அவனது நரகம்
சிறுகதை
தி சந்தானம்
1
நான் அந்த சிறிய ஸ்டேஷனில் இறங்கினேன். என்னை அழைத்துப் போக அவன் வந்திருந்தான். கனமான எனது சூட்கேஸை வாங்கிக் கொண்டான். படுக்கையை நான் எடுத்துக் கொண்டேன்.
நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். மிகச் சிறிய நேரமே நின்ற ரயில் நாங்கள் நடக்க நடக்க கிளம்பியது. மெலிதாகக் காற்று வீசியது. வாதா மரம் ஒன்றிலிருந்து உதிர்ந்த அகலமான இலை நடைமேடையில் கொஞ்சம் நகர்வதும் பின்பு நிற்பதுமாக இருந்தது. அவன் எனக்கு முன்னால் நடந்தான். காலை ஐந்து மணி தான் ஆகியிருந்தது. அதற்குள் வெளிச்சம் எங்கும் பரவத் துவங்கியிருந்தது. என்னை அழைத்துப் போக வந்தவன் பெயர் லலன். லலன் சிங்.
என்னுடைய சாமான்களை அவன் டோங்காவில் (குதிரை வண்டி) வைத்தான்.
ஒரு சல்யூட் வைத்து விட்டு நகர்ந்து நின்றான். டோங்கா கிளம்பிச் செல்லும் வரை இருந்தான். மெல்லக் குதிரை வேகமெடுக்கக் குலுக்கலோடு டோங்கா சென்றது. நான் கம்பியைப் பிடித்துக் கொண்டேன். இருபுறமும் கோதுமை வயல்கள். ஏழு கிலோ மீட்டர் பயணம் செய்த பின் டோங்கா வங்கிக் கிளை இருந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. நன்றாகவே வெயில் ஏற ஆரம்பித்திருந்தது. என்னை இறக்கி விட்ட இடத்துக்கு எதிரில் ஒரு டீக்கடை இருந்தது. கரி தணலாகும் முன்பு புகையின் வாசம் வந்தது. சிரத்தையாக ஒருவர் மண் பூசிய அடுப்பை ஊதிக் கொண்டிருந்தார். நான் வண்டியிலிருந்து இறங்குவதைப் பார்த்ததும் அரே ஓ கிஷோர் என்று பெருங்குரல் எழுப்பினார். அந்தக் கூப்பாடு கேட்டவுடன் ஓடி வந்த கிஷோருக்கு 12 வயது இருக்கக் கூடும். நான் படுக்கையை அவனிடம் கொடுத்து விட்டு சூட்கேஸைக் கையில் எடுத்துக் கொண்டேன். முன்னால் வழிகாட்டியபடி கிஷோர் நான் தங்க வேண்டிய இடத்துக்கு இட்டுச் சென்றான்.
2
இந்த இரண்டு மாதங்களில் அலுவலகச் சூழல் பழகிவிட்டது. புதிய முகங்கள். புதிய அறிமுகங்கள். புதிய வாழ்க்கை. கொஞ்சம் புரிந்தும் கொஞ்சம் புரியாததும் ஆன மொழி. லலன் சிங்கோடு நல்ல பழக்கம் ஏற்பட்டு விட்டது. அவனும் அதிகம் பேசுபவன் அல்ல. அவன் வங்கியின் ஆயுதம் ஏந்திய காவலாளி. முன்னாள் ராணுவ வீரன்.
லலன் சிங்கின் கண்களில் துயரத்தின் சாயை இருக்காது. ஆனந்தமும் ததும்பி வழியாது. பச்சிளம் குழந்தையின் கண்களைப் போல இருக்கும். நல்ல உயரம். காதோரம் மெல்லிய நரை. வளர்ந்திருக்கும் தொந்தி. எந்த உயிருக்கும் தீங்கு எண்ணவோ, செய்யவோ முடியாதவன் என்று சொல்லும் படி இருக்கும் அவன் தோற்றம். ஒரு சிப்பாயாக உரக்கக் கூவியபடி எதிரியை அவன் தாக்கும் காட்சியை கற்பனை செய்யவே முடியவில்லை.
ஒரு முறை லலன் சிங்கின் வளைந்து நீண்டு இருக்கும் தொந்தி மேல் விளையாட்டாகச் சாய்ந்தேன். தூங்குவது போல் பாவனை செய்தேன். தகியா ஹை க்யா? (இது என்ன தலையணையா?) என்று மட்டுமே சொன்னான். மாலை. வேலை முடியும் நேரம். துப்பாக்கியை அதற்குரிய இடத்தில் வைக்க வந்தான். சாஹேப் ஒரு விஷயம் என்றான். என்னவென்று கேட்டேன். நீங்கள் செய்தது சரியில்லை. நீங்களே நான் பணியில் இருக்கும் போது இப்படி நடந்தால் என்னுடைய துப்பாக்கிக்கும் சீருடைக்கும் என்ன மரியாதை இருக்கும் என்றான். எனக்கு நான் செய்த தவறு உறைத்தது. அவனுடைய தோள்களை சமாதானப் படுத்துவது போலத் தொட்டேன்.
3
How well he loved her,and how lovable she was,in exactly the way he had always thought and dreamed and needed. Yet what was it that made her lovely? Was it something that could be named and singled out in a list of qualities? A thousand times no! She was lovely by virtue of the matchlessly simple and swift line which the Creator at a single stroke had drawn round her, and in this divine outline she had been handed over, like a child tightly wound up in a sheet after its bath, into the keeping of his soul.
வரிகளில் என் கண்கள் ஓடியது. நான் படுக்கையில் சாய்ந்து இருந்தேன். மேலே படிக்க முடியவில்லை. ஏதேதோ ஞாபகம் வந்தது. எங்கும் இருள் வந்து சூழ்ந்தது. ஒரு மெல்லிய சோகம் மனதைக் கவ்வியது. புத்தகத்தை மூடினேன். ஹரிக்கேன் விளக்கை ஏற்றினேன். வாசலில் குரல் கேட்டது. லலன் சிங். அவனுடைய வீட்டிற்கு அழைத்தான். நான் உடையை மாற்றிக் கொண்டு கிளம்பினேன். வீட்டில் அவன் மட்டுமே இருந்தான். அவனுடைய மனைவியை ஐந்தாவது பிரசவத்திற்கு அனுப்பியிருந்தான். அவனுக்கு ஏற்கனவே நான்கு பெண் மக்கள், சின்னதும் பெரிதுமாக. அவனுடைய மனைவி அவனை விட வயதில் மிகவும் சிறியவள். சென்ற முறை நான் அவர்கள் வீட்டுக்கு வந்த போது இருமிக் கொண்டே சாய் தயாரித்தாள். மிகவும் மெலிந்த தேகம் உடையவளாக இருந்தாள். தலைக்கு மேல் முக்காடை அடிக்கடி இழுத்து விட்டுக் கொண்டிருந்தாள்.
லலன் இன்று எனக்கு உண்பதற்கு லிட்டி செய்து கொடுத்தான். இந்த முறையாவது எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும், இல்லை என்றால் எனக்கு நரகம் தான் கிட்டும் என்றான். இதை அவன் மிகவும் சாதாரணமாகத் தான் சொன்னான். நான் அவனை வெறித்துப் பார்த்தேன்.
4
நான் எங்கள் கிளை இருந்த கிராமத்திலிருந்து வெகு தூரம் தள்ளியிருந்த நகரத்திற்கு வந்திருந்தேன். மாவட்டத் தலைவர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம். கூட்டத்தின் இறுதியாக போலீஸ் எஸ்.பி. பேசினார். வங்கிக் கிளைகளின் பாதுகாப்பில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களைப் பற்றிச் சொன்னார். கிட்டத்தட்ட அதே நேரத்தில் எங்கள் கிளையில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்றிருக்கிறார்கள் என்று பிற்பாடு தெரிந்தது. லலன் சிங் தீரமாகப் போராடியிருக்கிறான். கொள்ளையர்களில் இருவரைக் காயப்படுத்தியுள்ளான். தப்பிச் செல்லும் போது கொள்ளையர் அவனைச் சுட்டதில்
குண்டு பாய்ந்து இறந்து போயிருக்கிறான்.
மறுநாள் தான் வங்கிக் கிளைக்குப் போக முடிந்தது.. பயண நேரம் அங்கே மிகவும் கூடுதலாகவே இருக்கும்.. குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாது. வங்கிக் கிளையில் எல்லாமே புரட்டிப் போடப்பட்ட தினுசில் இருந்தது. போலீஸ் வந்து போனதற்கான அடையாளம் தெரிந்தது. மீண்டும் இன்று விசாரணை இருக்கலாம் என்று சொன்னார்கள். சம்பவம் குறித்த விபரங்களை நான் மற்ற ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டேன். லலன் சிங் வீழ்ந்த இடத்தைப் பாரத்தேன். தூய்மையான மலரைப் போல இருக்கும் அவனுடைய கண்கள் ஒரு கணம் மனதில் எழுந்து வந்தது.
அவன் நரகத்திற்குத் தான் போயிருப்பானா? சரியாகச் சொல்ல முடியவில்லை.
.jpeg)
நெகிழ்வான கதை. உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதா?
ReplyDeleteபாதி உண்மை
Deleteநெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம். தன் கடமையைச் செய்யும் போது தனது உயிரையே கொடுத்து விட்டார் லவன் சிங். குடும்பத்தை பற்றி நினைக்கும் போது மனம் கணக்கிறது. நல்ல பதிவு
ReplyDeleteநன்றி ராம். இது ஒரு புனைவு
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete👌
ReplyDeleteஅருமை சந்தானம். காட்சிப்பதிவுகள் கண் முன்னே விரிகின்றன. மனதில் ஓடுவதை அதே மொழியில் மென்மையுடன் சொல்வது ஒரு கலை. அது உனக்கு அழகாக வருகின்றது. இன்னமும் எழுதவும்.
ReplyDeleteநன்றி
Delete