மரத்தின் கிளைகளில் அமர்ந்து கிளி கீ கீ என்று கத்தியது. தனது இருப்பைச் சொன்னது. அதன் உடல் பச்சையாகவும் மூக்கு சிகப்பாகவும் இருந்தது. சிறிது நேரம்.. அது ஜிவ்வென்று விண் பரப்பில் பறந்து எங்கோ சென்றது. கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோலிந்தா கோவிந்தா என்று அழைக்கும். நாச்சியார் திருமொழி அப்படிச் சொல்லும். உடல் ஒரு கூடு. உயிர் அதில் உறையும் கிளி. அதுதான் கோவிந்தா என்று எப்போதும் கூவுகிறது. உண்ணத் தராமல் உடலை வாட்டினாலும் அது கோவிந்தா என்று கூவ மறப்பதில்லை.
எண்பதுகளில் ஒரு திரைப்படம் பார்த்தேன். மலையாளத் திரைப்படம். அதன் பெயர் காட்டத்தே கிளிக்கூடு. போஸ்டர் அதைக் காற்றில் ஆடும் கிளிக் கூடுகள் என்று மொழி பெயர்த்திருந்தது. படத்தை இயக்கியவர் பரதன். கோபி, ஸ்ரீவித்யா,
மோகன்லால், ரேவதி முக்கிய வேடம் ஏற்றிருந்தார்கள்.
அவர் ஒரு ஆங்கிலப் பேராசிரியர். ஷேக்ஸ்பியர் கிருஷ்ணன் பிள்ளை என்று எல்லோரும் அழைப்பார்கள். சாரதா அவரது மனைவி. அவர்களுக்கு நண்டும் சிண்டுமாக மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண். அப்பாவின் மேல் காலைப் போட்டுக் கொண்டு தூங்கும் குழந்தைகள். காலையில் கல்லூரிக்குச் செல்ல அவர் ஒரு பழைய தள்ளுமாடல் வண்டியைக் கிளம்பிச் செல்லும் காட்சி ரசமானது.
கார் கிளம்பும் போது பெரும் சப்தம் எழுப்பும்.. இது பக்கத்து வீட்டில் திருமணம் செய்யாமல் தனித்து வாழும் இந்திராவுக்கு எரிச்சல் மூட்டுவதாக இருக்கும்.
கிருஷ்ணன் பிள்ளை வாழ்க்கை காலேஜ், வகுப்பு,வீடு, மனைவி குழந்தைகள் என்று ஓரு இயல்பான தடத்தில் சென்று கொண்டிருந்தது. ஆஷா வரும் வரை. ஆஷா பக்கத்து வீட்டு இந்திராவுக்குச் சொந்தம். கல்லூரியில் படிக்க வருகிறாள். ஆஷா சாரதாவைச் சந்திக்கிறாள். கிருஷ்ணன் பிள்ளை பணியாற்றும் கல்லூரியில் அட்மிஷன் வேண்டுகிறாள். பேராசிரியர் சொன்னாவ் அட்மிஷன் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை. சாரதா சொல்கிறாள். அவர் யாருக்கும் பரிந்துரை செய்வது இல்லை என்று. ஆஷா மிகவும் வற்புறுத்துவதால் சாரதா புரபஸரிடம் சொல்கிறாள். அவர் கல்லூரியில் ஒரு வார்த்தை சொல்ல அட்மிஷன் கிடைத்து விடுகிறது. ஆஷா இதற்குப் பிறகு சாரதாவுடன் அடிக்கடி வந்து பேசிக் கொண்டிருப்பாள். ஆஷாவின் கல்லூரியில் ஒரு விளையாட்டுப் பயிற்சியாளர். அவன் பெயர் உன்னி கிருஷ்ணன். ஆஷாவிற்கும் அவனுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. அவர்கள் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள்.
ஆஷா கல்லூரி முடிந்து சாரதாவின் வீட்டில் இருக்கும் போது உன்னி கிருஷ்ணன் அவர்கள் வீட்டு நம்பரில் அழைப்பான்.. அனேகமாக சாரதா போனை எடுப்பாள். ஆஷாவிடம் தரச் சொல்லுவான். இருவரும் நெடு நேரம் பேசுவது வழக்கம். ஒரு முறை சாரதா கிருஷ்ணன் பிள்ளை வீட்டிற்கு உன்னி வருகிறான். ஆஷா சாரதாவிற்கு அவனை அறிமுகப் படுத்தி வைக்கிறாள். சாரதாவிற்கு இசையில் ஆர்வம். உன்னிக்கும் அப்படியே. பொதுவாக திருமணத்திற்குப் பின் பெண்கள் தங்கள் தனிப்பட்ட ஆர்வங்களை மெல்லத் தொலைத்து விடுகிறார்கள். உன்னியோடு இசை பற்றிப் பேசுவது சாரதாவிற்கு இதம் அளிக்கிறது. பழைய ஆர்வம் உயிர் பெறுகிறது. உன்னி ஒருநாள் ருத்ர வீணை ஒன்றை எடுத்து வருகிறான். சாரதா நான் இதை வாசித்ததில்லை என்கிறாள். உன்னி ஊக்கம் தருகிறான். இப்படி அவர்கள் இடையே ஒரு அழகான உறவு வளர்கிறது. சாரதாவிற்கு அவன் மேல் ஒரு கனிவு பிறக்கிறது.
ஆனால் ஆஷாவின் பக்குவமற்ற இளம் மனதில் பொறாமை மூள்கிறது. அவர்கள் உறவைத் தவறாகப் புரிந்து கொள்கிறாள். உன்னிக்குப் பாடம் கற்பிப்பதாக எண்ணிக் கொண்டு புரபஸர் கிருஷ்ணன் பிள்ளையிடம் நெருக்கமாகப் பழகுகிறாள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. நாட்பட நாட்பட அவர் மனம் தடுமாறுகிறது. நடுத்தர வயதான அவர் அந்த இளம் பெண் தன் மேல் காதல் கொண்டு விட்டாள் என்றே நம்புகிறார். வழுக்கையாகிப் போன தலையின் சொற்ப முடியை முன்னால் தள்ளி விடுகிறார்.ரோமியோ அண்டு ஜூலியட் நாடகத்தில் வரும் ஷேக்ஸ்பியர் வரிகளைத் தோட்டத்தில் உலவியபடி உணர்ச்சிகரமாகச் சொல்கிறார். பக்கத்து வீட்டு மாடியிலிருந்து ஆஷா கையசைக்கும் போது கிளர்ச்சி கொள்கிறார். சேர்ந்தே இவர்கள் கல்லூரிக்குச் செல்வதும் வெளியே அடிக்கடி சுற்றுவதும் சாரதாவின் மனதில் புயல் அடிக்க வைக்கிறது. உன்னியும் இவர்கள் நடவடிக்கையால் மனம் புழுங்குகிறான். இந்திரா ஆஷாவை வீட்டை விட்டு வெளியேற்றுகிறாள். கிருஷ்ணன் பிள்ளை ஆஷாவிற்கு YWCA ஹாஸ்டலில் தங்க ஏற்பாடு செய்கிறார். ஒரு நாள் அதிரடியாக ஹாஸ்டலில் புகுந்த உன்னி கிருஷ்ணன் அவளது நடவடிக்கைகளைக் கண்டிக்கிறான்.
ஒரு சமயம் கிருஷ்ணன் பிள்ளைக்கும் சாரதாவிற்கும் ஆஷா உடனான விவகாரத்தினால் உரசல் ஏற்படுகிறது. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறும் கிருஷ்ணன் பிள்ளை ஹோட்டலில் தங்க ஆரம்பிக்கிறார். போன் செய்து குழந்தைகளோடு பேசும் அவர் சாரதாவோடு பேசுவதில்லை.
ஒரு நாள் கிருஷ்ணன் பிள்ளை ஆஷாவை ஹோட்டலுக்கு வரலழைக்கிறார். காதலன் என்ற உரிமையில் தொட்டுப் பேச முயற்சிக்கிறார். ஆஷா அதிர்ச்சி அடைந்து அவரிடமிருந்து விலகுகிறார்.
அப்போது அங்கே வந்த உன்னிகிருஷ்ணன் ஆஷாவின் பக்குவமற்ற செயலால் விளைந்த விபரீதத்தை சுட்டிக் காட்டுகிறான். சாரதாவுக்கும் தனக்குமான உறவு தூய்மையானது என்று புரிய வைக்கிறான். ஆஷாவை அழைத்துச் செல்கிறான்.
மனம் உடைந்த ஷேக்ஸ்பியர் கிருஷ்ணன் பிள்ளை வகை அறியாது குடிக்கிறார். தனது பழைய மாடல் காரின் ஸ்டீயரிங் மேல் தலை கவிழ்ந்து கிடக்கும் அவரை உன்னி கிருஷ்ணன் வீட்டில் கொண்டு விடுகிறான். அப்பா அப்பா என்று குழந்தைகள் ஓடி வருகின்றனர். கிருஷ்ணன் பிள்ளை ஷவரின் கீழ் நிறுத்தப்படுகிறார். அவருடைய சிந்தை தெளிகிறது. சாரதா உன்னிக்குக் கண்களால் நன்றி கூறுகிறாள்.
உறவுகள் மெல்லிய இழைகளால் ஆனவை. ஒரு சிறு புரிதல் இன்மை அவை அறுபடப் போதுமானது.
காதலைப் பற்றி ஷேக்ஸ்பியர் சொன்ன வரிகளோடு கட்டுரையை நிறைவு செய்வோம். ரோமியோ அண்டு ஜூலியட்டில் அது வருகிறது.
காதல் ஒரு புகை
பெருமூச்சுகளிலிருந்து எழுவது
புகை அடங்கியதும்
காதலன் கண்ணில் ஒளிரும் நெருப்பு
பாதிக்கப்பட்டால்
கண்ணீர்த் துளிகளால் உயிரூட்டப்படும் கடல்
வேறு என்ன பேதமை
அடங்காத கசப்பு
நீங்காத இனிமை
தி சந்தானம்
நளினமான கதை. சந்தானம் எழுதிய விதம் அருமை. ரசித்தேன். வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம் பதிவிட்ட உடனே படித்ததற்கு
DeleteS Krishnan
Deleteசினிமாவின் அருமையான எழுத்து வடிவம்
ReplyDeleteநன்றி பாஸ்கர்
Deleteகதை அருமை தமிழில் எடுத்தால் ஓடுமா
ReplyDeleteKeeping fingers crossed
ஊஞ்சலாடும் உறவுகள் என்ற பெயரில் தமிழில் எடுக்கப் பட்டது. இயக்கம் பரதன்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான திரை ஓவியம். நெஜம்மாவே அழகான கூடு அது. பொறாமை கொள்ள வைக்கும் அன்பான குடும்பம். கோபி நடிப்பு அற்புதமா இருக்கும். ஸ்ரீவித்யா கண்களாலேயே கவர்ந்து விடுவார்.
ReplyDeleteநீ ஒரு சிறந்த கதை சொல்லி. மிக அழகாக எழுதியிருக்கிறாய்.
நன்றி ஜெயந்தி.
Delete