ஜெயகாந்தனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இந்த விருது கொடுத்ததன் மூலம் சாகித்ய அகாடமி தன்னைக் கெளரவப்படுத்திக் கொண்டது என்று அவர் சொன்னார். விருது கிடைத்ததை விட இந்தப் பேச்சைப் பற்றியே எல்லோரும் பேசினார்கள். விருது வாங்கியதை முன்னிட்டு டெல்லியில ஒரு கூட்டம் நடந்திருக்கிறது. ஜெயகாந்தன் பேச வருகிறார். மைக் வேலை செய்ய வில்லை. உடனே ஜெயகாந்தன் தலையை மேலும் கீழும் அசைக்கிறார். உடனடியாகப் பார்வையாளர்களிடம் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார். Instant connect with the audience. இதைப் பற்றி கணையாழி பத்திரிக்கையில எழுதியிருந்தார்கள். மேலும் அவரோடு ஒரு பேட்டி கண்டு வெளியிட்டிருந்தார்கள்.
மதுரையில் ஜெயகாந்தன் பேச்சை மூன்று முறை கேட்டிருக்கிறேன். ஒன்று துக்ளக் பத்திரிக்கை இரண்டாவது ஆண்டு விழா. நான் பள்ளி மாணவன். அது பங்களாதேஷ் பிறந்த நேரம். முஜிபுர் ரஹ்மான் பற்றியும் வங்கம் பிறந்தது பற்றியும் மிகுந்த ஆவேசமாகப் பேசினார். வங்காளம் பிறந்த அந்த நாட்களில் எல்லோரும் மிகுந்த மனவெழுச்சி கொண்டிருந்தோம். இரண்டாவது மணியன் நடத்திய இதயம் பேசுகிறது பத்திரிக்கை விழா. சிவசங்கரி,ஓவியர் ஜெயராஜ், ஜெயகாந்தன் இவர்கள் எல்லாம் கலந்து கொண்டனர். தோழர்கள் ஜெயராஜை அவர் வாரப் பத்திரிக்கையில் வரையும் ஓவியங்களுக்காக வறுத்து எடுத்தனர். அப்போது ஜெயகாந்தன் மேடையில் நீங்காத புன்னகையுடன் இருந்தார். இந்த முறை அவரது பேச்சில் ஆவேசம் குறைந்திருந்தது. நிகழ்ச்சி முடிந்தவுடன் மதுரை சோமுவின் கச்சேரி இருந்தது. நானும் நண்பர் ராமநாதனும் கச்சேரி இறுதி வரை இருந்தோம்.
மூன்றாவதாக நான் ஜெயகாந்தன் பேச்சை நண்பர் ராமச்சந்திரனுடன் சென்று கேட்டேன். அது மிக்கயில் கோர்பச்சேவின் மறுசீரமைப்புக் காலம். சோவியத் யூனியன் என்பது மறைந்து சிறு நாடுகளின் காமன்வெல்த் ஆக மாறியிருந்த நேரம்.
சத்யமேவ ஜெயதே, உண்மை வெல்லும் என்ற கருத்தில் பேசினார்.தேடிச் சோறு நிதம் தின்று..என்ற பாரதியின் கவிதையைச் சொன்னார்.
தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று சொல்லும் போது குரலில் ஒரு அழுத்தம் வந்து விழுந்தது. தலை மேலும் கீழும் அசைந்தது.. கூட்டம் முடிந்து எல்லோரையும் வணங்கியபடி வந்த அவர் மப்டியில் இருந்த உளவுப் போலீஸைக் கண்டு கொண்டு வணங்கினார். உளவுப் போலீஸ் பதிலுக்கு வணங்குவதா வேண்டாமா என்று ஒரு கணம் திகைத்துப் போனார்.
ஜெயகாந்தன் எழுத்துக்கள் எனக்கு அறிமுகமானது ஆனந்த விகடனில் அவர் எழுதிய முத்திரைக் கதைகள் வழியாக. அது நான் பள்ளி இறுதி வகுப்புகளில் இருந்த காலம். குறிப்பாக சீசர் என்ற கதையைப் படித்தது நினைவில் இருக்கிறது. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என்ற ஷேக்ஸ்பியரின் வரியைப் பிடித்துக் கொண்டு எழுதிய கதை. ஊரிலிருந்து வந்த சொந்தக்கார இளைஞனையும் தனது மனைவியையும் சம்பந்தப் படுத்தி வீண் பழி சுமத்துவதை கணவர் எப்படி நிதானமாக எதிர் கொள்கிறார் என்பது கதை. என் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன் என்று சொல்லாமல் சொல்கிறார். இந்தக் கதைக்கு கோபுலு வரைந்த ஓவியம் உயிரோட்டமானது.
ஓரு மனிதன் ஒரு வீடு ஓரு உலகம் என்ற கதையை ஆனந்த விகடனில் தொடராக வாரா வாரம் வாசித்தது மனதில் பசுமையாக இருக்கிறது. ஹென்றி என்ற அற்புதமான மனிதனை வெறும் கதாபாத்திரமாக நினைக்க முடியவில்லை. அத்தியாயம் அத்தியாயமாகக் கதை வளர்ந்தது ஒரு ஓவியம் மெல்ல மெல்ல உருப் பெறுவது போல இருந்தது.
விழுதுகள், கருணையினால் அல்ல, யுக சந்தி. சிலுவை, பிரளயம், இப்படி எத்தனை எத்தனை கதைகள். எத்தனை எத்தனை கதைச் சூழல்கள். எத்தனை எத்தனை கதை மாந்தர்கள். எண்ண எண்ண வியப்பாக இருக்கிறது.
பாரீஸுக்குப் போ என்ற நாவலின் துவக்க வரி இப்படி இருக்கும்.
நாடுகள் என்று பிரிந்து கிடக்கும் எத்தனையோ வண்ணங்களில் மலர்ந்து செழிக்கும் மனித குல வாழ்க்கை என்னும் மலர்களில் ஊறித் ததும்பும் ஜீவ மதுவின் சுவை நாடி ரீங்கரிக்கும் வண்டு போல் இசை பாடிப் பறந்து வந்தது அந்த விமானம்.
இப்படி அவர் எழுத்தும் வந்து விழும் வார்த்தைகளும் seamless ஆக இருக்கும்.
இன்னும் ஓர் உதாரணம். இது ஊருக்கு நூறு பேர் என்ற நாவலில் இருந்து.
ஒரு பெண்ணின் உன்னதமான காதல் அந்தக் கண்களில் தெரிந்தது போலவே மிக மேன்மையாக அவளைக் காதலிக்கிற தனது மனமும் அவளுக்குத் தெரிவதை அவளோடு பேசாத பல மெளனமான கணங்களில் அவர் அடிக்கடி உணர்கிறார்.
எப்படி?
ஜெயகாந்தனின் எழுத்தும் பேச்சும் இன்றளவும் மனதை உயர்த்துவதாகலே இருக்கிறது.
இங்கே காண்பது சீசர் கதைக்காக கோபுலு வரைந்த ஓவியங்கள்.
நன்றி ஆனந்த விகடன்


ஜெயகாந்தன் பற்றி அருமையான பதிவு. பழையதை அசை போட்டுப் பார்க்கிறேன். ரீகல் டாக்கீஸில் நா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாடமி பரிசு கிடைத்ததற்கான பாராட்டு விழா. நாபா சிரிக்கச் சிரிக்க பேசினார். அதில் ஜெயகாந்தன் கலந்து கொண்டார். ஒரு மணி நேரம் பேச்சு. ஆழமான பேச்சு. மறக்க முடியாத அநுபவம். சோமு கச்சேரி கேட்ட நினைவு இருக்கிறது. பதிவுக்கு நன்றி
ReplyDeleteநன்றி ராம்
Deleteஎன்னுடைய ஃபேவரிட் கேரக்டர் ஹென்றி. என்ன ஒரு அழகான பாத்திரப் படைப்பு. எனக்கு அவருடைய சிறுகதகள் ரொம்ப பிடிக்கும். இந்த விகடன் தொகுப்பில் இல்லைன்னு நெனைக்கறேன். பிள்ளைகள் நன்கு வளர்ந்த பிறகு, கருவுறும் அம்மா, எல்லோரும்.ஏச, அவளுடைய. வெள்ளைக்கார மருமகளும் அந்த மகனும் அவளை ஆசையாக தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்வார்கள். அருமையாக இருக்கும்
ReplyDeleteஆமாம். ஹென்றி ஒரு மேன்மையான படைப்பு
Deleteஅந்த நாளும் அந்திடாதோ என எண்ணனும் அளவிருக்கு உசுப்பிவிட்ட நண்பா ! வாழ்க நீ என்ஞான்றும், என்று என்றும்,
DeleteM.s.s
அந்த நாளும் அந்திடாதோ என எண்ணும் அளவிருக்கு உசுப்பிவிட்ட நண்பா ! வாழ்க நீ என்ஞான்றும், என்று என்றும்,
DeleteM.s.s
நன்றி செளந்தர் படித்ததற்கும் இங்கே பதிவிட்டதற்கும்
Deleteஅவர் பேசும் போது ஒரு கருத்தை ஆழமாகச் சொல்ல வந்தார். அப்போது கூட்டம் கை தட்டியது. அதற்கு ஜெயகாந்தன் கடிந்து கொண்டார். கடைசி வரை யாரும் கை தட்டவே இல்லை
ReplyDeleteஅப்படியா?
Deleteதன்னுடைய கருத்துக்களை மிக ஆழமாக சொல்லும் சுபாவம் அவருடையது.
ReplyDeleteதெளிவுற அறிந்து தெளிவுற மொழிதல்.
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteநாம் சந்தித்த " விசேஷமான " நேரங்களில், நாம் பேசியதிலேயே,
பதிவை ஆரம்பத்திருக்கிறாய்.
சில நேரங்களில் சில மனிதர்கள் எப்படி விடுபடிருக்கிறது.
நன்றி பழைய நினைவுகளை எழுப்பியதற்கு.
சி.நே.சி.மனிதர்களுக்குத் தானே சாகித்ய அகாடமி விருது? திரைப்படமான அவர் கதைகளைப் பற்றி தனியாக எழுத வேண்டும்.
Delete