captain's verses என்ற தொகுப்பில் தான் 'உனது சிரிப்பு" என்ற கவிதை இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டார். இது எனக்கு ஒரு உத்வேகத்தைத் தந்தது. The Captain's Verses ஐ தேடினேன். கிடைத்தது. தேடுவதெல்லாம் கிடைத்து விடுகிறது உடனே. அதற்குப் பெரிதும் மகிழ முடிவதில்லை. The Captain's Verses ல் 43 கவிதைகள் இருந்தன. கிடைத்ததை எல்லாம் மொழி பெயர்க்க மனம் துடிப்பதில்லை. அது முடிவதும் இல்லை. எனது தேர்வாக ஒரு கவிதை
இறந்து போன பெண்
திடீரென்று நீ இல்லாமல் போனால்
திடீரென்று நீ வாழவில்லை என்றால்
நான் வாழ்ந்து கொண்டுதான் இருப்பேன்
நான் துணியவில்லை
இதை எழுதத் துணியவில்லை
நீ இறந்து போனால்
நான் வாழ்ந்து கொண்டுதான் இருப்பேன்
ஏனென்றால்
எங்கே ஒரு மனிதனுக்குக் குரல் இல்லையோ
அங்கே நான் குரலாக வேண்டும்
எங்கே கறுப்பர்கள் தாக்கப் படுகிறார்களோ
அங்கே நான் இறந்தவனாக இருக்க முடியாது
எனது சகோதரர்கள் சிறை செல்லும் போது
நானும் அவர்களோடு செல்ல வேண்டும்
வெற்றி,
எனது வெற்றி அல்ல,
பெரும் வெற்றி வந்து சேரும் போது
நான் மெளனியாக இருந்தாலும்
பேசத்தான் வேண்டும்
நான் குருடாக இருந்தாலும்
அது வருவதைப் பார்க்க வேண்டும்
இல்லை… என்னை மன்னித்து விடு..
நீ வாழவில்லை என்றால்..
நீ.. எனது அன்பே நீ,
இறந்து விட்டிருந்தால்
எல்லா இலைகளும் என் நெஞ்சில் மேல் விழும்
என்னுடைய இதயத்தில்
இரவும் பகலும் மழை பொழியும்
பனி எனது உள்ளத்தை எரிக்கும்
நான் குளிரோடும் நெருப்போடும்
இறப்போடும் பனியோடும் நடப்பேன்
எனது கால்கள் பீடு நடை போட விரும்பும்
நீ உறங்கும் இடம் நோக்கி
ஆனால்
நான் வாழ்ந்து கொண்டபடியே இருப்பேன்
ஏனென்றால்
யாவற்றுக்கும் மேலாக
நான் அடங்காதவனாக இருக்க வேண்டும் என்றே
நீ விரும்பினாய்
அன்பே! ஏனென்றால் உனக்குத் தெரியும்
நான் ஒரு மனிதன் அல்ல
எல்லா மனிதரும் ஆவேன்
பாப்லோ நெருடா
ஸ்பானிய மூலம்
ஆங்கிலம் வழியாக
தமிழில்
தி சந்தானம்
You have brought the soul of the poem.
ReplyDeleteI enjoyed reading this. Congratulations
Thank you Ram I treasure your comments
Delete