எட்டு வயதில் டால்ஸ்டாய் அறிமுகம் ஆனார். அந்த வயதில் நூலகம் தெரியாது. சென்று புத்தகங்களைப் புரட்டி அறிந்து கொள்ள. பெரியவர்கள் யாராவது சொல்லி இருக்கலாம். அப்படியும் இல்லை. வீட்டிற்கு எதிரே நான் படித்த ஆரம்பப் பள்ளி. ஆசிரியைகள் யாரும் டால்ஸ்டாயைப் பற்றிச் சொல்லவில்லை. ராஜேந்திரன் கதை சொல்வான். அது மகாபாரதத்திலிருந்து இருக்கும். பாண்டவர் வனவாசத்தின் போது நிகழ்ந்தவையாக இருக்கும். எல்லாம் சுவாரசியமான கதைகள். எனில் முதல் முதலாக டால்ஸ்டாயை அறிந்தது ஒரு திரைப்படத்தின் முலமாக.
எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு தியேட்டர் இருந்தது. சந்திரா டாக்கீஸ் என்று சொல்லுவோம். அங்கே குழந்தையும் தெய்வமும் என்று ஒரு திரைப்படம் வெளியானது. அதில் குட்டி பத்மினி என்று ஒரு சிறுமி இரட்டை வேடத்தில் நடித்தாள்.
தாயும் தந்தையும் மன வருத்தத்தில் பிரிகிறார்கள். இத்தனைக்கும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்துப் பின்பு மணம் புரிந்தவர்கள். தன்மானம் உள்ள அவனால் பணக்கார வீட்டு மாப்பிள்ளையாகப் பொருந்தி வாழ முடியவில்லை
பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றைத் தந்தை எடுத்துச் சென்று விடுகிறான். அவள் பெயர் பப்பி.
அம்மாவுடன் இருக்கும் குழந்தை பெயர் லல்லி. சின்னக் குழந்தையுடன் சிங்கப்பூர் சென்ற தகப்பன் பொருள் ஈட்டிக் கொண்டு
எட்டு ஆண்டுகள் கழித்து மதுரை வருகிறான். பள்ளியில் ஒரே வகுப்பில் பப்பியும் லல்லியும். உருவம் ஒன்றாக இருந்தாலும் குணத்தில் வேறுபட்டு நிற்கிறா ர்கள். படத்தில் வரும் வகுப்பறைக் காட்சிகள் நினைவில் இன்றளவும் இருக்கிறது. வகுப்பறையில் ஒவ்வொரு மாணவிக்கும் தனித்தனியாக சின்ன மேஜை நாற்காலி. சுவரில் மாட்டப்பட்டிருக்கும் டால்ஸ்டாய் மற்றும் காந்தி படங்கள். எனது வகுப்பறையிலோ நீளமான பெஞ்சு மட்டுமே இருக்கும். நெருக்கியடித்து அமர்ந்து இருப்போம். வைத்து எழுத மேசை இருக்காது. மேலும் வகுப்பறைச் சுவரில் எந்த உருவப்படமும் பார்த்ததாக நினைவில்லை. பப்பி வகுப்பில் ஒரு பாட்டுப் பாடுவாள்." நடந்நதெல்லாம் நினைப்பதுதான் துயரம் என்று ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று" என்ற வரிகள் வரும் போது காமிரா மெல்ல உயரும். டால்ஸ்டாய் மற்றும் காந்தியின் உருவப் படத்தைக் காண்பிக்கும்.
பிறிதொரு நாளில் வகுப்பு ஆசிரியை " Little girls wiser than Men" என்ற கதையை எழுதியது யார் என்று கேட்பார். பப்பி உடனே எழுந்து அதை எழுதியது டால்ஸ்டாய் என்று சொல்வாள்.
அது என்ன கதை? பார்க்கலாம். அவை ஈஸ்டருக்கு மிகவும் அண்மையான தினங்கள். பனி மெல்ல உருகும் நாட்கள்.
ஆனாலும் உருகாத பனி வீடுகளின் முற்றங்களில் தயங்கி இருந்தது. உருகி வழிந்த பனி ஓரிடத்தில் குட்டையாகத் தேங்கி இருந்தது. இரண்டு சிறுமிகள். வேறு வேறு வீட்டைச் சேர்ந்தவர்கள். ஒருத்தி வயதில் பெரியவள்.ஒருத்தி சிறியவள். சிறியவள் பெயர் மலாஷா. பெரியவள் பெயர் அகூல்யா. அவர்களுடைய அம்மாக்கள் புதிய கவுன் அணிவித்திருந்தார்கள். சிறியவள் அணிந்தது நீல நிறம். பெரியவள் மஞ்சள். இருவருமே தலையில் சிகப்பு நிறத் துணியைச் சுற்றி இருந்தார்கள். தேவாலயத்தில் இருந்து அப்போதுதான் திரும்பி வந்திருந்தார்கள். பின்பு விளையாட ஆரம்பித்தார்கள். நீர் தேங்கியிருந்த குட்டைக்கு அருகே சென்றார்கள். சிறியவள் மலாஷா குட்டையில் இறங்க முனைந்தாள். பெரியவள் அகூல்யா ஷூ வைக் கழட்டி வைத்து விட்டு இறங்கச் சொல்கிறாள். அவளும் அப்படியே செய்கிறாள். இருவரும் குட்டையில் இறங்குகிறார்கள். சிறிது நடந்த பின் மலாலா ஆழம் அதிகம், பயமாக இருக்கிறது என்றாள். அகூல்யா பயப்படாதே இதற்கு மேல் ஆழம் இருக்காது என்கிறாள். மலாஷாவைப் பின் தொடர்ந்த அவள் மெல்லப் போ. மேலே தண்ணீரைத் தெறித்து விடாதே என்கிறாள். அவள் சொல்லச் சொல்ல மலாலா பெரிதாக ஒரு எட்டு வைக்கிறாள். நீர் அகூல்யாவின் புது கவுனில் தெறிக்கிறது. புத்தம் புது கவுனில் சேற்றுக் கறை. மேலும் கண்களில் சேறு. மூக்கினில் சேறு. அகூல்யா கோபத்துடன் அவளை அடிக்க ஓடுகிறாள. மலாஷா பயந்தவளாய் வீட்டை நோக்கி ஓடுகிறாள். அப்போது அங்கே வந்தாள் அகூல்யாவின் அம்மா. ஆடை கறையானதைக் கேட்கிறாள். வேண்டுமென்றே மலாஷா சேற்றைத் தெறித்து விட்டாள் என்கிறாள். அகூல்யாவின் அம்மா மலாஷாவைப் பிடித்து முதுகில் ஓரு அடி போடுகிறாள். மலாஷா பெரிய குரல் எடுத்து அழுகிறாள். தெருவில் எல்லோருக்கும் கேட்டது. மலாஷாவின் அம்மாவுக்கும் கேட்டது. என் மகளை எப்படி அடிக்கலாம் என்று அவள் கேட்க ஒரு வார்த்தைக்கு மறு வார்த்தை என சண்டை வலுக்கிறது. வீட்டு ஆண் பிள்ளைகள் வெளியே வருகிறார்கள். கூட்டம் கூடுகிறது. யாவரும் சத்தம் போடுகிறார்கள். ஒருவரும் கேட்பதில்லை.
பேச்சு வளர்கிறது. தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. கிட்டத்தட்ட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலைமை. அகூல்யாவின் பாட்டி வந்தாள். அமைதிப்படுத்த முயன்றாள். யாரும் கேட்பதாக இல்லை. பெண்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அகூல்யா தனது கவுனில் இருந்த அழுக்கைத் துடைத்தாள். பின்பு முன்னர் விளையாடிய சிறு குட்டை அருகே சென்றாள். ஒரு கல்லை எடுத்து குட்டையில் முன்பு மணல் பகுதியைக் கீறி விடுகிறாள். அந்தப் பாதை வழியாக தண்ணீர் தெருவில் வழிந்தோடியது. இப்போது மலாஷா அகூல்யாவோடு சேர்ந்து கொண்டாள். ஒரு சின்ன மரத்துண்டால் நீர் வரும் பாதையை இன்னும் ஆழப்படுத்துகிறாள். தண்ணீர் முன்பை விட வேகமாகத் தெருவில் ஒடுகிறது. பெரியவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்த இடம் வரை வந்து விட்டது. பெருகி வழிந்து வரும் நீரின் இரு புறமும் சிறுமிகள் இருவரும் சிரித்தபடி ஓடி வருகிறார்கள். சமாதானம் செய்ய முயன்ற பாட்டி பெரியவர்களைச் சாடுகிறாள்.
வெட்கமாக இல்லை, இந்தப் பெண்களை முன்னிட்டு சண்டையிடுகிறீர்கள். ஆனால் அவர்கள் சண்டையை மறந்து விட்டு எப்படி விளையாடுகிறார்கள். அவர்கள் உங்களைக் காட்டிலும் அறிவானவர்கள்.
என்று சொல்கிறாள். எல்லோரும் குழந்தைகளைப் பார்த்து தங்கள் செயலுக்கு நாணி சிரித்தபடியே தத்தம் வீடுகளுக்குச் செல்கிறார்கள்.
நீங்கள் குழந்தைகளைப் போல ஆனாலன்றி மோட்ச சாம்ராஜ்ஜியத்தை அடைய மாட்டீர்கள் என்று கதையை முடிக்கிறார் டால்ஸ்டாய்.
திரைப்படத்தில் சில நொடிகளில் டால்ஸ்டாய் பற்றிய கேள்வியும் அதற்கான பதிலும் கடந்து போனது. பள்ளியில் நானும் இந்தக் காட்சியைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் சில நாட்கள் தொடர்ச்சியாக மதிய இடைவேளையில் ஜெயச்சந்திரன் நான் மற்றும் பையன்கள் அனைவரும் என்ன வேகம் நில்லு பாமா என்ற பாடலை கோரஸாகப் பாடத் தவறவில்லை.
டால்ஸ்டாய் பற்றி ஒரு சிறு வினாடி காட்சி வருமாறு திரைக்கதை அமைத்த ஜாவர் சீதாராமனுக்கு இது தெரிந்திருக்க நியாயம் இல்லை.
மாவடு கண்ணல்லவோ... சரியான வரிகள் கு ப க்கு. இந்த டால்ஸ்டாய் மேட்டர்லாம் எனக்கு பெருசா மனசுல பதியல. கு ப வத்தான் ரசிச்சுண்டே இருந்தேன், இருக்கேன். எப்பொழுதும் போல் நுண்ணிய அவதானிப்பும், அழகான எழுத்தும்.. பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி. டால்ஸ்டாய் உனக்கு மனதில் பதிந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Deleteஏற்கனவே சொல்லியிருக்கிறாய். படிக்க ஆரமிக்கறேன்
DeleteLITTLE GIRLS WISER THAN MEN.What about old lady.
ReplyDeleteOld lady was the one to find out that Little girls wiser than Men
DeleteThanks for reading
ReplyDeleteஅநேகமா 1966 வருடம் என்று நினைக்கிறேன். இந்தப்படம் பார்த்த நினைவு. எழுதிற சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. அருமையான பாட்டு. நினைவூட்டலுக்கு நன்றி
ReplyDelete1965. இந்தப் படத்திற்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. நன்றி ராம் படித்ததற்கு. நாம் நடந்த நினைவுப் பாதைகள் ஒன்று தானே
ReplyDelete