Mahmoud Darwish
Fady Joudah
ஒரு இளைய கவிக்கு
TRANSLATED BY FADY JOUDAH
தமிழில் தி சந்தானம்
எங்களது விவரங்களை நம்பாதே. மறந்து போ
உனது சொந்த வார்த்தைகளிலேயே தொடங்கு
ஏதோ நீதான் முதலாக கவிதை எழுதுபவன் போல அல்லது
நீ தான் கடைசிக் கவி என்பதைப் போல
எங்களது படைப்புகளை நீ படித்தாலும் எமது நீட்சியாக நீ எழுதுவது இருக்க வேண்டாம்
துன்பத்தின் புத்தகத்தில் எங்களின் தவறுகளைத் திருத்தி எழுதியதாக அவை இருக்கட்டும்
யாரிடமும் கேட்காதே நான் யாரென்று
உனது அன்னையை யாரென்று உனக்குத் தெரியும் தானே
தந்தை..
தந்தை என்றால், உனக்கு நீயே தந்தையாக இரு
உண்மை வெண்மை. அதன் மேலே எழுதி விடு
காக்கையின் மையைக் கொண்டு
உண்மை கருமை அதன் மேலே எழுதி விடு
கானலின் ஒளியைக் கொண்டு
பருந்தோடு உனக்கு சண்டை என்றால் பருந்தைப் போலவே உயர்ந்து எழு
பெண்ணோடு உனக்குக் காதல் என்றால்
அவளல்ல, நீயே அதன் முடிவை விரும்புவனாக இரு
நாம் யோசிப்பதை விட வாழ்வின் உயிர்ப்பு குறைந்து தான் இருக்கிறது
ஆனால் நாம் அதிகம் யோசிப்பது கிடையாது
உணர்வுகளின் நலன் கெட்டு விடுமோ என்று
ஒரு ரோஜாவை நெடுநேரம் நீ நினைத்தால்
புயலுக்கு நீ அசைந்து கொடுக்க மாட்டாய்
நீயும் என்னைப் போலத்தான்
ஆனால் எனது ஆழங்கள் தெளிவாக இருக்கிறது
உனக்கான பாதைகளின் ரகசியங்கள் ஒருபோதும் முடிவதில்லை
அவை இறங்கும் ஏறும்
அவை இறங்கும் ஏறும்
இளமையின் இறுதியை நீ திறமையின் முதிர்ச்சி என்று சொல்லலாம்
அல்லது ஞானம் என்று
சந்தேகமில்லை அது ஞானமே
வரிகள் இல்லாப் பாடலின் ஞானம்
கையில் இருக்கும் ஆயிரம் பறவைகள் மரத்தை அணிந்திருக்கும் ஒரு பறவைக்கு ஈடாகாது
கடுமையான நாட்களில் கவிதை என்பது கல்லறை மீதான அழகிய மலர்களாக இருக்கும்
எடுத்துக்காட்டாக இருப்பது
அத்தனை எளிதல்ல
நீ நீயாகவே இரு
எதிரொலியின் எல்லைகளுக்கு அப்பால் வேண்டுமானால் வேறாக இரு
ஆர்வத்திற்கும் காலாவதியாகும் தினம் உண்டு, அது நீட்டிக்கப் படும் அளவு
எனவே உனது இதயத்தின் பொருட்டு உக்கிரம் கொள்
உனது வழியை அடையும் வரை அதனைப் பின்தொடர்ந்து செல்
உனது அன்பிடம் சொல்லி விடாதே நீதான் நான் என்று
மேலும் நான் தான் நீ என்று
நீ மாற்றிச் சொல் நாம் உபரி மேகத்தின்
தப்பியோடிய மேகத்தின்
இரண்டு விருந்தினர்கள் என்று
விலகிச் செல் முழு பலத்துடன்
விதிகளிலிருந்து விலகு
ஒரே வாசலில் இரண்டு நட்சத்திரங்களை வைக்காதே
அவசியமானதிற்கு அருகில் மற்றதை வை
எழுகின்ற பேரானந்தம் நிறைவு கொள்ளுமாறு
எமது அறிவுறுத்தல்கள் சரியே என்று எண்ணி விடாதே
ஒட்டகங்களின் வரிசையில் தடங்களை மட்டுமே நம்பு
கவியின் உள்ளத்தில் போதனை ஓரு துப்பாக்கிக் குண்டு போல
ஒரு பயம் தரும் அறிவு
கோபம் கொள்ளும் போது காளையைப் போல் திடமாக இரு
காதல் கொள்ளும் போது பாதாம் மலரைப் போல மென்மையாக இரு
மூடிய அறையில் பாடும் போது எதுவாகவும் இல்லாமல் இரு
பாதை நீள்கிறது ஒரு புராதனக் கவியின் இரவைப் போல
சமவெளிகளும் மலைகளும் நதிகளும் பள்ளத்தாக்குகளும் நடக்கின்றன
உனது கனவின் அளவு தொட்டு
ஒரு லில்லிப் புஷ்பம் உன்னைப் பின் தொடர்கின்றது
அல்லது ஒரு தூக்குமரம்
உனக்கான பணிகளே நான் உன்னைப் பற்றி கவலைப் பட வைக்கிறது
நான் கவலைப்படுகிறேன்
குழந்தைகளின் கல்லறை மீது நடனம் செய்பவர்களில் இருந்து
பாடகிகளின் தொப்புளில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் காமராவில் இருந்து
நீ என்னை ஏமாற்றமடைய விடமாட்டாய்
மற்றவர்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் உன்னைத் தொலைவு படுத்திக் கொண்டால்
எது என்னைப் போல இல்லையோ அது மிகவும் அழகாக இருக்கும்
இப்போதிலிருந்து உனது ஒரே காப்பாளர் கைவிடப்பட்ட எதிர்காலம்
துயரில் மெழுகைப் போல உருகும் போது யோசிக்காதே
யார் உன்னைக் காண்பார்கள்
யார் உனது உள்ளுணர்வின் ஒளியைத் தொடருவார்கள் என்று
உன்னையே நினை. என்னுள் இத்தனை தானா என்று
.
கவிதை எப்பொழுதும் முற்றுப் பெறுவதில்லை.
வண்ணத்துப் பூச்சிகள் அதை முழுமையுறச் செய்கிறது
காதலுக்கு அறிவுரைகள் கிடையாது. அது அனுபவம் மட்டுமே
கவிதைக்கு அறிவுரை கிடையாது. அது திறமை மட்டுமே.
.இறுதியாக ஒன்று. உனக்கு சலாம்
சற்று நீளமான கவிதை. நிதானமாகப் படித்தேன். கருத்து நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
Deleteநன்று !! முந்தைய படைப்புகள் நமக்குள் ஒரு தாகத்தை உண்டாக்கும்போது, அவைகளையே அருந்தக்கூடாது. தாகம் தீர்க்கும் நீரை வேறு இடத்தில் கண்டு கொள்வதுதான் கலை, இலக்கியத் தேடல் !!
ReplyDeleteநன்றி
Delete