Skip to main content

சர்தார்

 பிஷன் சிங் பேடி. சுருக்கமாக பேடி. சக ஆட்டக்காரர்கள் அழைப்பது சர்தார் என்று.

வெளிநாட்டு நேர்முக வர்ணனையாளர்கள் அவரை பைடி என்று சொல்லுவார்கள்.

ஆமாம்..அப்போது எல்லாம் கிரிக்கெட்டை பெரும்பாலும் அறிவது ரேடியோவில் கேட்கும் நேர்முக வர்ணனை வழியாகத் தான். தவிர ஹிந்து நாளிதழில் விளையாட்டுப் பகுதியில் வரும் புகைப்படங்களுடன் கூடிய கிரிக்கெட் செய்திகள். நல்ல ஆங்கிலத்தில் எழுதும் விளையாட்டுச் செய்தியாளர்கள் அப்போது உண்டு. புகைப்படத்திற்கு கீழே ஓரிரண்டு வார்த்தைகள் எழுதி இருப்பார்கள். ரகளையாக இருக்கும்.  Amazing alacrity and alarming reflexes are characteristic of effective

close in fielder Vivian Richards  இது போல.





பிஷன் பேடி எப்படிப் பந்து வீசுவார், களத்தில் எப்படி நடந்து கொள்வார் எல்லாம் அறிந்து கொண்டது இப்படித் தான். பேடி இடக்கை சுழற்பந்து வீச்சாளர்.

பேடி பந்து வீசும் போது வீசும் இடது கரம் நன்றாக உயர்ந்திருக்கும். தோள் பட்டைகள் அகன்று இருக்கும். நெஞ்சு விம்மியபடி இருக்கும். ஓரு கால் எட்டு வைக்க மற்றொரு கால் ஒரு அழகான ஆரத்தில் வளைந்து இருக்கும்.. உயர்த்திய நிலையில் இடது கை பந்தைச் சுழல விடும். சுழன்ற படி வரும் பந்தை அடிப்பதா தடுப்பதா என்ற பெரும் குழப்பம் மட்டை பிடிப்பவருக்கு வந்து சேரும். அடித்தாலும் தடுத்தாலும் அது தற்கொலைக்கு ஒப்பாகி விடும். சுழல் பந்தை எதிர் கொள்வது என்பது கீழை நாட்டுத் தத்துவ மரபைப்  புரிந்து கொள்வது போல. பயிற்சியும் அனுபவமும் தேவை. மேல் நாட்டு ஆட்டக்காரர்களுக்கு அது புரியாது. கோட்டைத் தாண்டி வந்து அடிக்க முயலுவார்கள். அல்லது முன்னால் வந்து ஆடி சுழற்சியைக் கொல்ல முயலுவார்கள். அவர்கள் முயற்சி பெரும்பாலும் விரயமாக முடியும்.


பேடி , பிரசன்னா, சந்திரசேகர், வெங்கடராகவன் இந்த நால்வர் சம்பிரதாயமான சுழற்பந்து வீச்சாளர்கள். உள்நாட்டு ஆட்டக் களங்கள் சுழல் வீச்சுக்கு உதவி செய்யும். இந்த நால்வரும் கோலோச்சுவார்கள். ஆனால் கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்வார்கள். திறமையான அணி என்றால் வெளிநாட்டு களங்களில் வெற்றி பெற வேண்டும் என்று. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இருநூறு ரன்கள் எடுத்தால் போதும். இந்த சுழல் பந்து வீச்சாளர்கள் வெற்றி பெற்றுத் தந்து விடுவார்கள். எழுபதுகளில் இந்த ரன்கள் கூட எடுக்க முடியாத நிலை இருந்தது. 

கிரிக்கெட் பந்து சுழல வேண்டுமானால் அது பழைய பந்தாக இருந்தால் தான் முடியும். புதிய பந்து பளபளவென்று இருக்கும். ஒன்று அதை சரியாக கையில் பிடிக்க முடியாது. ஸீம் என்று செல்கிற நூல் பகுதியைப் பிடித்து சுழல வைக்க முயன்றால் விரல்களை அறுத்து விடும். இதற்கு இந்திய அணி ஓரு உபாயம் செய்வார்கள். எதிரணி மட்டையடிக்கும் பந்தை பிடிக்கும் ஃபீல்டர்கள் பந்தை தரையோடு தரையாக உருட்டி விடுவார்கள். விக்கெட் கீப்பர் அதை தரையோடு தரையாக பந்து வீச்சாளரை நோக்கி உருட்டி விடுவார். இப்படி உருட்டி உருட்டி பந்து பழசாக விடும். நான்காவது ஓவரில் சுழல் பந்து வீச வந்து விடுவார்கள். இதை எனக்கு சொன்னது என் நண்பன் வைத்தியநாதன் (ராஜு).. ஏனென்றால் சென்னையில் சேப்பாக்கத்தில் நடந்த இந்தியா மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தை நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. அந்த ஆட்டத்தில் தான் விஸ்வநாத் 97 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆண்டி ராபர்ட்ஸின் வேகப்பந்து வீச்சுக்கு மற்ற ஆட்டக்காரர்கள் வீழ்ந்து விட்டார்கள். பேடியும் சந்திரசேகரும் துணையாக ஆட .விஸ்வநாத் அதை சாதித்தார்.பேடி 17 ரன்கள் எடுத்ததாக ஞாபகம்.


பின்பு 1976ம் வருடம் பேடியின் தலைமையில் இந்திய அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு விளையாடச் சென்றது. போர்ட் ஆஃப் ஸ்பெயின் என்ற இடத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. அந்த ஆடுகளம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஒன்று. அடுத்த போட்டி பர்படாஸ் தீவு, ஜமைக்கா சபீனா பார்க்கில் நடந்தது. இந்த ஆடுகளம் வேகப் பந்து வீச்சுக்கு தோதானது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் மூன்று வேகப் பந்து வீச்சாளர்கள் மைக்கேல் ஹோல்டிங், வான்பர்ன் ஹோல்டர் மற்றும் வெயின் டேனியல்.  கலங்க அடித்து விட்டார்கள் இந்திய அணியை.  வீசிய எல்லாப் பந்துகளும் எகிறி வந்தால் என்ன செய்ய முடியும்?  ஒரே ஓவரில் தலைக்கு மேல் சீறும் பவுன்ஸர்கள். அதுவும் மூன்றுக்கு மேல். முந்தைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி கண்டதற்கு பழி தீர்ப்பது போல் இருந்தது.

அன்ஷுமன் கெய்க்வாட் என்ற இந்திய ஆட்டக்காரர் உடம்பில் அடி வாங்காத இடம் இல்லை. ஆனாலும் தீரமாகப் போராடினார்.

ஒரு பவுன்சர் அவருடைய காதைப் பதம் பார்த்தது. சரிந்து கீழே விழுந்தார். மொஹிந்தர் அமர்நாத் பவுன்சருக்கு தலை வணங்குவது கிடையாது. தலைக்கு மேல் மட்டையைச் சுழற்றி சிக்ஸர் அடித்து விடுவார். அது அவருடைய அப்பா லாலா அமர்நாத் தந்த பாடம். இந்த முறை அப்படி சுழற்றி எகிறி வந்த பந்தை அடிக்க முயன்ற போது அவர் மண்டையில் பந்து தாக்க மண்டை உடைந்தது.  அப்போது எல்லாம் தலைக் கவசம் கிடையாது. விஸ்வநாத்துக்கு கை எலும்பு முறிந்தது. பிரிஜிஷ் படேலுக்கு உதடு கிழிந்தது.  ஒரே ரத்தக் களறி. அப்போது அணித் தலைவர் பேடி ஒரு முடிவு எடுத்தார். மிச்சமிருக்கும் ஆட்டக்காரர்களை அடிபடாமல் காப்பாற்ற தாமாகவே முன் வந்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி ஒரு காரியத்தை அதற்கு முன்னும் யாரும் செய்தது இல்லை. அதற்குப் பின்னும் செய்தது இல்லை. அவருடைய முடிவு பெருத்த விமர்சனத்திற்கு உள்ளானது. பேடி எதற்கும் கவலைப் படவில்லை. சாயங்காலம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பொரிந்து தள்ளிவிட்டார். எநிரணித் தலைவர் கிளைவ் லாய்ட். அவர் சாதாரணமாக ஆட்டத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்ற ரீதியில் பேசினார்.



பேடி பந்து வீசும் போது சிரித்த முகத்தோடு இருப்பாராம். எதிரே ஆடுபவர் அவரை விளாசினால் சிரித்தபடி கை தட்டுவாராம். அடுத்த பந்தில் என்ன ஆகும் என்று அவருக்குத் தானே தெரியும்?  பேடி குறைவாகவே ரன் தருவார். எப்போதாவது சுழற்சியில் பிசகு நேரும். வர்ணனையாளர் ஆனந்த் சடில்வாட் " That was a bad ball from Bedi" என்று அவருக்கே உரித்தான உச்சரிப்புடன் சொல்லுவார்.  மேலும் பேடி அணிந்திருக்கும் தலைப்பாகை (பக்கா) நிறம் பற்றி எல்லாம் குறிப்பிட்டுச் சொல்வார்கள் வர்ணனையாளர்கள்.



1990 வருடம் ரோத்மன் கோப்பை போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப் போனது. அப்போது இந்திய அணியின் மேனேஜர் பேடி. அவர் சொன்னார். இந்த இந்திய அணி மொத்தத்தையும் பசிபிக் கடலில் தள்ளி மூழ்கடிக்க வேண்டும் என்று.


அதுதான் பேடி.

Comments

  1. செம்ம. கிரிக்கட்டில் ஆர்வமில்லாத எனக்கே இவ்வளவு சுவாரசியமாக இருக்கிறதே. எனக்கு எப்பவும் ஆச்சரியம் தரும் விஷயம் உன்னுடைய நினைவாற்றல். நினைவுகளை கோவையாக எழுத்தில் கொண்டு வந்திருப்பது மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயந்தி. படித்த விஷயங்கள், கேட்ட வார்த்தைகள், பழகிய நபர்கள் இவை எல்லாம் நான் மறப்பது இல்லை

      Delete
  2. In 1976 in Match against New Zealand he hit half century.When Richard Headely bowled a bouncer he objected saying bouncer should not be bowled to a tail ender.Infuriated Headely hit back by saying when Bedi is hitting sixes and fours why not bouncer be bowled to him
    S Baskar

    ReplyDelete
    Replies
    1. That was a nice remembrance. That 50 was his top score ever

      Delete
  3. In 1976 British Press launched character assassination campaign when Bedi exposed Vaseline Lever.

    ReplyDelete
  4. அருமையான நினைவு தப்பாத பழைய நினைவலைகள். பேடி பற்றி அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...