Skip to main content

சிரிக்கும் சலங்கை

 சிரி சிரி முவ்வா என்று ஒரு திரைப்படம். நானும் பாஸ்கரும் மதுரையில் இந்தப் படத்தைப் பார்த்தோம். பாஸ்கர் எனது ஒன்று விட்ட தம்பி. இந்தத் திரைப்படம் பார்த்ததை நினைவு கூர்ந்து எழுதியிருந்தான். ஜெயப்ரதா அறிமுகம் ஆனது இந்தத் திரைப்படம் என்று நினைக்கிறேன். இந்தப் படம் நெடுக ஓயாமல் ஆடிக் கொண்டே இருப்பார். மாற்றாந்தாய் காலில் சூடு வைத்தாலும் ஆடிக் கொண்டே இருப்பார். இரவில்.நிலவொளியில். தென்னை மர நிழலில்.  பகல் வெயிலில் பாறையில். மலைச் சரிவில். நீரலையில் இப்படி எல்லாப் பொழுதும் எல்லா இடங்களிலும் ஆடியபடியே இருப்பார். ஆடுவதில் அத்தனை விருப்பம்.  அவருடைய தோழன் சந்திரமோகன். அவரும் குனிந்து வளைந்து நிமிர்ந்து சலிக்காமல் இணைந்து ஆடுவார்.  கிராமத்தில் இருந்து விலகி நகரத்துக்குச் சென்று கலையின் உச்ச நிலையை அடைந்து எப்படிப் புகழ் ஈட்டுகிறாரகள் என்பது கதை. மிகையும் நாடகத் தன்மையும் யதார்த்தமும் ஒரு வினோதக் கலவையில் உருவான படம். இந்தப் படத்தை இயக்கியவர் கே.விஸ்வநாத். எனக்கு அப்போதெல்லாம் G R விஸ்வநாத் என்பவரைத் தான் தெரியும். சொல்ல வேண்டியதில்லை. அவர் அந்நாளில் ஒரு பிரபல கிரிக்கெட் வீரர். 


கே.விஸ்வநாத் இயக்கி சங்கராபரணம் என்ற தெலுங்கு மொழித் திரைப்படம் 1980ல் வந்தது. அந்தப் படம் பெரும் வெற்றி கண்டது. தமிழ் நாட்டிலும் கூட.  சங்கர சாஸ்திரி ஒரு சாஸ்திரீய இசைக் கலைஞர். துளசி ஒரு ஆடல் நங்கை. சங்கர சாஸ்திரியின் இசைக்கு தன் மனதைப் பறி கொடுத்தவள். அவர் மேல் ஆழமான பக்தி பூண்டவள். ஆனால் அவளுடைய அம்மா ஜமீன்தார் ஆசைக்கு அவளை இணங்க வைக்க முயற்சிக்கிறாள். இரவில் தப்பி ஓடும் துளசி ரயிலில் சாஸ்திரியைப் பார்க்கிறாள். அவர் அடைக்கலம் தருகிறார்.  தேடி வந்த அவளுடைய அம்மா சாஸ்திரியைக் கண்டபடி பேசி துளசியைத் தன்னோடு அழைத்துச் சென்று விடுகிறாள். சாஸ்திரியின் இசையை இசைத் தட்டில் சுழல விட்டு துளசி மெய்மறந்து இருக்கையில் ஜமீன்தார் அவளைச் சீரழிக்கிறான். மேலாக சாஸ்திரியின் படத்தை உடைக்கிறான். இதைக் கண்டு கோபமடைந்த துளசி அவனைக் கொன்று அந்த ரத்தத்தை சாஸ்திரியின் காலில் பூசுகிறாள். சாஸ்திரி கேஸ் நடத்தி அவளை விடுவிக்கிறார். அவர் வீட்டு மனுஷியாகவே ஆகிவிடுகிறாள். அவர்களிடையே நிலவும் மேன்மையான உறவை ஊர் உணரவில்லை. அவதூறு பேசுகிறது. தன்னால் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுவதை உணர்ந்த துளசி சாஸ்திரியை விட்டு விலகிச் செல்கிறாள். தன்னைச் சீரழித்தவனின் கருவைத் தாங்கி மகனைப் பெறுகிறாள். தகுந்த வயது வந்ததும் புகழும் பணமும் இழந்து இருக்கும் சாஸ்திரியிடம் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் அவரிடமே இசை பயிலுமாறு செய்கிறாள். மறைமுகமாக தனது முயற்சியால்  சங்கர சாஸ்திரி மீண்டும் கச்சேரி செய்ய உதவுகிறாள்.அவளுடைய மகனை சங்கர சாஸ்திரியின் இசை வாரிசாக உலகம் அறிகிறது.  தனது காலில் அணிந்த தோடாவை சங்கர சாஸ்திரி அவனுக்கு அணிவித்து விட்டு மேடையிலேயே உயிர் துறக்கிறார். அவர் காலில் விழுந்தபடியே துளசியின் உயிர் பிரிகிறது. இப்படி ஒரு உணர்ச்சிகரமான முடிவு.


சலங்கை ஒலி என்ற படம் 1983ல் வெளிவந்தது. அதுவே தெலுங்கில் சாகர சங்கமம் என்ற பெயரில் வந்தது. பாலகிருஷ்ணன் நடனக் கலைஞன். ஆர்வமும் திறமையும் ஒருங்கே இணையப் பெற்ற இளைஞன். ஏழை. அம்மா சமையல் வேலை செய்கிறாள். மாதவி பணக்கார வீட்டுப் பெண்.  பாலகிருஷ்ணனிடம் நட்பாகப் பழகுகிறாள். அவனுடைய அபாரமான திறமை அவளைக் கவர்கிறது. அவனுடைய உன்னதமான நடனக் கலை உலகத்தாரின் கவனத்தைப் பெற வேண்டும் என எண்ணுகிறாள். அவனுக்கு நாடு தழுவிய நடன விழாவில் நடமாட வாய்ப்புப் பெற்றுத் தருகிறாள். நெகிழ்ந்து போன அவன் அவள் கைகளைப் பற்றி முத்தமிடுகிறான். அந்தக் காட்சி மிகவும் அற்புதமானது. எனக்கு மிகவும் பிடித்தது.



சிரிவெண்ணிலா என்று ஒரு தெலுங்கு படம். 1986 ம் வருடம் வந்தது. நான் பார்த்திருக்கிறேன். தியேட்டரிலா தொலைக்காட்சியிலா என்று நினைவில்லை. 

ஒரு பார்வையற்ற மனிதன். அவன் புல்லாங்குழல் வாசிப்பான். யாரும் கற்றுத் தரவில்லை. தானே துளைகளில் உணர்ந்து இசையை அறிகிறான். தானே அதில் தோய்ந்தபடி இருக்கிறான்.  அந்த ஊருக்கு சுற்றுலாப் பயணிகளின் வழிகாட்டியாக வரும் பெண் இவனது இசைத் திறமையை

வெளிச்சம் போட்டுக் காட்ட பெரும் முயற்சி செய்கிறாள். இந்தப் படத்தில் ஒரு காட்சி. வானவில்லைப் பற்றி பார்வையற்ற அவன் கேட்கிறான். ஏழு சுரங்களோடும் அவன் கைகளின் தொடுகையோடும் அவள் விளக்கும் காட்சி மிகவும் அற்புதமாக இருந்தது.


விஸ்வநாத்தின் கதைகளில் ஆதாரமாக ஓரே இழைதான். வண்ணங்கள் வேறு வேறு.

எந்த வித பலனும் எதிர்பாராது  ஒருபெண் ஆணின் நிலையை மேன்மைப் படுத்த தன்னால் ஆன முயற்சிகளைச் செய்கிறாள்.  வெல்கிறாள். இயல்பான அன்பும் இங்கிதமும் மெல்லச் சுரந்தபடியே இருக்கிறது. 


இப்படிப்பட்ட பெண்கள் நம்மிடையே இருக்கத் தானே செய்கிறார்கள்?





Comments

  1. சலங்கை ஒலி சங்கராபரணம் படங்கள் பார்த்திருக்கிறேன். அநேகமாக திரு கே விஸ்வநாத் இயக்குனர் மறைவை ஒட்டி இந்தப் பதிவு என்று நினைக்கிறேன். பாட்டு அருமை. பதிவுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ராம். சில வினோதமான பொருத்தங்கள். நான் வங்கிப் பணியில் சேர்ந்த நாள் 1.2.1979. சங்கராபரணம் படம் வெளியான நாள் 2.2.1980. கே.விஸ்வநாத் மறைந்த தினம் 2.2.2023

      Delete
  2. சலங்கை ஒலியும் சங்கராபரணமும் பாத்துருக்கேன். இயக்கம் தாண்டி இசையும் வேற லெவல் ரெண்டுத்லயும். கமலஹாஸன் வேல்யூ அடிஷன் ச ஒலி. இப்ப குழந்தைகள்ட்ட அவர் போட்டோ காமி.. " ஹை யாரடி நீ மோகினி தாத்தா" ம்பாங்க..🙂🙂

    ReplyDelete
  3. A beautiful tribute to a wonderful film maker.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...