மரணத்தைக் கடந்து போவது எளிதாக இருப்பதில்லை. அதில் ஒரு எதிர்பாராத் தன்மை இருக்கிறது. பூச்சியத்துக்குள்ளே ஒரு ராச்சியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் என்று ஒரு பழைய திரைப்பாடல் உண்டு. மரணமும் நமக்குப் புரிவதில்லை. சில பொழுது அது நம்மை நிலைகுலைய வைத்து விடுகிறது.
ஒரு ஹங்கேரிய நாட்டுப்புறக் கதை. முன்பொரு காலத்திலே ஒரு ராச்சியம் இருந்தது. அதில் ஒரு நகரம் இருந்தது. அதிலே ஒரு அரண்மனை இருந்தது. அங்கே ஒரு ராஜா இருந்தான். அவனுக்கு ஒரு மகன். வாலிப வயது அடைந்தவன். ஒரு நாள் மகன் சொன்னான். மரணமே இல்லாத ஒரு நாட்டை நான் தேடிப் போகிறேன் என்று. ராஜா தடுத்துப் பார்த்தான். மரணம் தவிர்க்க முடியாதது. மரணம் இல்லாத நாட்டைத் தேடுவது வீண் முயற்சி என்றான். ராஜகுமாரன் கேட்பதாக இல்லை. புறப்படுகிறான். வழியில் ஒரு பெரிய மரத்தைப் பார்க்கிறான். அதன் உச்சாணிக் கிளையில் ஒரு கழுகு இருந்தது. அது தன் அலகுகளால் கிளையை அசைத்து இலைகளை உதிரச் செய்த வண்ணம் இருந்தது. இவனைப் பார்த்தவுடன் பறந்து வந்தது. அதன் அலகுகள் தரையைத் தொட்டது. தொட்ட வினாடியில் பறவை அரசனாக மாறியது.
ராஜகுமாரன் கேட்டான். ஏன் இந்த மரக்கிளையை உலுக்குகிறீர்கள்? அரசன் சொன்னான். அது எங்கள் விதி. இலைகளை அசைத்து உதிர்த்துப் பின் வேரோடு மரத்தைப் பிடுங்கி எறிந்த பின்புதான் நானோ என்னைச் சேர்ந்தவர்களோ இறக்க முடியும். சரி, மாலையாகி விட்டது. இனி இங்கே வேலை இல்லை. அரண்மனைக்குச் சென்று உணவருந்தி தங்கிப் போகலாம். இப்படிச் சொல்லி ராஜகுமாரனை அழைத்துச் செல்கிறான் அரசன். அவனுடைய மகள் பேரழகி. உணவு ஏற்பாடுகளைக் கவனித்து பரிமாறச் செய்கிறாள். பின்பு கழுகரசன் ராஜகுமாரனின் பயண விவரங்களைக் கேட்கிறான். ராஜகுமாரன் மரணம் இல்லாத நாட்டைத் தேடிப் போலதைச் சொல்கிறான். கழுகரசன் சொல்கிறான். நீங்கள் அங்கேதான் வந்திருக்கிறீர்கள். என் மகளை மணந்து கொண்டு அறுநூறு ஆண்டுகள் சுகமாக வாழலாம் என்கிறான்.
ராஜகுமாரன் இதை ஏற்கவில்லை. அறுநூறு ஆண்டுகளுக்குப் பின் மரணம் வந்து தானே தீரும். நான் மரணமே இல்லாத நாட்டைத் தேடுகிறேன் என்கிறான். கழுகரசனின் மகள் பேசிப் பார்க்கிறாள். இளவரசியின் பேச்சும் எடுபடவில்லை. இளவரசி அவனிடம் ஒரு சிறிய பெட்டியைத் தருகிறாள். மரணம் இல்லாத நாட்டைத் தேடும் முயற்சியில் நீங்கள் களைத்துப் போகலாம். அப்போது இந்தப் பெட்டியைத் திறந்தால் என் முகம் தெரியும். உங்கள் களைப்பு மறைந்து விடும். மேலும் நீங்கள் எண்ணத்தைப் போல விரைவாகவும் சூறாவளி போல வேகமாகவும் செல்ல முடியும் என்கிறாள். இளவரசிக்கு நன்றி கூறிவிட்டு கழுகரசனிடமும் விடை பெற்றுக் கொண்டு ராஜகுமாரன் பெட்டியுடன் கிளம்புகிறான்.
இளவரசி தந்த பரிசு அவனுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அது மாலை நேரம். ராஜகுமாரன் ஒரு மலை உச்சியில் இருந்தான். அங்கே வழுக்கைத் தலையுடன் ஓருவன் தோண்டிக் கொண்டிருந்தான்.தோண்டி எடுத்த மண்ணை வாளியில் நிறைத்து கொட்டிவிட்டு வந்தான். ராஜகுமாரன் அவனிடம் தோண்டுவதன் காரணத்தைக் கேட்டான். வழுக்கைத் தலை மனிதன் சொன்னான். இது எங்கள் விதி. இந்த மலை முழுதும் தோண்டி சமவெளி ஆக்கிய பின்பு தான் எங்களுக்கு மரணம் வாய்க்கும் என்றான். அருகிலிருந்த மரத்தின் இலையைப் பறித்தான். உடனே மண்ணைத் தோண்டுபவனின் எளிய தோற்றம் மறைந்து கம்பீரமான அரசனாக மாறி விட்டான். அந்த வழுக்கை அரசன் ராஜகுமாரனை தனது அரண்மனையில் தங்கி உணவருந்திச் செல்ல வேண்டுகிறான். வழுக்கை அரசனின் மகள் முன்பு பார்த்த இளவரசியை விட அழகியாக இருந்தாள். ராஜகுமாரனின் பயண நோக்கத்தை வழுக்கை அரசன் கேட்கிறான். ராஜகுமாரன் மரணமில்லாத நாட்டைத் தேடிப் போகிறேன் என்கிறான். நீ சரியான இடத்துக்குத் தான் வந்திருக்கிறாய். அந்த மலையைச் சமன்படுத்த எண்ணூறு ஆண்டுகள் பிடிக்கும். நீ இளவரசியை மணந்து கொண்டு சந்தோஷமாக வாழலாம் என்கிறான். ராஜகுமாரன் மறுத்துவிட்டு மறுதினம் தன் வழியே செல்ல முனைகிறான். இளவரசி எத்தனை சொல்லியும் கேட்கவில்லை. அவள் ஒரு தங்க மோதிரத்தைத் தன் நினைவாக வைத்துக் கொள்ளச் சொல்கிறாள். அதை அணிந்து கொண்டால் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தை அடைந்து விடலாம் என்கிறாள். ராஜகுமாரன் அதைக் கவனமாகப் பெற்றுக் கொண்டு விடை பெறுகிறான்.
சிறிது தூரம் சென்ற பின்பு ராஜகுமாரன் தங்க மோதிரத்தை விரலில் அணிந்து கொண்டு உலகின் கடைசி எல்லையில் இருக்கும் நாட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறான். எண்ணிய மாத்திரத்தில் அவன் அந்த நாட்டில் இருக்கிறான். அங்கு இருக்கும் மனிதர்கள் பேசும் மொழி அவனுக்குப் புரியவில்லை. அதிர்ஷ்டவசமாக தன்னுடைய நாட்டைச் சேர்ந்த ஒருவனைச் சந்திக்கிறான். அவனிடம் விசாரித்த போது அது நீலப் பேரரசின் தலைநகரம் என்று ராஜகுமாரன் அறிகிறான். மேலும் அந்த நாட்டை ஒரு இளம் பெண்தான் ஆண்டு வருவதாக அறிந்தான். அவனுடைய உதவியுடன் ராஜகுமாரன் அரண்மனையை அடைகிறான். இளைய ராணி தேச விசாரணை செய்து கொண்டிருந்தாள். பனி போன்ற மெல்லிய வெண் துணி அவள் முகத்தை மறைத்திருந்தது. அந்நியனைப் பார்த்தவுடன் சபையைக் கலைந்து போகச் சொல்லிவிட்டு ராஜகுமாரனை அருகே அழைக்கிறாள். ராஜகுமாரன் பேசும் மொழி அவள் அறிந்ததே. அவன் அங்கே வந்த விவரத்தைக் கேட்டு அறிகிறாள். அவனை ஒரு அறைக்கு இட்டுச் செல்கிறாள். அந்த அறை முழுதும் ஊசிகள் நெருக்கமாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இந்த ஊசிகள் முற்றிலுமாகத் தீர்ந்து போகும் வரை நான் தைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவரை எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் மரணம் இல்லை. இது எங்கள் விதி. அதற்கு ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கும். எனவே நீங்கள் இங்கேயே இருந்து எனது அரியணையைப் பகிர்ந்து கொள்ளலாம். நிம்மதியாக நாம் வாழலாம் என்கிறாள். ஆனால் ராஜகுமாரன் இதை ஏற்கவில்லை. மரணமே இல்லாத நாட்டைத் தேடிப் பயணப்பதிலே குறியாக இருக்கிறான். ராணி மறுத்து ஏதும் சொல்லத் துணியவில்லை. அவனிடம் ஒரு தங்கப் பிரம்பைத் தருகிறாள். அந்தப் பிரம்பு அவன் விரும்பும் பொருளாக மாறும். சமயத்திற்கு ஏற்ப அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ராஜகுமாரன் நன்றி கூறிவிட்டு மறு நாள் கிளம்புகிறான். தங்க பிரம்பைப் பத்திரமாக தன்னுடன் எடுத்துச் செல்ல அவன் மறக்கவில்லை.
சிறிது தூரம் சென்ற பின்பு நிலப் பரப்பு முடிவுறுவது போல இருந்தது. சற்றுத் தொலைவில் ஒரு அகண்ட நதியை அவன் பார்க்கிறான். பின்னும் நெருங்கி நதிக்கரையை அடைந்த போது, தலைக்கு மேலே காற்றில் ஒரு அழகிய மாளிகை அசைந்தாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறான். அதை எப்படி அடைவது? தங்கப் பிரம்பு ஞாபகம் வருகிறது. அதை எடுத்து மாளிகைக்குச் செல்லும் பாலமாக அது மாற வேண்டும் என்று நினைக்கிறான். உடனே மாளிகை வாசலில் இருந்து ஓரு தங்க ஏணி புறப்பட்டு ஆற்று மணல் பரப்பில் ஊன்றி நிற்கிறது. அவன் ஏணியின் உதவியுடன் மாளிகை வாசலை அடைகிறான். வாசலை நெருங்கும் போது ஒரு வினோதமான மிருகம் அவனைத் தாக்குகிறது. நிலைகுலைந்து போன அவன் வாளை எடுத்து அதன் தலையைச் சீவுகிறான். வெட்ட வெட்ட தலை முளைக்கிறது. அவனுடைய கைகள் சோர்ந்து போயின. அப்போது மாளிகையின் சன்னல் திறக்கிறது. ராணியின் முகம் தெரிகிறது. ராஜகுமாரனுக்கும் வினோத மிருகத்துக்கும் இடையிலான போராட்டத்தைக் கண்ட அவள் ஒரு பணியாளை விட்டு ராஜகுமாரனை அழைத்து வரச் சொல்கிறாள். மிகுந்த அன்புடன் அவன் அங்கே வந்த விவரத்தைக் கேட்கிறாள். ராணியிடம் அவன் தனது கதையைச் சொன்னதும் நீங்கள் தேடி வந்த இடம் இதுதான். வாழ்வும் மரணமும் எனது ஆணைக்குக் கட்டுப்பட்டவை. இங்கு மரணம் கிடையாது. இப்படி எல்லாம் ராணி சொல்கிறாள். அவன் மரணமே இல்லாத நாட்டில் தங்கி இருக்கிறான். அங்கே வந்து ஆயிரம் ஆண்டுகள் கடந்து விடுகிறது. ஆனால் வெறும் ஆறு மாதம் தான் ஆனது போல் இருந்தது. அவனுக்கு வீட்டு நினைவு வந்து விடுகிறது. நான் உடனே கிளம்பிச் சென்று என் தாய் தந்தையரைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறான்.
உனக்கு என்ன பைத்தியமா? அவர்கள் இறந்து போய் எண்ணூறு ஆண்டுகள் ஆகி விட்டது என்று ராணி சொல்கிறாள். என்றாலும் ராஜகுமாரன் தனது நாட்டுக்குப் போக வேண்டும் என்கிறான். உடனே அவள் பொக்கிஷ அறையைத் திறந்து இரண்டு குடுவைகளை எடுக்கிறாள். ஒன்று வெள்ளி. மற்றது தங்கம். வெள்ளிக் குடுவையில். அறையின் மூலையில் இருந்த கதவின் கீழிருந்த நீரை நிரப்பிக் கொள்ளச் சொல்கிறாள். அந்த நீரை யார் மீது தெளித்தாலும் மரணம் நேரிடும். அறையின் இன்னொரு மூலையின் கதவைத் திறந்தால் ஒரு பாறை. அது அழிவின்மையின் பாறை. அதிலிருந்து சுரக்கும் நீரை தங்கக் குடுவையில் நிரப்பிக் கொள்ளச் சொல்கிறாள். அந்த நீரை யார் மீது தெளித்தாலும் உயிர் பெற்று விடுவார்கள். இறந்து போய் ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருந்தால் கூட.
இரண்டு குடுவைகளையும் ராஜகுமாரனின் கழுத்தில் மாட்டிவிட்டு அவனை வழியனுப்புகிறாள் ராணி.
திரும்பி வரும் போது மென்பனி போல் முகத்திரை அணிந்த ராணி கையில் கோத்த நூல் ஊசியுடன் படுக்கையில் வீழ்ந்து கிடப்பதைப் பார்க்கிறான். தங்கக் குடுவை நீரைத் தெளித்து உயிர்ப்பிக்கிறான். அது போலவே மண்வெட்டி ஒருபுறமும் கவிழ்ந்த வாளி மறுபுறமுமாய்க் கிடந்த வழுக்கை அரசன், சிறகுகள் மடிந்து ஒருபுறம் சாய்ந்து இருக்கும் கழுகரசன் இருவருக்கும் உயிர் தருகிறான். இறுதியாக அவனது நாட்டை அடைகிறான். பளிங்கு அரண்மனை இருந்த இடத்தில் அவன் கண்டது ஒரு கந்தக நதி. உயர்ந்து உயர்ந்து தாழும் நீலப் பிழம்புகள். தந்தை தாயைக் கண்டறிய முடியவில்லை. துயரத்தோடு வீதிகளில் நடந்து வருகிறான் .எங்கு போவதென்று தெரியாமல். அப்போது பின்னால் ஒரு குரல். ஆயிரம் ஆண்டுகளாக உன்னைத் தேடுகிறேன். கடைசியில் இன்று உன்னைப் பிடித்து விட்டேன். ஓரு முதிய உருவம் வெண் தாடியுடன். மரணம். கணப் பொழுதில் அவன் கையில் அணிந்திருநத மோதிரத்தை உருவினான். உடனடியாக அங்கே தோன்றிய கழுகரசன், வழுக்கை அரசன், வெண்பனி போலும் முகத்திரை அணிந்த அரசி மூவரும் மரணம் என்ற கிழவனை இறுகப் பிடித்துக் கொள்கிறார்கள். மரணம் செல்லும் வேகத்தை அவர்கள் யாரும் அறியவில்லை. ராஜகுமாரன் தப்பித்தவனாய் விரைந்து சென்று மரணமில்லாத நாட்டில் ஓரு கால் பதிக்க முனையும் போது மரணம் அவனது மறு காலை இறுகப் பற்றுகிறது. அது கூவுகிறது. நில்! நீ எனக்கானவன். சத்தம் கேட்டு வெளியே வந்தாள் ராணி. அவனோ பாதி உள்ளே வந்து விட்டான். அவன் எனக்குத் தான் என்கிறாள். மரணக் கிழவன் விடுவதாக இல்லை. ராணி ஒரு யோசனை கூறுகிறாள். ஓரு பந்தயம் வைப்போம். ராஜகுமாரனை வானில் எறிவோம். அவன் எனது நாட்டின் பகுதியில் விழுந்தால் அவன் எனக்கு. வெளியே விழுந்தால் உனக்கு. மரணம் சம்மதிக்கிறது. ராணி தனது கால்களை ராஜகுமாரன் கால்களுக்கு கீழ் கொடுத்து உந்தியதில் அவன் உயரே உயரே நட்சத்திரங்களூடே மறைகிறான். கண்ணுக்குத் தெரியாத தொலைவில் சென்ற அவன் ஒரு சிறிய பூச்சி போலத் தெரிகிறான். கீழே வேகமாக இறங்கிய அவன் சரியாக மரணம் இல்லாத நாட்டின் பகுதியிலேயே வந்து விழும் போது விரைந்து சென்ற ராணி அவனைக் கைகளில் வாங்கிக் கொள்கிறாள். தோற்றுப் போனது மரணம்.
ராணியின் பணியாளர்கள் அதை நன்கு உதைத்து விரட்டி விடுகிறார்கள். இப்படிக் கதை முடிகிறது.
மரணத்தை இந்தக் கதையில் வருவது போல் வெல்ல முடியுமா? அச்சத்தை வேட்கைதனை விட்டால் சாவு இல்லை என்றான் பாரதி. மேலாகக் கோபத்தை விடச் சொன்னான். காலா, என் கால் அருகினில் வாடா, உன்னை சற்றே மிதிக்கிறேன் என்றான்.
புலனைந்து மேயும் பொறியைந்து நீக்கி நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் என்றார் நம்மாழ்வார்.
Of all the wonders that I yet have heard,
It seems to me most strange that men should fear,
Seeing that death, a necessary end,
Will come when it will come.
என்று சொன்னான் ஷேக்ஸ்பியர்.
என்றாலும் மரணத்தை மனம் அஞ்சுகிறது. அது நிழல் போல எங்கோ பதுங்கியிருக்கிறது.
நினைவு என்னும் வாளின் கூர்முனை நமது இருப்பைப் பதம் பார்த்தபடி தானே இருக்கிறது
Wow....
ReplyDeleteThank you
DeleteFantastic..
ReplyDeleteThank you
Deleteசும்மா ஜாலியா ஒரு கவிதை.
ReplyDeleteமரணம் நெருங்கும் நேரம்
மக்களுக்குப் பல கவலை
மகள், மகன் மணம் முடிக்க வேண்டுமே?
பேரனோ பேத்தியோ
கண்குளிரக் காண வேண்டுமே?
சகபாதியை சரியாக யார் கவனிப்பர்?
இத்யாதி இத்யாதி
என் தோழியின் கவலை
தன் ஒடுக்கமான வீட்டில்
உறை பெட்டி
உள்ளே போகுமா என்று
ஆனால் என் கவலை எல்லாம்
சுற்றமும் நட்பும் கூடும் நேரம்
சிரித்துக் கொண்டாடாமல்
கிடக்க நேருமே
என்பதுதான்...
ஆனா நெசத்ல தெனாலி கமல் மாரி மரணம் பயம், இன்சுரன்ஸ் பயம், ஏன் நீல நிற ஷாமியானா சமேத சிவப்பு நாற்காலிகள் பார்த்தால் பயம்னு லிஸ்ட் நீளும். :)
சில மரணங்களை கடக்கவே முடியாமல் கலங்கித்தான் நாட்களை கடக்கிறாம், அந்தக் காலம்தான் காயத்தை ஆற்றுமென நம்பி..
ReplyDeleteஉண்மை
Deleteமீண்டும் மீண்டும் சொல்லித்தான் ஆகவேண்டி இருக்கிறது. நீ ஒரு அருமையான கதை சொல்லி.
ReplyDeleteநன்றி
Deleteநீளமான கதை. மரண பயம் என்பார்கள். பயம் இருக்கும்வரை மரணமும் கொடுமையானது தான். வருவதை அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டால் பயம் நம்மிடம் நெருங்காது. நல்ல பதிவு.
ReplyDeleteநன்றி ராம்.
DeleteAllowing things to happen eases us out.Let Death happen when it has to., Fantastic story
ReplyDeleteThank you Suresh for reading
Delete