தி ஜானகிராமன் அருமையாகப் பாடுவாராம். அவருடைய கதைகளில் இசை பற்றிய குறிப்புகள் இயைந்து வரும். அத்தனை நுணுக்கமாக எழுதி இருப்பார். அது சிறுகதைகள் ஆனாலும் சரி, மோகமுள் போன்ற நாவல்கள் ஆனாலும் சரி. இசைக் கச்சேரிகளில் கேட்டு அனுபவிக்கும் போது அந்த வரிகள் மனதில் ஓடும். மோகமுள் நாயகன் பாபு. அவன் பாடும் தன்மை எத்தகையது என்பதைப் போகிற போக்கில் ஒரு சின்ன கதாபாத்திரத்தின் மூலம் சொல்லியிருப்பார் ஜானகிராமன். நாவலின் துவக்கத்திலேயே.
பின்பு நாவலின் ஓரு பகுதியில்
பாபு பூங்காவிற்கு வருவான். அங்கே ரேடியோப் பெட்டியில் வீணை ஒலிக்கும். அது பாபுவிடம் என்ன சொல்கிறது? நீயா.. நீயா.. நீ ஏன் இப்படிச் செய்தாய்? என்று அங்கலாய்க்கிறது. இது போன்ற அனுபவம் நமக்கும் வாய்த்திருக்கிறது. வயலின் தந்திகள் வில்லோடு இழையும் போது ஐயா.. ஐயா என்ற சன்னக் கதறல் ஒலித்திருக்கிறது. பாபுவும் அவன் அப்பாவும் கச்சேரி கேட்டுவிட்டு பனி பெய்யும் பின்னிரவில் வீட்டுக்கு வருவது போல எனக்கும் நேர்ந்திருக்கிறது.
நாவலின் பின்னொரு பகுதியில் இப்படி எழுதுகிறார்.
"'மேலே மாறி மாறி வந்த நினைவுகளுக்கு அடியில் பேகடை ராகம் கமகங்களும் பாய்ச்சல்களுமாக தானே பாடிக் கொண்டிருந்தது. எத்தனை தினுசுகள்! எத்தனை உயிர்கள்! எத்தனை உருவங்கள் அதற்கு! ஸ்வரங்களைத் தொட்டும் தொடாததுமாக எத்தனை போக்குகள்!"
எத்தனை நுணுக்கமாக இசையை அனுபவித்து இருக்கிறார் பாருங்கள்.
நான் இங்கே குறிப்பிட வந்தது .
செய்தி என்ற தலைப்பில் அவர் எழுதிய சிறுகதை பற்றி. பிள்ளையவர்கள் (கதை நெடுகிலும் இப்படித்தான் அவர் குறிப்பிடப் படுகிறார்) நாதசுரக் கலைஞர். அவர் வாழ்வும் மூச்சும் கர்நாடக இசைதான். அதன் தூய்மையில் தோய்ந்தது அவர் மனம். இதில் எவ்விதமான சமரசத்திற்கும்
அவர் இடம் கொடுத்ததில்லை. வீட்டில் இருப்பது மனைவி மற்றும் மகன் தங்கவேல். இரண்டு ஜதை உடுப்பும் தலை சாய்க்க ஒரு இடமும் உணவும் போதாதா இந்த மூவருக்கும்? இது அவரது நினைப்பு.
எனவே காசு ஒரு பொருட்டில்லை. ஆனால் காலம் மாறி வருகிறது. அதற்கு ஏற்ப மக்களின் ரசனையும். என்ன என்னவோ துண்டுச் சீட்டு வருகிறது. சுருதியிலேயே நிற்காத அவைகளைத் தங்கவேலு வாசிக்கும் போது பிள்ளையவர்கள் மனம் பொறுப்பதில்லை.
காலையில் எழுந்து தங்கவேலு சாதகம் செய்கிறான். துண்டுச் சீட்டு ரசிகர்கள் மன நிறைவுக்கான பாடல்கள் அவை. கேட்கும் பிள்ளையவர்களுக்கு மனம் கொதிக்கிறது.
பிலஹரியும் கேதாரமும் பாடி ஆகாயம் முழுவதும் பூப்பூவாகக் குலுக்க வேண்டிய வேளையில் ஏன் இந்த ஒப்பாரி? அவனைக் கடிந்து கொள்கிறார். அவரைப் பொறுத்த வரை அவன் வாசிக்கும் சினிமாப் பாடல்கள் அஞ்சறைப் பெட்டியை பெருச்சாளி கவிழ்க்கும் சத்தம். தங்கவேலு மெல்லச் சொல்கிறான். கச்சேரி கேட்க இருப்பவர்கள் வெள்ளைக்காரர்கள். அவர்களுக்குப் புரிய வேண்டுமே என்று.
ஆமாம். வக்கீல் மணி அய்யர் சொல்லி இருக்கிறார். அவருடைய வீட்டுக் கூடத்தில் ஓரு வெள்ளைக்கார இசைக்குழுவினர் முன்னால் வாசிக்க வேண்டும். சுத்தமான தெற்கத்தி சங்கீதம் அவர்கள் கேட்க விரும்புகிறார்கள். நான்கே நான்கு கீர்த்தனம். தவில் கூட வேண்டாம். ஆத்மார்த்தமான கலப்படம் இல்லாத சங்கீதம்.
பிள்ளையவர்கள் வாத்தியத்தோடு மாட்டு வண்டியில் சென்று வக்கீல் வீட்டு வாசலில் இறங்குகிறார். பின்னோடு தங்கவேலுவும் ஒத்துக்காரரும். வக்கீல் இசைக்குழுவின் தலைவரான பிலிப் போன்ஸ்காவை பிள்ளையவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். நீல விழிகள்.ரிஷி போலத் தோற்றம். பிள்ளையவர்கள் மனம் ஒரே தானாகத் தாவி அவன் பால் சென்றது.
பிள்ளையவர்கள் வாசிக்கிறார். முதலாக நாட்டை. போன்ஸ்கா தனது ஆத்மா அறியாத வெளிகளில் பயணம் செய்வதை உணருகிறான். பின்னர் சாமா ராகத்தில் சாந்தமு லேகா என்ற கிருதி. ராகம் மலர்கிறது. நடுநிசியில் தோட்டத்தில் மலர்ந்து மணம் பரப்பும் பவழமல்லி போல.
போன்ஸ்கா இரு கைகளையும் நீட்டி அந்த இசையை வாங்கிக் கொள்கிறான். ராகத்தோடு இசைந்து அவன் உடல் அசைகிறது. பாடல் அவனுக்கு ஏதோ சொல்கிறது. மீண்டும் மீண்டும் அதையே வாசிக்கச் சொல்லிக் கேட்கிறான். ஏதோ மெல்ல மெல்லப் புரிகிறது. புயலும் போரும் ஓலமும் கடந்து உயரே எழுகின்ற அமைதி. அமைதி. உலகுக்கு சேதி. உலகில் எந்த சங்கீதமும் எடுத்துரைக்காத சேதி. அதை நான் கேட்ட இசையில் புரிந்து கொண்டேன். இப்படி எல்லாம் போன்ஸ்கா பேசுகிறான்.
பின்பு பிள்ளையவர்களின் விரல்களை முத்தமிடுகிறான். இறைவன் நர்த்தனமாடும் விரல்கள் இவை என்கிறான். பிள்ளையவர்களுக்கும் ஒரு சேதி கிடைக்கிறது.
இவ்வாறு கதையை முடிக்கிறார் ஜானகிராமன். பல வருடங்கள் முன்பு படித்த கதை. சக்தி வைத்தியம் என்ற தொகுப்பா அல்லது சிகப்பு ரிக் ஷாவா சரியாக நினைவில்லை.
கதை மனதை விட்டு நீங்கவில்லை
ஜானகிராமனின் ஆழ்ந்த இசை உள்ளமும்.
நல்ல இசையின் கார்வை அடங்கிவிடுமா என்ன?
குறிப்பு:
இந்தக் கட்டுரையில் தி.ஜானகிராமனின் சொல்லாடல்கள் மற்றும்உவமைகள் எடுத்து ஆளப்பட்டருக்கின்றன.
உ.ம். ஆகாயம் முழுவதும் பூப்பூவாக உலுக்க வேண்டிய வேளை.
அஞ்சறைப் பெட்டியை பெருச்சாளி
சஞ்சய் சுப்ரமணியன் பேகடா கேட்டேன். நல்ல உழைப்பு. தி ஜா கதை படித்தேன். சொற்பிரயோகங்கள் அருமை. மீண்டும் சந்தானம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ராம்
Deleteசற்று இடைவெளி விட்டு சந்தானம் எழுத்து. அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி மதி
ReplyDeleteஇது சிகப்பு ரிக்ஷா தொகுதில படித்த நினைவு. அண்ணா கல்யாணத்துக்கு வந்த கிஃப்ட் அந்த புக். ஆமா மோக முள் ல ரெங்கண்ணா போர்ஷனும் மராட்டி இசைக்குழு போர்ஷன், பாபு, அவன் அப்பா சேர்ந்திருக்கற பகுதி, பாபு அவன் ஃப்ரெண்ட் போர்ஷன் எல்லாமே அருமையா இருக்கும். எத்த சொல்ல எத்த விட. மலர் மஞ்சம் கிடைத்தால் படி (ஏற்கனவே படிக்கவில்லை என்றால்)
ReplyDeleteஎன்னாச்சு? லாங் கேப்
சிகப்பு ரிக ஷாவைப் பரிசளித்தவர் பெயர் சிவராமகிருஷ்ணன். மலர் மஞ்சம் இருக்கிறது. படிக்க வேண்டும்
Delete