Skip to main content

கண்கள்

" கண்கள் சிவந்து பெரியவாய்" என்றார்

நம்மாழ்வார். 

எம்பெருமானுடைய பெரிய கண்களைச் சொல்லுகிறார். விடுதலை பெற்ற ஜீவன் முக்தர்களுடைய கண்ணும திருமாலுடைய கண்களைப் போலவே இருக்கும். தாமரைப் பூவைப் போல கண் வேண்டும் என்பர். திறந்த பார்வை வேண்டும்.



மூடின கண் மறைந்த ஒளியைக் காட்டுகிறது. யோசிக்க கண்மூடி ஜபம் பண்ணுகிறானே அதை நான் சொல்லவில்லை. ஸாமான்ய ஜனங்கள் கண்ணை முழுதும் விழித்துப் பார்க்காமல் அரைப் பார்வையும் கோணற் பார்வையும் பார்க்கும்படி செய்கின்ற அஞ்ஞானத்தையும் பயத்தையும் பழிக்கிறேன். இது நிற்க.

நான் சென்னப்பட்டணத்தில் இருந்த போது ஒரு சாமியாருடன் ஸ்நேகப்பட்டேன் அவர் சுதேசியம்  அன்னிய வஸ்து பகிஷ்காரம்,  ஸ்வராஜ்ய ஸ்தாபனம் என்ற விஷயங்களைப் பற்றி ஆத்திரத்தோடு பேசுவார். அவர் கண்களை இமைக்காமலே நெடுநேரம் இருப்பார். மனிதர் இமைக்காமலே இருந்து விடலாம் என்று அந்தச் சாமியார் சொல்லுவதுண்டு. அது நல்ல பழக்கம். ஸூர்யனைப் பார்த்துக் கொண்டிருந்தால் ஞானதிருஷ்டி உண்டாகும். கண்ணில் வீரம் ஏற்படும்.

ஸாதாரணமாக இருவருடைய கண்கள் ஸந்தித்தால் "இவன் ஏனடா நம்மை முறைச்சுப் பார்க்கிறான்?" என்கிற எண்ணம் இருவர் மனசிலும் உண்டாகிறது. ஒருவன் கண்ணைச் சாய்த்துக் கொள்ளுகிறான். அல்லது இருவரும் சாய்த்துக் கொள்ளுகிறார்கள். நேருக்கு நேர் கண்ணுக்குக் கண் பார்த்து இரண்டு பேர் நெடுநேரம் பேசிக் கொண்டிருப்பது துர்லபம்.

பொய் இல்லாவிட்டால் பார்வை நேராகும்

கவனி

பொய் தீர்ந்தால் நேரே பார்க்கலாம்.

பயம் தீர்ந்தால் நேரே பார்க்கலாம்.

கவனி!

பொய் தீர்ந்தால் பயம் தீரும்.

பயம் தீர்ந்தால் பொய் தீரும்.

நேரே பார்த்தால் விரோதக்குறி என்று யோக்யன் ஏன் நினைக்க வேணும்? அகத்தின் அழகு முகத்தில் தெரியும். உன் மனசில் என்ன இருக்கிறதென்று தெரிந்து கொள்ளும் பொருட்டாக உன் கண்ணை நேரே பார்க்கிறேன். விரோதமில்லை. அவமரியாதை இல்லை. விஷயம் தெரிந்து கொள்ளும் பொருட்டு.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு நாள் முழுதும் ஸூர்யனை இடைவிடாமல் பார்த்து உபாசனை செய்தாராம். இது நல்ல வழக்கம். கண் இருக்கும்போது ஸூர்ய நமஸ்காரம் செய்வோம். அதனால் ஞானதிருஷ்டியேற்படும்.


சுதேசமித்திரனில் 19.10.1917 அன்று பாரதி எழுதிய கட்டுரை. மகாகவி பாரதியார் கட்டுரைகள் என்ற பெயரில் சாகித்ய அகாடமி வெளியிட்ட புத்தகத்திலிருந்து.




Comments

  1. மிகப்பழைய புத்தகத்திலிருந்து எடுத்தாலும் புதிய செய்தி.

    ReplyDelete
  2. நல்ல விஷயம்

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி சந்தானம். புக் வாங்கி படிக்கனும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...