Skip to main content

சந்தேகத்தின் நிழல்

 சுஜாதா எழுதிய ஒரு  கதை ஒரு விபத்தின் அனாடமி. பல வருடங்களுக்கு முன்னால் படித்திருக்கிறேன். விபத்து ஒன்று நடக்கிறது. ஹிட் அண்டு ரன் (Hit and run) கேஸ். குற்றவாளியை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பது கதை. அது சுஜாதாவின் ஆரம்பகாலக் கதைகளில் ஒன்று.


அனாடமி என்ற வார்த்தையை அறிந்தது மேலே சொன்ன கதையைப் படிப்பதற்கும் பல வருடங்கள் முன்னால்.  மதுரை மருத்துவக் கல்லூரிக்கு பள்ளி மாணவர்கள் ஒரு கூட்டமாகச் சென்றோம்.அங்கே ஒரு கல்விக் கண்காட்சி. ஒவ்வொரு துறையாக அழைத்துச் சென்றார்கள்.அதில் ஒர் துறை அனாடமி பற்றியது. அனாடமி என்றால் உடற்கூறு இயல் என்று பின்புதான் தெரிந்தது. அந்த அறையில் ஒரு உயிரற்ற உடல் இருந்தது. நடுத்தர வயது மதிக்கத்தக்க மனிதனின் உடல். கைகளில் ரப்பர் உறை அணிந்திருந்த ஒரு அண்ணன் உடற் பாகங்களைச் சுட்டிக் காட்டி ஏதேதோ விளக்கம் சொல்லியபடி இருந்தார்.


மிகச் சமீபமாக Anatomy of a fall என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப் பட்ட படம். இதை இயக்கியவர் ஜஸ்டின் ட்ரட்.  இதை டைப் அடிக்கும் போது சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது இவருக்குக் கிடைத்திருக்கிறது. இந்தக் கதையை கொரோனா காலங்களில் இந்தப் பெண்மணி எழுதியிருக்கிறார்.


கதையைப் பார்ப்போம்.  வெள்ளிப்பனி மலையருகே ஒரு தனித்த வீடு. முழுவதும் மரத்தால் ஆனது.  வெளியில் எங்கும் வெண்மை. தொடர்ந்த பனிப் பொழிவு. பனித்துகள்கள் விரித்த வெணபடுக்கை. இந்த வீட்டில் வசிக்கும் பெண்மணி சாண்ட்ரா. ஜெர்மனியைச் சேர்ந்தவர். எழுத்தாளர். கணவர்  சாமுவெல்     பிரெஞ்சுக்காரர்.  பல்கலைக்கழகப் பேராசிரியர்.  தானும் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற நினைப்பு அவருக்கு உண்டு. இவர்களுக்கு ஓரு மகன். டேனியல். விபத்தில் பார்வை இழந்தவன். விபத்திற்குக் கணவனின் அலட்சியமே காரணம் என்று சாண்ட்ரா நம்புகிறார்.


ஒருநாள் சாண்ட்ராவைப் பேட்டி எடுக்க ஒரு பெண் வருகிறாள். பேட்டி எடுக்கும் போது சங்கடம் தருவது போல் மாடியிலிருந்து உரத்து இசை ஒலிக்கிறது. இதனூடாக சாண்ட்ரா பேட்டியை முடித்து அந்தப் பெண்ணுக்கு விடை தருகிறாள். மரப்படிகளின் ஏறி மாடிக்கு விரைகிறாள்.  மாடியறையில் கணவர் இருக்கிறார். உரத்த இசை தொடர்ந்து ஒலித்தபடியே இருக்கிறது.  இதனிடையே டேனியல் நாயுடன் வெளியே செல்கிறான். நாயின் துணையுடன் சென்ற டேனியல் திரும்பி வரும் போது நாய் அவன் கைப்பிடியை விட்டு விட்டு குரைத்தபடியே வீட்டுப் பக்கம் ஓடுகிறது. நாய் தொடர்ந்து குரைக்கும் சத்தத்தை அவதானித்தபடி டேனியல் வந்து சேருகிறான். காற்றில் எங்கும்  தடவி  தரையில் தந்தை விழுந்து கிடப்பதை அறிகிறான்.  என்னவென்று உணர முடியாத பதைப்பில் அம்மாவை உரத்த குரலில் அழைக்கிறான்…


Inquest என்று சொல்லப் படும் முதல் கட்ட விசாரணை மரணத்தின் காரணத்தை ஆய்வு செய்ய முயற்சி செய்கிறது. பிரேதப் பரிசோதனை (Autopsy) நடக்கிறது.  பின் மண்டையில் முனை மழுங்கிய பொருள் ஒன்று தாக்கியிருக்கக் கூடும் என்று அறிக்கை கூறுகிறது.  வீட்டில் வசிப்பது மூன்று பேர். சிறுவனுக்குப் பார்வை இல்லை. சம்பவம் நடந்த போது அவன் வீட்டில் இல்லை. எஞ்சியது சான்ட்ரா மட்டும். போலீஸின் சந்தேகம் அவர் மேல் விழுகிறது. வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.


சாண்ட்ராவின் நண்பரான வக்கீல் பெயில் பெறுவதற்காக வாதாடுகிறார். எழுத்தாளர். கண்ணியமானவர். கண் பார்வையற்ற சிறுவனைப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைமை. இதையெல்லாம் காரணமாக முன் வைக்கிறார். பெயில் வழங்கப்படுகிறது. பின்பு  வழக்கு ஒரு வருடங்களுக்கும் மேலாக நடைபெறுகிறது.


இந்தத் திரைப்படத்தில் அமைத்திருப்பது போல் சுவாரசியமான  நீதிமன்றக் காட்சிகளை எந்தத் திரைப்படத்திலும் பார்தத்ததில்லை. அரசு தரப்பு வக்கீல் தனது வாதங்களை அழுத்தமாக முன் வைக்கிறார். நடந்தது விபத்து அல்ல. சாமுவேல் பின் மண்டையில் தாக்கப்பட்டு பின் மாடியிலிருந்து தள்ளி விடப்பட்டதாக வாதிடுகிறார். சாண்ட்ராவின் நடத்தை சரியில்லை.  அவரைப் பேட்டி எடுக்க வந்த பெண்ணுடன் கூட அவருக்குப் பொருந்தா உறவு உண்டு என்றெல்லாம் வாதத்தைக் கட்டமைக்கிறார். சாண்ட்ராவின் வக்கீல் சாமுவேல் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததைக் குறிப்பிடுகிறார். அவர் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

எனவே இது தற்கொலை என்றே முடிவு செய்ய வேண்டியிருக்கிறது என்கிறார். விசாரணை, குறுக்கு விசாரணை, விசாரணைக் கூண்டில் இருக்கும் சாண்ட்ராவின் முகத்தில் விளையாடும் உணர்ச்சிகள் என்று சுவைபடக் காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.  அதிலும் பதின்வயது மகனின் முன்னால் சங்கடமான கேள்விகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுத்தும் உணர்ச்சித் தவிப்புகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் சாண்ட்ரா. அவருடைய நிஜப் பெயரும் அதுதான்.


அரசு வக்கீல் கணவன் மனைவிக்கு இடையே நடந்த வாக்குவாதத்தை சாண்ட்ராவிற்கு எதிராகப் பயன்படுத்துகிறார். அது சாமுவேலால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  அந்த உரையாடல்  நீதிமன்றத்தில் போட்டுக் காண்பிக்கப்படுகிறது.  வாக்குவாதம் உச்ச நிலையை அடையும் போது சாண்ட்ரா சாமுவேலின் கன்னத்தில் அறைவது கேட்கிறது.  பல முறை அவர்களுக்கிடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது. ஒவ்வொரு முறை வாக்குவாதம் அவர்களிடையில் துவங்கும் போதும் மகன் டேனியல் நாயின் துணையுடன் வெளியேறி விடுவது வழக்கம். சாமுவேல் இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பும் டேனியல் நாயுடன் வெளியே சென்றதை மேலே குறிப்பிட்டிருந்தேன். விசாரணையின் போது டேனியல் அன்று அப்பா அம்மா இருவரும் சாதாரணமாய் பேசிக் கொண்டிருந்தனர் என்றே சொல்லியிருந்தான். குறுக்கு விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக அவன் பேசுகிறான்.  உரத்த இசை ஒலித்தபடி இருந்ததால் அவன் அவர்கள் பேசுவது எதையும் சரிவரக் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்றே ஆகிறது. வழக்கு விசாரணை கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருக்கிறது.  


கடைசி நிமிடத்தில் டேனியல் நீதிபதியிடம் வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவன் அளித்த சாட்சியம் வழக்கின் போக்கையே மாற்றி விடுகிறது.


அற்புதமாகத் திரைக்கதை எழுதப் பட்டிருக்கிறது. ஆஸ்கார் விருது இதற்காகக் கிடைத்ததில் வியப்பில்லை. சாண்ட்ரா சாமுவேல் இருவருக்கும் திருமண வாழ்வு கசந்து போகிறது. பரஸ்பர நம்பிக்கை குலைந்து போகிறது. பொறாமை தலை தூக்குகிறது. காதலித்து மணந்தவர்களின் வாழ்க்கைக் கனவு எல்லாம் கலைந்து போகிறது.


அன்னா கரனினா நாவலில் டால்ஸ்டாய் எழுதுவார்.  Where love ends, hate begins.  


எத்தனை உண்மை!



குறிப்பு 


இந்தப் பதிவு சில வாரங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. பதிவேற்றம் செய்யத் தாமதமாகி விட்டது. இந்தத் திரைப்படம் Amazon Prime ல் தற்போது காணக் கிடைக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் முன்பாகவே இந்தத் திரைப்படத்தை நான் பார்க்க வழி செய்த பூஜாவுக்கு என் அன்பும் நன்றியும் 
















Comments

  1. Beautiful observation 👌

    ReplyDelete
  2. Mathivanan InbarajApril 6, 2024 at 3:46 PM

    சுவராசியமான பதிவு. படம் பார்க்க ஆவலைத்தூண்டியுள்ளது. ஆரம்பத்தில் சொன்ன சுஜாதாவின் கதையும் அந்த காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

    ReplyDelete
  3. நல்ல பதிவு. அருமையான கதை. சுஜாதா கதை படித்த நினைவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல பதிவு. அருமையான கதை. சொல்லும் விதம் தனி அழகு. சுஜாதா கதை படித்த நினைவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...