குள்ளச்சாமியும் நானும்
சிறுகதை
தி சந்தானம்
எங்கள் பகுதிக்கு ஓரு சாமியார் வந்தார்.
கட்டை குட்டையான உருவம். இளந்தொந்தி. வெண்பற்கள். நீண்டு வளர்ந்த தாடி. எடுப்பான மூக்கு. சுடர் விடும் கண்கள். இது அவருடைய புற அடையாளம். அவருடைய அகத் தேடல்கள் இன்னதென்று பிடிபட்டது இல்லை. அவர் அதிகம் பேசுவது இல்லை. சில வார்த்தைகள் பேசுவார் அரிதாக. அதில் பொய் இருக்காது. எளிய உண்மைகள் இருக்கும். சூரியன் கிழக்கில் தானே உதிக்கும். நதி கடலைத் தானே சென்று அடையும். இப்படி எல்லாம் கூட உதாரணம் சொல்ல முடியாது. இதைப் பார்க்கிலும் எளிமை வார்த்தைகளில் தொனிக்கும். பேச்சு குழந்தையின் மழலைப் பேச்சாக இருக்கும். மென்மையாக அந்தக் குரல் ஒலிக்கும். சில விதமான மூச்சுப் பயிற்சிகள் அவர் செய்வது உண்டு. அடிக்கடி கண்களை முடி தியானத்தில் அமர்ந்து விடுவார். சில மணி நேரங்கள் அப்படியே இருந்து விடுவதும் உண்டு. கண் விழித்துப் பார்க்கும் போது பித்தேறியவரைப் போல இருப்பார்.
அவர் எங்கிருந்து வந்தார் என்று தெரியாது. அது அப்படித்தானே இருக்க முடியும். சாமியார்களுக்குப் பெயர் இருப்பது உண்டா? அவர் பெயர் என்ன என்று தெரியாது. ஒரு வசதிக்காக அவரைக் குள்ளச்சாமி என்றே அழைப்போம். குள்ளச்சாமியின் வயது என்ன என்று கணிக்கப் புகுவதும் வீண்.
குள்ளச்சாமியை உலகப் பற்று முழுவதும் அறுத்தவர் என்றெல்லாம் சொல்லி விட முடியாது. தந்தை தாய் மக்கள் சுற்றம் என்று குடும்பம் நடத்துபவர்கள் மத்தியில் தான் அவர் வந்து இருந்தார். ஒரு பெரிய நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி வீட்டில் தான் அவர் தங்கி இருந்தார். அந்த வீடு அவருக்காகவென்றே ஒதுக்கப்பட்டிருந்தது. யாரையும் அழைத்துப் பேச தொலைபேசி இருந்தது.
படுக்கை வசதி இருந்தது. என்றாலும் குள்ளச்சாமி படுப்பது தரையில் தான். அவரைக் காண பெரும் பணக்காரர்கள் எல்லாம் காரில் வந்து போவாரகள். பழங்களைக் கொண்டு வந்து அவர் காலடியில் கொட்டுவாரகள். அவர் யாரையும் குறிப்பாகப் பாரத்துப் பேசியதில்லை. பெரும்பாலும் கண்களை மூடியபடிதான் இருப்பார். பழங்களை அவர் புசித்ததும் இல்லை. என் போன்ற சிறுவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விடுவார். உணவு இல்லாமல் அவரால் இருக்க முடியும். அதே நேரம் வயிறு நிறையச் சாப்பிடவும் முடியும். தன்னைத் தேடி வருபவர்கள் பிரச்சினைக்குக் குறிப்பாகத் தீர்வு எதுவும் அவர் சொன்னதில்லை. வெறுமனே ஒரு புன்னகை தான். அதிலேயே பெரும்பாலும் நிறைவு அடைந்து வந்தவரகள் சென்று விடுவார்கள். ஏதோ ஒரு நிம்மதியைக் கண்டவர்களாய் மீண்டும் அவரைப் பார்க்க வருவார்கள்.
அவர் என்ன கேட்டாலும் செய்து தர வேண்டும் என்று கம்பெனியின் நிர்வாக இயக்குனர் உத்தரவு இட்டிருந்தார். ஒரு முறை என் வயதொத்த சிறுவர்கள் அவர் வீட்டில் இருந்தோம். குள்ளச்சாமி அவ்வப்போது எங்களை அழைத்து ஓரிரு வார்த்தைகள் பேசியதில் ஒரு பழக்கம் ஏற்பட்டிருந்தது. அவர் திடீரென்று அந்த மக்கள் தொடர்பு அதிகாரியை அழைத்தார். நகரத்தில் ஒரு பிரபலமான ஹோட்டல் உண்டு. அதிலிருந்து எங்கள் அனைவருக்கும் பூரி மசால் வாங்கி வரச் செய்தார். பூரி மசால் என் போன்ற சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி. அது அவருக்குத் தெரிந்திருக்கிறது. எங்களோடு அமர்ந்து கேரம் போர்டு விளையாடுவார். இப்படிப் பல விஷயங்களில் என் போன்ற சிறுவர்களின் உளவியலை நன்கு அறிந்தவராக இருந்தார். ஒரு தனிப்பட்ட பிரியம் என் மீது அவருக்கு இருந்தது.
அவர் தங்கியிருந்த வீட்டின் சுவரோரம் ஒரு வீணை சுவரில் சாற்றிய நிலையில் இருந்தது. அதனால் வீட்டின் மூலைச் சுவர் ஓரு அழகு பெற்றிருந்தது. வீணையை வசப்படுத்துவது எளிதல்ல. பல வருடங்கள் பயில வேண்டும். அந்த வீட்டில் வீணையின் நாதம் ஒருபொழுதும் ஒலித்தது இல்லை. ஒருமுறை குள்ளச்சாமி அந்த வீணையைத் தூசி தட்டினார். நரம்புகளை மெல்ல மீட்டினார். அவர் விரல்கள் மெலிதாகவும் நீளமாகவும் இருந்தது. நாதம் எங்கும் பரவியது. வீட்டில் வேறு யாரும் இல்லை. ஒன்றைச் சொல்ல வேண்டும். வேறு யாரும் இல்லாத பொழுதுகளில் தான் எனக்கு அவரைப் பார்க்கப் பெரும்பாலும் வாய்த்திருக்கிறது.
குள்ளச்சாமி வாசிக்க ஆரம்பித்தார். இப்படியும் அப்படியும் மீட்டியதில் தெளிவில்லாது ஒரு ஓசை எழுந்தது. ஆனாலும் அதைக் கேட்கப் பிடித்திருந்தது. நாதம் எழுவது வீணையில் இருந்து அல்லவா? பின்பு அவர் “பாட்டுப் பாடவா பாட்டுக் கேட்கவா” என்ற பாட்டை வாசித்தார். வாசிப்பு மிகவும் சரளமாக இருந்தது. ஒரு புன்னகை அவர் முகத்தில் தவழ்ந்தபடி இருந்தது.
பல நாட்கள் சென்றது. நான் குள்ளச்சாமியைப் பார்க்கப் போகவில்லை. நண்பன் ஒருவன் குள்ளச்சாமி என்னைப் பற்றிக் கேட்டதாகக் சொன்னான். நான் இரவு உணவை முடித்துக் கொண்டு அவரைப் பார்க்கச் சென்றேன். ஏன் என்னைப் பார்க்க வரவில்லை? என்று கேட்டார். நான் ஏதோ காரணம் சொன்னேன். சிறிது நேரம் அவர் பேசவில்லை. திடீரென்று “என்னை உனக்குப் புரியுமா? “ என்று கேட்டார். பன்னிரெண்டு வயதுச் சிறுவன். என்னிடம் அவர் அப்படிக் கேட்டது வியப்பாக இருந்தது. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தேன். அவர் பெருமூச்சு விட்டார்.
பின்பு அவர் மென்மையான குரலில் பாடினார்.
ஆசைக்கு அணை போட்ட அறிவான நங்கை
அன்புக்குப் பொருள் சொன்ன அருள் மங்கை
பாசத்தின் சுமையோடு பறந்து சென்றாளே
பழகும் உனையும் மறந்து சென்றாளே
கண்டதும் நினைவில் கொண்டதும் முடிவில்
கதையாகிப் போனதடா
இப்படிப் பாடி நிறுத்திய போது அவர் கண்களில் நீர் நின்றது. அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. பயமாகவும் இருந்தது. நான் மெல்ல அந்த இடத்திலிருந்து நழுவி விட்டேன்.
சில நாட்கள் கழித்து குள்ளச்சாமி ஊரை விட்டுப் போய்விட்டார். சாமியார்கள் ஒரு இடமாக எப்போதும் இருப்பதில்லை.
சாமியார்களைப் புரிந்து கொள்ள நம்மால் ஆகாது.
குள்ளசாமியின் பொருள் பொதிந்த பாடல். சொன்ன விதம் ரசிக்கும்படி இருந்தது
ReplyDeleteநன்றி ராம்.. அது திரைப்பாடல
Deleteலவ் ஃபெயிலியர்ல தாடி வளர்த்து பேச்சக் கொறச்ச மனுசன சாமியாராக்கி.. பொல்லாத உலகமப்பா😂😂 அழகான, எளிமையான, இயல்பான எழுத்து. 👏👏👏👏
ReplyDeleteநன்றி ஜெயந்தி
Delete