முள்ளும் மலரும் தொடர்கதையாக வந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து திரைப்படமாக வந்தது. மகேந்திரன் படத்தை இயக்கி இருந்தார். லசனகர்த்தாவாக அறியப்பட்ட மகேந்திரனின் முதல் படம். மகேந்திரனின் திரைக்கதை நறுவிசாக இருந்தது. மூலக் கதையிலிருந்து சில பகுதிகளை அழகாகச் செதுக்கி விட்டிருந்தார். உமா சந்திரன் எழுதிய முழுக் கதையும் மகேந்திரன் படிக்கவில்லை என்று சொல்பவர்கள் உண்டு. எது எப்படியோ கதை அருமையாகக் காட்சிப் படுத்தப் பட்டிருந்தது. வசனங்கள் மிகவும் குறைவு. பத்து வயதில் தொடர்கதையைப் படித்திருந்த எனக்கு இருபது வயது ஆகியிருந்தது. காண்பனவற்றில் எல்லாம் அழகைக் காண்கின்ற வயது. மனதில் கவிதை ஊறித் ததும்பும் பருவம். இந்தப் படத்தைப் பார்த்து பரவசம் அடைந்தேன். பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு கவிதை. சிருங்கேரி என்ற இடத்தின் அழகு கண் முன்னே விரியும். கண்ணாடி போன்ற நீரில் மீன்கள் துள்ளி விளையாடும். கரையைத் தொட்டுத் தொட்டு செல்லும். மலர்க் கூட்டங்கள் மனதில் உவகை பெருகச் செய்யும். மழையில் சாலை நனைந்து இருக்க வானில் எறியப்பட்ட வானவில் மனதை மயக்கும். வளைந்து செல்லும் பாதையில் ஆட்டு மந்தை குறுக்கிடும். சரிந்திருக்கும் பள்ளத்தாக்குகள் சிலிர்க்க வைக்கும். காட்சிகள்! எத்தனை விதமான காட்சிகள்!!
இந்தப் படத்தின் பின்னணி இசையை என்னவென்று சொல்ல. காட்சிகளும் காட்சிகளுக்குப் பின்னே மறைந்துள்ள உணர்வுகளும் நுணுக்கமான இசைக் கோவைகளாக படம் நெடுகிலும் வெளிப்படும்.. திரைக்கதைப்படி சிறு வயது காளியும் வள்ளியும் கழைக் கூத்தாடுவார்கள். வள்ளி கழி மேல் உயரத்தில் இருப்பாள். காளி கீழே கொட்டுக் கொட்டியபடி இருப்பான். உயரத்தில் இருக்கும் தங்கை கீழே விழுந்து விட்டால் என்ன ஆகுமோ என்ற பதைப்பு சிறுவன் காளியிடம் இருக்கும். அந்த உணர்வைக் கொட்டொலி எதிரொலிப்பதாக இருக்கும். இந்தக் கொட்டு ஒலி வள்ளி காளி சம்பந்தப் பட்ட காட்சிகள் எல்லாவற்றிலும் ஒலிக்கும். மானினமே என்ற டைட்டில் பாடல் புல்லாங்குழல் இசையாக தொடர்ந்து வரும்.. அது போல வள்ளியும் எஞ்சினீயரும் சந்திக்கும் காட்சிகளில் ஒரு பிரத்தியேக இசை. நரம்பு வாத்தியம் ஒற்றையாக. பின் தொடரும் குழல் ஓலி. கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினிகாந்த் கண் விழித்து வீட்டில் யாரையும் காணாமல் வெளியே வரும் போது ஒற்றையாக ஒலிக்கும் தாளக் கருவி மெல்ல மெல்ல வேகம் பெறும். வயலின் இசை சேர்ந்து பதைப்புடன் அதிரும். இந்த ஒலிகள் எல்லாம் நம்மோடு தனியே உரையாடும். உறவாடும். இன்றளவும் மனதில் நிற்கும்.
ரஜினிகாந்த் காளி கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தார். வேகமும் முரட்டுத்தனமும் இயல்பாக அவருக்குக் கூடி வந்தது. மேலதிகாரியிடம் அவர் முரண்படும் காட்சிகள் நன்கு அமைந்திருந்தன. கையை இழந்தபின் மேலதிகாரியான சரத்பாபுவை சந்திக்கும் காட்சி. சரத்பாபு பரிந்துரை செய்தும் ரஜினிக்கு வேலை போய்விட்டதைச் சொல்கிறார். அப்போது கண்களை மேலாக உயர்த்தி நீர் கட்டியிருக்க வெளிப்படுத்தும் உணர்ச்சி அருமை. தங்கை மேல் பாசம் காட்டுவதும் அவள் திருமண விஷயத்தில் லறட்டுப் பிடிவாதம் காட்டுவதும் என்று திறம்பட நடித்திருந்தார்.
வள்ளி கதாபாத்திரத்தில் ஷோபா நடித்திருந்தார். மிகவும் இயல்பான நடிப்பு. கள்ளம் கபடமற்ற முகத் தோற்றம். அதில் விளையாடும் உணர்வுக் கோலங்கள் செவ்விது செவ்விது பெண்மை என்று சொல்ல வைக்கும். கோபமாயிருக்கும் ரஜினியை வாண்ணே சாப்பிடலாம் என்று உரிமையும் பாசமும் கலந்த குரலில் அழைப்பது நெஞ்சில் நிற்கும்.
அது போல சார்.. சார் என்று சன்னக் குரலில் சரத்பாபுவை அழைப்பது மனதைத் தொடுவதாக இருக்கும்.
இந்தப் படத்தில் அடி பெண்ணே என்று ஒரு பாடல் காட்சி- ஷோபா சேலைக் கிழிசலின் ஓட்டை வழியாக மரங்களையும் பசிய இலைகளையும் பார்த்து மகிழ்ந்தபடி இருப்பார். அப்போது ஒரு தருணத்தில் சேலைக் கிழிசல் ஓட்டையில் சரத்பாபு முகம் தெரியும். ஒரு திகைப்பு ஷோபாவின் கண்களில். ஒரு சின்ன விசாரிப்புக்குப் பின் சரத்பாபு மெல்ல தான் ஷோபாவை மணக்க விரும்புவதைச் சொல்லுவார். அந்தக் குழந்தை முகம் மாறுதல் கொண்டு அழுகை கேவல்களாக வெளிப்படும். சரத்பாபு அதிர்ந்து விடுவார். சுதாரித்துக் கொண்டு நாளை வீட்டுக்கு வந்து அண்ணனிடம் பேசுகிறேன் என்கிறார்..
திகைப்பும் ஆனந்தமும் கூடிய உணர்வில் அடி பெண்ணே என்ற பாடல் துவங்கும். மலர்க் கூட்டங்கள் கண் முன்னே நகரும். நீர்க்கரையில் ஷோபாவின்
முகம் காற்றில் மலர் போல நடுங்கும். சின்ன விழியில் மிதக்கும் கவிதைகள் சொல்லில் அகப்படாது. ஆற்று நீரில் ஷோபாவின் கூந்தல் அளையும். உடல் மெல்ல நடுக்கம் கொள்ளும்.. மழை பொழியும்.. வெயில் அடிக்கும். வானவில் தோற்றம் காட்டும். எல்லாமும் அந்நப் பெண்ணின் மெல்லிய உணர்வுகளைச் சொல்லுவதாக இருக்கும்.
பாடலை ஜென்ஸி பாடியிருப்பார். இளையராஜாவின் இசை அற்புதமாக
இருக்கும்
பாடலைப் பாருங்கள்.
நல்ல நடிகை. சீக்கிரம் போய் விட்டார்.
ReplyDeleteஉன்னுடைய narration ம் அருமை.
எனக்கு இப்ப மறுபடியும் படத்த பாக்கனும் போல இருக்கே.. திருப்பி சொல்றேன். ரசனைக்காரன் நீ.
ReplyDeleteநன்றி ஜெயந்தி. பல நாட்களுக்குப் பின் உனது பதிவு. மிகவும் மகிழ்ச்சி
Deleteஆமாம் அதிகம் போனால் இருபது இருபத்தோரு வயது தான் இருக்கும். புரட்டுக்கள் நிறைந்த உலகம் மெல்லிய இயல்பு கொண்ட அந்தப் பெண்ணை வாயில் போட்டு மென்று விழுங்கி விட்டது
ReplyDeleteஅருமையான பாட்டு. பலமுறை கேட்ட பாட்டு. உன் விளக்கம் அருமை.
ReplyDeleteநன்றி ராம். நாம் ரசித்த இன்னொரு பாடல். ஆகாய கங்கை. நினைவிருக்கிறதா?
Deleteநன்றாக நினைவிருக்கிறது. அருமையான பாட்டு. பாட்டுக்கு ரஜினி ரொம்ப style ஆக கண்ணாடியை சரி பண்ணிக் கொண்டு நடந்து போவார். அது தானே?
Deleteபாட்டு ஆரம்பம் ஒரு ஹம்மிங். அருமை
Deleteஆமாம். ஆமாம்..
ReplyDeleteஇசை பற்றி அற்புதமான கவிதை மழை by சந்தானம்
ReplyDeleteநன்றி பாஸ்கர்
DeleteI more or less expected this sequence.
ReplyDeleteI haven't read the novel but your write-up gave a good idea about the novel.
Really nice.
Thank you Ram Your comments mean a lot to me
DeleteFantastic
ReplyDeleteThank you Suresh
Delete