Skip to main content

உனது தோணி

 இன்று பகல் பாத காணிக்கை என்ற திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். மெகா டிவியில் ஒளிபரப்பானது. படத்தில் பாடல்கள் அருமையாக இருக்கும். ஆனால் ஒரு பாடலைக் கூட ஓரிரண்டு வரிகளுக்கு மேல் ஒளிபரப்ப வில்லை. ஓயாது விளம்பரங்கள். நான் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த பாடல் உனது மலர் கொடியிலே. வரவேயில்லை. 

அதிர்ஷ்ட வசமாக அந்தக் குறை தீர்ந்தது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்தப் பாடலைப் பற்றி ஒரு அழகான கட்டுரையை  தனது இணைய தளத்தில் இன்று வெளியிட்டு இருக்கிறார். சில பகுதிகளை அப்படியே கீழே தருகிறேன்.


உனது மலர் கொடியிலே

எனது மலர் மடியிலே

உனது நிலா விண்ணிலே

எனது நிலா கண்ணிலே

பாதகாணிக்கை திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் பாடல். எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை. பி.சுசிலா எல்.ஆர்.ஈஸ்வரி இருவரும் இணைந்து மிக அழகாகப் பாடியிருப்பார்கள்.

அந்தப் பாடலை உடனே கேட்க வேண்டும் என இணையத்தில் தேடி பாடலைக் கேட்டு முடித்தேன். ஆனால் மனம் திருப்தி அடையவில்லை. மீண்டும் மீண்டும் அதே பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி இருவரது குரலையும் மாற்றி மாற்றி எனது காந்திமதி சித்தி பாடுவார். அந்த ஞாபகம் எழுந்தது. இன்று அவரில்லை. ஆனால் பாடலின் வழியே அவரது இனிய முகம் தோன்றி மறைகிறது.

நினைவில் வாழுகிறவர்களை எழுப்புவது தான் பாடலின் வேலையா.

உண்மையில் இந்தப் பாடலின் வழியே எதையோ தேடுகிறேன். எதையோ அடைகிறேன்


.

பாடல் ஒரு தூண்டுதல் மட்டுமே.

கேட்கும் போது அடையும் மகிழ்ச்சியை யார் புரிந்து கொண்டால் என்ன, புரியாமல் போனால் என்ன.

காதலனை நினைத்துப் பாடும் பாடல் என்றாலும் இரண்டு பெண்களும் இருவேறு உணர்ச்சி நிலையின் அடையாளமாக இருக்கிறார்கள். பாடலைக் கேட்கும் போது இரண்டு சிறுமிகளின் விளையாட்டு போலவும் தோன்றுகிறது.

உனது மலர், எனது மலர் என்று அவர்கள் மாறி மாறி பூப்பந்தை வீசுவது போலச் சொற்களை வீசிக் கொள்கிறார்கள்

பாடலைக் கேட்கும் நாமும்,

எனது மலர் எங்கேயிருக்கிறது

எனது நிலா எங்கேயிருக்கிறது என்று இந்த விளையாட்டிற்குள் இணைந்து கொள்கிறோம்.

எளிய வரிகளின் வழியே ஆழமான துயரை, துள்ளியாடும் மகிழ்ச்சியை எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார் கண்ணதாசன் என வியப்பாக இருக்கிறது.

கண் மயங்கிப் பயணம் போகும்

உனது தோணி கடலிலே

என்ற வரியில் வரும் கண்மயங்கிப் பயணம் போவது பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். எப்போதாவது கிடைக்கும் அரிய அனுபவமது. .

காலம் பார்த்து வந்து சேரும்

எனது தோணி கரையிலே என்று சாவித்திரி பாடும் போது காலம் பார்த்து வந்து சேரும் தோணி தான் காதல் என்பது ரசிக்க வைக்கிறது.

சந்தோஷத்தில் துள்ளியபடியே விஜயகுமாரி பாடுகிறார்

ஆற்று வெள்ளம் தடையை மீறிப்

பாய்ந்து செல்லும் அவரிடம்

அதன் மறுமொழியாகச் சாவித்திரியிடம் வெளிப்படுவது சங்க இலக்கியத்தில் வரும் பெண்ணின் காதலைப் போன்ற பதில்.

ஆசையா……..இன்னுமா ..

அந்த நெஞ்சம் என்னிடம்

இரவில் கேட்கும் போது பாடலின் சுவை மாறிவிடுகிறது.

இதே பாடலை முன்னொரு நாள் ரேடியோவில் கேட்டிருக்கிறேன். அன்று இந்த நெருக்கத்தை அடையவில்லை.

பாடலை அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். இருவரின் வீடு. உடைகள். காதணிகள். நெற்றிப்பொட்டு. நெளியும் கூந்தல். திரைச்சீலையை விலக்கி வெளியே வரும் சாவித்திரியின் வலது கன்னத்தில் படிந்துள்ள பிரிவுத்துயரம். நிழலும் வெளிச்சமும் கலந்து அவர் மீது படரும் விநோதம். சாவித்திரியின் முகமும் ரோஜாவும் கொண்ட அந்தக் கால க்ளோசப். (இன்றைக்கு இது போன்ற காட்சிகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டது. என்றாலும் அந்த அழகு வசீகரமாகவேயிருக்கிறது.) விஜயகுமாரி கண்களில் சந்தோஷம் மின்னுகிறது. அவரது வீட்டின் பிரம்பு நாற்காலி. பெரிய ஜன்னல்கள். பொம்மைப்படகு. பாடலின் ஊடாகத் தென்படும் இரண்டு பழங்கள். கண்ணாடியில் மூன்றாகத் தெரியும் அவர்களின் முகம். ஒவ்வொரு பிரேமும் மனதுக்கு இதம் தருவதாகவே இருக்கிறது

இரவிலே என் நண்பரை அழைத்து இந்தப்பாடலைக் கேட்கச் சொன்னேன். அவர் சிரித்தபடியே உங்களுக்கும் வயதாகிவிட்டது என்றார்.

உண்மை தான் என்று சிரித்தேன்

புதிய உடைகள் நமது வயதை மறைத்துக் கொள்வதைப் போல பழைய பாடல்கள் நம் வயதைக் காட்டிக் கொடுத்துவிடுகிறதோ என்னவோ


இவ்வாறு எஸ் ராமகிருஷ்ணன் எழுதி முடித்திருந்தார்


இனி பாடல்

 


Comments

  1. நினைவில் வாழ்பவர்களை எழுப்புவது தான் பாடலின் வேலை யா - அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதி படித்ததற்கும் பாடலைக் கேட்டதற்கும்

      Delete
    2. நன்றி மதி படித்ததற்கும் பாடலைக் கேட்டதற்கும்

      Delete
    3. மறதி என்ற வெண்பரப்பில் நினைவு என்ற கரிய மசியால் எழுதுகிறோமோ என்று சில சமயம் தோன்றுகிறது

      Delete
  2. அப்போதைய பாடல்களில் வரிகள் இனிமையான இசை நடிப்பு எல்லாமே நம்மை பிரபிக்க வைக்கும்

    ReplyDelete
  3. S கிருஷ்ணன்August 18, 2022 at 11:40 AM

    விஜயகுமாரியின் நியாயமற்ற மகிழ்ச்சி மன வருத்தத்தை தீவிரப் படுத்துகிறது

    ReplyDelete
    Replies
    1. விஜயகுமாரி ஆற்றில் குதித்து சிறுவன் கமலஹாசனைக் காப்பாற்றுவார். பின்பு உயிரை விடுவார். உயிர்த் தியாகம் எல்லாவற்றையும் சமன் செய்துவிடும்

      Delete
  4. I have shared the post in my college friends WhatsApp group.

    I too have a list of favourite b&w film songs.

    There are many Kannadasan,p.suseela and msv combination immortal songs.

    After some latest developments I am more dragged towards these songs ...

    Thank you for sharing

    ReplyDelete
    Replies
    1. True Everyone has a list of such favourites. To each song is linked a memory and soul stirring moment. I know Malare Malarw theriyathu is one of your favourites

      Delete
  5. Great song. Meaningful. You have kindled our thoughts for a recall to vie this movie, Thankyou

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...