பதின் வயதில் வாரப் பத்திரிக்கைகள் படிக்கக் கிடைக்கும். அதில் வரும் கதைகளைப் படிப்பது சுவாரசியமாக இருக்கும். கதைகளோடு அதற்காக வரைந்த ஓவியங்களும் மனதில் தங்கி விடும். ஜெயகாந்தனின் கதைகள் எனக்கு அறிமுகமானது விகடன் பத்திரிக்கை மூலமாகத்தான். குறிப்பாக சீசர் என்ற அவரது கதையைப் படித்ததும் அதற்கான கோபுலுவின் ஓவியமும் இன்றளவும் நினைவில் இருக்கிறது. ஆனால் நான் இங்கே சொல்லப் போவது உமாசந்திரன் எழுதிய கதையைப் பற்றி. அது கல்கி பத்திரிக்கையில் தொடராக வந்தது. முள்ளும் மலரும் தான் அந்தக் கதை. அப்போது எனக்குப் பத்து வயது இருக்கும். வாரப் பத்திரிக்கை வந்த உடன் அதைக் கைப்பற்ற பெரும் போராட்டமே நடக்கும். ஒருவாறு கையில் கிடைத்தவுடன் பெரும் ஆர்வத்தோடு படிப்பது உண்டு. விஞ்ச் என்ற ஒன்றைப் பற்றி நான் அறிந்தது கொண்டது இந்தக் கதையைப் படித்த போது தான். அதை இயக்கும் காளியண்ணன் தான் இந்தக் கதையின் நாயகன். முரட்டு சுபாவம் கொண்டவன். அவனுடைய தங்கை வள்ளியிடம் கண்டிப்பும் பாசமும் காட்டும் மனிதன். இருளர்கள் இருக்கும் முள்ளிமலைப் பகுதிக்கு அவ்வப்போது செல்வான். அந்த எளிய மனிதர்களோடு அன்பு பாராட்டுவான். அவர்களோடு ஒன்று சேர்ந்து குடித்து மகிழ்வான். வள்ளியின் தோழி மங்கா. வாய்த்துடுக்கான பெண். காளியண்ணனைக் கண்டு அஞ்சாமல் மனதில் பட்டதை நேரிடையாக பேசக் கூடியவள்.
விஞ்ச் ஆபரேட்டர் காளியண்ணனுக்கும் புதிதாகப் பணியில் சேர்ந்திருக்கும் இளம் பொறியாளர் குமரனுக்கும் ஒத்து வருவதே இல்லை. இதற்கு ஏற்ப
ஒரு சம்பவம். குமரன் விஞ்ச்சுக்காக கீழே காத்திருக்கிறான். எத்தனை முறை அழைத்தும் விஞ்ச் கீழே வரவே இல்லை. காரணம் மங்கா. காளியண்ணளோடு வம்பு செய்யும் அவள் அவனுடைய வாட்சை எடுத்துக் கொண்டு ஓடி விடுகிறாள். காளியண்ணன் அவளைத் துரத்திச் செல்கிறான். சாப்பாடு கொண்டு வந்த வள்ளி விஞ்ச்சை இயக்க நேரிடுகிறது.
குமரன் அமைதியாக காளியண்ணனிடம் தவறைச் சுட்டிக் காட்டுகிறான். காளி தன் இயல்புப் படி எதிர்த்து வாதிடுகிறான். பின்பு வள்ளியிடம் கோபிக்கிறான். குமரன் காளியண்ணனுக்கு வேலையில் தவறு செய்ததற்காக எச்சரிக்கைக் கடிதம் கொடுக்கிறான்.
வள்ளியும் மங்காவும் வெள்ளிக் கிழமை தோறும் கன்னிமலை கெளரி அம்மன் கோவிலுக்குப் போவது வழக்கம். வழியில் பூத்துக் குலுங்கும் மலர்களைப் பறித்து மாலையாக்கி அம்மனுக்கு சூட்டி வணங்குவாள் வள்ளி.
எப்போதும் டிராலியில் சென்று வருவார்கள். குமரன் ஏற்கனவே காளியண்ணனைக் கடிந்து கொண்டதால் இருவரையும் டிராலியில் ஏற்ற மறுக்கிறான். அவர்கள் வெகு தூரம் நடந்து கோயிலை அடைகிறார்கள். யாரும் வரவில்லை என்று கோவிலைப் பூட்ட நினைத்த பூசாரி இவர்கள் வருகையைக் கண்டு தாமதிக்கிறார். வழிபாடு முடிந்து திரும்பும் போது குமரன் அவனது நண்பன் வீரமணி வீரமணியின் தங்கை உடன் கோவிலுக்கு வருகிறார்கள். குமரன் அவர்களிடம் கொஞ்சம் பொறுத்தால் எல்லோரும் டிராலியிலே சேர்ந்து போய்விடலாம் என்கிறான். அனைவரும் டிராலியில்
ஒன்றாக சென்று இறங்குகிறார்கள். வள்ளி இவர்களுடன் வந்ததை காளியண்ணன் விரும்பவில்லை. வள்ளியின் மேல் உள்ள கோபத்தைக் காண்பிக்காமல் குமரனிடம் நீங்களே ரூல் போடுவீங்க, அப்புறம் நீங்களே மாத்துவீங்க என்கிறான். அன்று இரவு காளியண்ணன் இருளர் பகுதிக்கு கூத்து பார்க்கப் போகிறான். அவனே கூத்துக் கட்டவும் நேரிடுகிறது. கூத்து நடக்கும் போது புலி.. புலி என்று ஒரு பெண் அலறும் குரல் கேட்கிறது. அது மங்காவின் குரல். புலி கூட்டத்தைக் கண்டவுடன் பாறையில் தயங்கி நிற்கிறது. காளியண்ணன் கோடாரியோடு எதிர்த்து நிற்கிறான். மங்கா கல்லெடுத்து புலி மேல் எறிகிறாள். சீண்டப்பட்ட புலி காளியண்ணன் மேல் பாய்கிறது. அவன் விலகிய போது அவனது இடது தோள்பட்டை புலி நகத்தால் கிழிபடுகிறது. காளியண்ணன் கீழே விழுந்த புலியைக் கோடாரியால் தாக்கிக கொன்று விடுகிறான். இருளர்கள் காயத்திற்கு பச்சிலை வைத்துக் கட்டுகிறார்கள். குமரன் டவுன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல உதவுகிறான். காளியின் கையை எடுக்க வேண்டியதாகிறது. ஆனால் விஞ்ச் இயக்கும் பணி தொடருகிறது. காரணம் குமரன் செய்த பரிந்துரை. இருந்தும் அவனைக் காளி புரிந்து கொண்டான் இல்லை.
ஒரு முறை சுருளியாற்றில் வெள்ளம் பெருகுகிறது. குமரன் அணையின் இரும்புக் கதவுகளை உயர்த்த முயலும் போது ஆற்றில் அடித்து வந்த மரம் அவனைச் செயல்பட விடாமல் அழுத்துகிறது. அவன் உயிருக்கே ஆபத்து நேரும் போல் இருக்கிறது. வள்ளி சமயோசிதமாகச் செயல்பட்டு அவனைக் காப்பாற்றுகிறாள்.
இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பின் வள்ளி தனியே நடந்து வரும் போது குமரன் அவளைச் சந்திக்கிறான். தன் மனதில் அவள் இருப்பதைச் சொல்கிறான். அவளை மணம் புரிய விரும்புகிறான்.மெல்லிய இயல்பு கொண்ட அவளுக்கு ஆனந்தமும் திகைப்பும் ஏற்படுகின்றன. இது நடவாது என்று விலகிச் செல்கிறாள். குமரன் மேல் அவள் வைத்திருக்கும் மதிப்பு குன்றவே இல்லை.
வள்ளியும் குமரனும் பேசிப பழகுவது காளியண்ணன் காதுக்கு எட்டுகிறது. அவன் மூலைக்கடை முனியாண்டியை லள்ளிக்குத் திருமணம் செய்ய முடிவு செய்கிறான். முனியாண்டி பரிசம் போட்டும் விடுகிறான். இதை அறிந்த குமரன் வேலையைத் துறந்து ராணுவத்தில் சேர்ந்து விடுகிறான். இங்கே முனியாண்டி இரவோடு இரவாக மாயாண்டியின் (இந்த அப்பாவி காளியண்ணன் லீவு போடும்போது விஞ்ச்சை இயக்குவது வழக்கம்) மனைவியோடு ஓடி விடுகிறான். காளியண்ணன் மனம் உடைந்து நிற்கிறான்.
மூன்று வருடங்கள் கழிகின்றன. குமரன் ராணுவத்திலிருந்து விடுவிக்கப் படுகிறான். தான் வேலை பார்த்த இடத்திற்கு மீண்டும் வருகிறான்.பழைய ஞாபகங்களைத் தேடி. மங்காவிற்கும் காளிக்கும் திருமணம் ஆகி ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. வள்ளிக்குத் திருமணம் ஆக வில்லை. அவளும் குமரனை நினைத்தபடியே இருப்பது புரிகிறது. மங்காவின் முன்னிலையில் கெளரியம்மன் கோவிலில் இருவரும் மணம் முடிக்கிறார்கள். காளியண்ணன் இதை சாதாரணமாக எதிர் கொள்கிறான். வள்ளியும் குமரனும் ஊருக்குக் கிளம்புகிறார்கள். டிராலியில் அவர்களை வழியனுப்ப மங்காவும் காளியண்ணனும் வருகிறார்கள். வள்ளியையும் குமரனையும் ஏற்றிக் கொண்டு டிராலி கிளம்புகிறது. ஊர்கோலம், கல்யாண ஊர்கோலம் என்று காளி முணுமுணுக்கிறான். சம்மட்டி ஓன்றால் அடித்து உருக்குக் கயிற்றின் இணைப்பைத் துண்டிக்கிறான். இதை பார்த்த மங்கா அதிர்ச்சி அடைகிறாள். உருக்குக் கயிற்றை கைகளால் பிடித்து டிராலியை நிறுத்த முயல்கிறாள் ஆபத்தை அறியாது. காளி இதைத் தடுக்க எத்தனிக்கிறான். ஆனால் இருவருமே உள்ளே இழுக்கப் படுகிறார்கள். சத்தம் கேட்டு ஓடி வருபவர்கள் டிராலியை நிறுத்தி காளி மங்கா இருவரையும் மீட்கிறார்கள். ஆனால் இருவர் உயிரும் பிரிந்து விடுகிறது. ஆபத்திலிருந்து தப்பிய பது மணத் தம்பதியர் வருந்துகின்றனர்.
கதை முடிகிறது.
கதையில் வரும் இடங்களாகிய உச்சிக் கடவு,வேலன் கடவு, உடும்புக் கொட்டகை, அத்தி மர மேடு முள்ளி மலை,கன்னிமலை,வீரன் வாய்க்கால்
எல்லாம் மனதை விட்டு நீங்கவில்லை. கதை மாந்தர்களைப் போலவே. அது போலவே பூத்துக் குலுங்கும் மலர்களும் கூடிக் கலையும் மேகத் திரள்களும் நீர்த் தொகுதிகளும்.
உமா சந்திரனின் இந்தக் கதைக்கு கல்கி வெள்ளி விழாப் பரிசு ராஜாஜியின் கரங்களால் வழங்கப் பட்டது. உமா சந்திரனின் நிஜப் பெயர் பூர்ணம் ராமச்சந்திரன். நாடகத் துறையில முத்திரை பதித்த பூர்ணம் விசுவநாதனின் சகோதரர்
இந்தக் கதைக்கு ஓவியம் வரைந்தவர் கல்பனா. வள்ளி, மங்கா, காளியண்ணன், குமரன் என்ற கதை மாந்தர்களுக்கு இவர் கொடுத்த உருவம் மனதில் நிற்கிறது. அதிலும் இறுதி அத்தியாயத்தில் மங்கா உருக்குக் கயிற்றை இழுத்து நிறுத்தப் போராடுவதை நுட்பமாக வரைந்திருப்பார்.
அன்பும் எளிமையும் சேர்த்து வடிக்கப் பட்ட கதாபாத்திரங்களின் அறிமுகம் சிக்கல்கள் அற்ற பிள்ளை உள்ளத்தைக் கவருவதாக இருந்தது.
தி சந்தானம்
மதி
ReplyDeleteஅருமை.
ReplyDeleteமகேந்திரனின் அழகான படைப்பில் படமாகப் பார்த்தபின்,
இந்த கதையை படித்து மகிழ்ந்தேன்.
நன்றி மதி. தமிழ்த் திரையுலகிற்கு அற்புதமான தருணங்கள் அப்போது வாய்த்திருந்தது
Deleteமுள்ளும் மலரும் கதை படித்து வெகு காலம் ஆகி விட்டது. இன்று நினைவு படுத்திக் கொண்டேன். மேலும் முள்ளும் மலரும் படமும் இரண்டு தடவை பார்த்தேன். நல்ல கதை நல்ல படமாக்கல். ரசித்தேன்.
ReplyDeleteநன்றி படித்ததற்கும பதிவிட்டமைக்கும்
Deleteபெரும்பாலும் கதைகள் படமாக்கப்படும் பொழுது நீர்த்துப் போய்விடும் முள்ளும் மலரும் விதிவிலக்கு அதுபோலத்தான் தில்லானா மோகனாம்பாளும்
ReplyDeleteஉண்மை
Deleteமுள்ளும் மலரும் கதை பற்றி தாங்கள் எழுதிய விதம் என்னை பழைய நினைவுக்கு கொண்டு போய் விட்டது. நன்றி
ReplyDeleteநன்றி படித்ததற்கும் இங்கே பதிவிட்டதற்கும்
Deleteநன்றி படித்ததற்கும் இங்கே பதிவிட்டதற்கும்
DeleteGood recollection ., Well scripted., 👌👌
ReplyDeleteThank you Suresh
Delete