தாவரங்கள் நுணுக்கமான நரம்புக் கூட்டங்கள் அமையப் பெற்றவை. ஒளி,ஒலி,தொடுகை போன்ற புறத் தூண்டுதல்களுக்கு ஆட்படுபவை. தாவரங்கள் வலியை உணரும். எரித்தால்,ஒடித்தால்,வெட்டி எறிந்தால் மிகவும் வேதனைப் படும்.தாவரங்கள் பேசும். எப்படி? வேதிப் பொருட்களை சமிக்ஞையாக வெளிப்படுத்துவதன் மூலம். இந்த சமிக்ஞைகளை அருகில் இருக்கும் தாவரம் புரிந்து கொள்ளும். தாவரங்களால் கற்கவும் நினைவில் கொள்ளவும் முடியும். சில புறத் தூண்டுதல்களை அவை நினைவில் கொள்ளுமாறு கற்பிக்க முடியும். இப்படி எல்லாம் கண்டுபிடித்துச் சொன்னது ஜெகதீஷ் சந்திர போஸ். ஒரு நூறு ஆண்டுகளுக்கு மூன்பு. தான் கண்டு கொண்ட எதற்கும் அவர் காப்புரிமை பெறவில்லை. அதனால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. அதற்காக அவர் கவலைப் படவும் இல்லை. 'கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார் ஜகதீச சந்த்ரவஸு' என்று இவரைப் பாரதி புகழ்வார். "அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம்'. என்ற பாரதியின் வசன கவிதை இங்கே பொருள் கொள்ளத் தக்கது.
பல வருடங்களுக்கு முன்பு நண்பர் நரசிம்மனோடு திரூவனந்தபுரம் சென்றேன். இந்தப் பயணம் எப்படி என்றால் நெல்லை வரை பஜாஜ் ஸ்கூட்டரில். பின்பு இரவில் நெல்லையில் பஸ் பிடித்து திருவனந்தபுரம். அங்கிருந்து ஊருக்கு வெகுவாகத் தள்ளி சோலைகள் சூழ்ந்த பகுதி. அதிகாலை இருளில் அங்கே சேரந்தோம். மேடு பள்ளம் எல்லாம் ஏறி இறங்கினால் ஓடு வேய்ந்த வீடு. டார்ச் ஒளியில் நரசிம்மனுடைய அண்ணன் வரவேற்றார். சற்று ஓய்வெடுத்த பின்னர் வெகு அருகிலேயே இருந்த சிற்றருவியில் குளித்து விட்டு வந்தோம். பிள்ளைகள் எல்லாம் தொட்டாற் சிணுங்கி இலையைத் தொட்டு அது சுருங்குவதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். என்னோடு நரசிம்மனின் அண்ணன் ராகவன் நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் என்னிடம் சொன்னது இதுதான். சாதாரணமாக இதைத் தொட்டால் சுருங்கி விடும். ஆனால் நான் உனக்கு எந்த தீங்கும் செய்ய மாட்டேன் என்று மனதில் எண்ணியபடி தொட்டால் அது சுருங்காது. நான் அது போலவே செய்து பார்த்தேன் அது சுருங்கவே இல்லை.
தொட்டாற் சிணுங்கி மட்டும் அல்ல. எல்லாத் தாவரங்களும் புறத் தூண்டுதல்களுக்கு ஆட்படுபவை என்று அன்றே ஆராய்ந்து சொன்னவர் போஸ். சமீபத்தில் இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரத்தில் ஆராய்ச்சியாளர்கள் தாவரங்கள் தங்களுக்குத் தண்ணீர் தேவை என்றால் கூக்குரல் எழுப்புவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அது சாதாரணமாக நம் செவிகளுக்கு எட்டாது. அது நமது கேட்கும் திறனுக்கு மேம்பட்ட அலை வரிசையில் தான் கேட்கும். வசதி குறைவான காலத்தில் சொற்ப ஆராய்ச்சிக் கருவிகள் உதவியுடன் தாவரங்களின் சமிக்ஞை ஒலிகளை ஆய்வு செய்து சொன்னார் போஸ். தாவரங்களின் நுட்பமான இந்த உணர்வத் தன்மைக்கான ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளுக்கும் ஜகதீஷ் சந்திர போஸ் பெரும முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறார்.
அவருடைய ஆராய்ச்சிகளுக்கு அவர் கற்ற இந்தியத் தத்துவ மரபு பெருந்துணையாக இருந்திருக்கிறது. தாகூருக்கும் அவருக்கும் இடையே கடிதப் போக்குவரத்து நடந்திருக்கிறது. அது மிகவும் கவித்துவமாக இருந்திருக்கிறது. தாகூர் ஜெ.ஸி. போஸ் அவர்களை ஆசார்யர் என்றே அழைத்திருக்கிறார். ஒரு கவிஞனுக்கு உண்டான நுண் உணர்வும் கற்பனையும் போஸிடம் இருப்பதை தாகூர் அறிந்திருக்கிறார். கவிதானுபவம் தரும் பரவசத்தை போஸ் தனது கண்டுபிடிப்புத் தருணங்களில் உணர்ந்திருக்கிறார்.
போஸ் எழுதுகிறார்.
"நான் அன்னை பூமியின் உயிர்ச் சக்தியில் உயிர்த்து இருக்கிறேன்.. நான் எனது நாட்டு மக்களின் அன்பால் வளம் பெற்றிருக்கிறேன். பல வருடங்களாக இந்த தியாகத் தழல், இந்தியாவின் ஞானம் என்னும் தழல் எரிந்த வண்ணம் இருக்கிறது. லட்சக் கணக்கான இந்தியர்கள் தங்கள் இன்னுயிரால் அதைக் காத்து வருகின்றனர். ஒரு சிறு பொறி அதைச் சென்று அடைந்திருக்கிறது. என் வழியாக.'
மேன்மையான மனிதர்கள் இப்படித் தான். நான் செய்தேன் என்று அவர்கள் சொல்வது இல்லை. அடக்கம் தான் அவர்களுக்கு அணி.
Acknowledgement
Rupkatha Journal 'Acharya Jagadish Chandra Bose and Rabindranath Tagore'
Indian Express dated April 20, 2023
தொட்டாற்சிணுங்கி பற்றி புதிய தகவல். வித்தியாசமான பதிவு. தாவரங்கள் பற்றி நிறைய தகவல்கள். பதிவுக்கு நன்றி
ReplyDeleteநன்றி ராம். உடனுக்குடன் படித்து விட்டு எழுதுவதற்கு
Deleteசுவாரசியமான பதிவு. அடுத்த முறை தொ சி பார்த்தால் ட்ரை பண்ணி பார்க்கனும்.
ReplyDeleteநன்றி. டிரை பண்ணிப் பாரேன்
Delete