Skip to main content

முன் நிலவும் பின் பனியும்


முன் நிலவும் பின் பனியும் என்ற ஜெயகாந்தனின் கதையைப் படித்தேன். இத்தனை வருடங்களில் இந்தக் கதையைப் படிக்க எப்படித் தவறினேன்?  தலைப்பைப் பாருங்கள். முன் நிலவும் பின் பனியும். ஜெயகாந்தனின் கதைத் தலைப்புகளை எல்லாம் திரட்டி ஒருமுறை வாய் விட்டு உரக்கச் சொன்னால் அதுவே ஒரு பெரிய இலக்கிய அனுபவமாக மலரும் என்று தோன்றுகிறது.

ஒரு கிழவர். பெரிய கோனார் என்று அவரை எல்லோரும் அழைபபார்கள். அவருடைய மகன் சபாபதி.ஒரு முறை அவரோடு மனத்தாங்கல் ஏற்படுகிறது.  பட்டாளத்தில் சேர்ந்து விடுகிறான். விரக்தியில் கிழவர் முந்திரித் தோட்டத்தின் நடுவே குடிசையில் தனித்து வாழ்கிறார். தம்பி சின்னக் கோனாரின் குடும்பம் அருகில் இருக்கிறது. அண்ணன் மீது அவருக்குப் பெரிய மரியாதை. சில வருடங்கள் கழித்து சபாபதி திரும்பி வருகிறான். கிழவருக்கு இப்போது பார்வை மங்கியிருக்கிறது. மகனை அணைத்து ஆனந்தம் அடைகிறார். சபாபதிக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அவன் மனைவியுடன் வடக்கே சென்று விடுகிறான். அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. வருடம் ஒருமுறை கிழவரைப் பார்த்து விட்டுச் செல்வார்கள். பாபு வளர்ந்து விடுகிறான். கிழவருக்கு பாபு மேல் கொள்ளை ஆசை. ஜெயகாந்தனின் வார்த்தைகளைப் படியுங்கள்.

“இந்தப் பத்து வருடமாய்க் கொஞ்சம் கொஞ்சமாய் மங்க ஆரம்பித்த கண் பார்வை முற்றிலும் இருண்டுவிட்ட போதிலும் கிழவரின் மனசில் ஆசையும் பாசமும் மட்டும் பெருகிக் கொண்டுதான் இருந்தன; இப்போது அவர் தன் உடலில் உயிரைச் சிறை வைத்து வாழ்வது மகனுக்காகக் கூட அல்ல; நான்கு வருடங்களாய் ஆண்டிற்கொரு முறை வந்து அவருடன் ஒரு மாதம் முழுக்கவும் தங்கி, பார்வையிழந்த அவரோடு கண்ணைக் கட்டி விளையாடிச் செல்வதுபோல் கொஞ்சிப் புரியும், முகம் தெரியாத அவர் பேரன்... அந்தப் பயல் பாபுவுக்காகத்தான். அவனோடு கழிக்கப் போகும் அந்த முப்பது நாட்களுக்காகத்தான் வருடம் முழுமைக்கும் வாழ்கிறார் கிழவர். ’பாபு’... என்று நினைத்த மாத்திரத்தில் அவரது குருட்டுக் கண்கள் இடுங்கி கன்ன மூலங்களில் வரி வரியாய்ச் சுருக்கங்கள் விரிய பொக்கை வாய்ப் புன்னகையுடன் நீண்ட மோவாய் சற்றே வானை நோக்கி வாகாகி நிமிரும்; இருளடித்த பார்வையில் ஒளி வீசும் புகைமண்டலமொன்று உருவாகி அதில் பாபுவின் தோற்றம்... கொஞ்சும் மழலையுடன், குலுங்கும் சிரிப்புடன், குளிர்ந்த .ஸ்பரிசத்துடன் தெரியும்... அந்த உருவம் கனவில் வருவதுபோல் அவரிடம் தாவிவரும்... எத்தனையோ முறை தன்னை மறந்த லயத்தில் கிழவர் கைகளை நீட்டிக்கொண்டு "பாபூ..." என்று துள்ளி நிமிர்ந்து விடுவார்... பிறகு அது உண்மையல்ல; கண்ணில் தெரியும் மாயத்தோற்றம் என்று உணர்கையில் இமை விளிம்பில் பனித்த நீரும், இதழ்களில் வளைந்து துடிக்கும் புன்முறுவலுமாய்த் தலை குனிந்து விடுவார். தனிமையில் குடிசையில் யதார்த்த உண்மையாய் பாபுவோடு கழிக்கும் ஒரு மாதம் தவிர... அதற்கு முன்னும் பின்னுமான மாதங்கள் அவருக்கு இப்படித்தான்... இந்த லயத்தில்தான் கழிகின்றன.

அது சரி, அவர்தான் பாபுவைப் பார்த்ததே இல்லையே? அவர் கண்களில் அவன் உருவம் தெரிவதெப்படி?

தன் குழந்தை என்று பந்தம் பிறக்கவும், சொந்தம் கொண்டாடவும்தான் தன் குழந்தையின் முகம் தெரிய வேண்டும். குழந்தை மீது கொண்ட பாசத்தைக் கொண்டாட, அந்த பக்தியை வழிபட ஒரு முகம்தான் வேண்டுமா, என்ன?...

வானத்தில் திரிந்து கொண்டிருந்த கடவுளை மண்ணுக்கிறக்கி மழலை சிந்தும் குழந்தையாக்கி ஓட விட்டு, ஓடித்துரத்திக் கையைப் பிடித்திழுத்து, நையப் புடைத்தெடுத்து, மடியில் கிடத்தி, மார்பில் அணைத்து, முத்தம் கொடுத்து, முலைப்பால் அளித்து... ஆம், கடவுளைக் குழந்தையாகவும், குழந்தையைக் கடவுளாகவும் கொண்டாடும் கலையையே பக்தியாகக் கொண்ட வைஷ்ணவ குலத்தில் பிறந்தவராயிற்றே பெரிய கோனார்!... அவர் கண்களிலே தெரியும் தோற்றம் கண்ணன் தோற்றமே... எனினும் அவர் வழிபடுவது பாபுவின் நினைவைத்தான்

போன வருடம் பாபு வந்திருந்தபோது நன்றாக வளர்ந்திருந்தான். ’என்னப் பேச்சுப் பேசுகிறான்?’... ஆனால் ஒரு வார்த்தையாவது கிழவருக்குப் புரியவேண்டுமே! அவன் ஹிந்தியிலல்லவா பேசுகிறான். ’ஒரு வார்த்தை கூடத் தமிழ் தெரியாமல் என்ன பிள்ளை வளர்ப்பு’ என்று கிழவர் சில சமயம் மனம் சலிப்பார். இருந்தாலும் தன் பேரன் பேசுகிறான் என்பது முக்கியமே தவிர, என்ன பாஷையாக இருந்தால் என்ன? -என்ற குதூகலத்துடன் அவனைப் பேச வைத்து ரசித்துக் கொண்டிருப்பார்..”

இந்த வருடம் தஞ்சாவூர் வரை வரும் சபாபதி இவரைப் பார்க்க கிராமத்துக்கு வரவில்லை. அவர்கள்  வடக்கே திரும்பிச் செல்லும் ரயில் கிராமத்திலிருந்து சில மைல் தொலைவில் இருக்கும் ஸ்டேஷனில் சில நிமிடங்களே நிற்கும். பாசம் உந்தித் தள்ள பனிபெய்யும் காலையில் கிழவர் பாபுவைப் பார்க்கக் கிளம்புகிறார். அந்தக் குளிரில் குளித்துவிட்டு திருமண் குழைத்து நெற்றியில் இட்டுக் கொள்கிறார். உடைத்த முந்திரிக் கொட்டையை ஒரு டப்பாவில் போட்டு எடுத்துக் கொள்கிறார். சில மைல்கள் தூரம் நடந்து ஸ்டேஷனை அடைகிறார். ரயில் வருகிறது. பாபூ என்று உரக்கக் கூவியபடி பிளாட்பாரத்தில் இங்கும் அங்கும் அலைகிறார்.  பனி பெய்வதால் ரயில் பெட்டிகளின் சன்னல்கள் மூடியிருக்கிறன. கிழவருக்கு ஏமாற்றம். ரயில் கிளம்பும் தறுவாயில் இன்ஜின் பக்கம் இருந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியின் சன்னல் திறக்கிறது. ஒரு வட நாட்டுச் சிறுவன் எட்டிப் பார்க்கிறான். பாபூ என்று அவனை அழைத்து முந்திரி டப்பாவை நீட்டுகிறார். சிறுவன் ஆர்வத்துடன் டப்பாவில் கை விட்டு முந்திரியை எடுக்கிறான். கிழவர் டப்பாவைத் தருகிறார். சந்தடி கேட்டு. அருகில் வந்த முக்காடு அணிந்த வட நாட்டுப் பெண் கிழவரைப் பார்த்து புன்னகைக்கிறாள். தாதாவுக்கு நமஸ்தே சொல் என்கிறாள். சிறுவன் வணங்குகிறான்.அவளுக்கு எங்கோ இருக்கும் அவளுடைய அப்பா ஞாபகம் வருகிறது. கண்களில் நீர் துளிக்கிறது. கிழவர் பாபுவைச் சந்தித்த நிறைவுடன் திரும்புகிறார். 

கதையைப் படித்து முடித்தவுடன் தாத்தாவின் நினைவு வந்தது.  இந்தக் கதையில் வரும் தாத்தாவிடமிருந்து பெரிதும் மாறுபட்டிருப்பார். அவருடைய பாசம் வெளிப்படையானது அல்ல. அதன் ஆழத்தை அனுபவித்து உணர வேண்டும்.  ஒரு நல்ல இசையின் நுணுக்கம் போன்றது அது.  வாழ்நாள் முழுவதும் அவர் எதையாவது வழங்கியபடியே இருந்தார். பின் நாட்களில் அவருக்கு பார்வை மங்கியிருந்தது. ஒரு அனுமானத்தில் வீட்டுக்குள் நடமாடியபடி இருந்தார். வாளியில் நீரைத் தடவி உணர்ந்து தலையில் ஊற்றிக் கொள்வார்.  ஒரு அனுமானத்தில் திருமண்ணைக் குழைத்து நெற்றியில் இட்டுக் கொள்வார்.  இதையெல்லாம் எண்ணிப் பார்க்கும் பொழுது மனம் கசிகிறது.  முன் நிலவும் பின் பனியும் என்று ஏனோ  மனம் உச்சரிக்கிறது.





Comments

  1. Beautiful post. I love the vivid imagery created by Jayakanthan's words. They evoke such deep emotions. The mention of our thatha is heartwarming, even though I haven't interacted with him personally. Memories are magical indeed.

    ReplyDelete
  2. இந்த தலைப்ப பார்த்துட்டு மீள் வாசிப்பு செஞ்சேன் இந்த கதையை. அந்த சர்தார்ஜி தாத்தா மேல் முதலில் ஒரு பொறாமை, பின் ஒரு புரிதல், பிறகு அந்த தம்பையா மீது சிறிது சிறிதாக வரும் ஒட்டுதல்,.. எல்லாமே அழகு.

    தாத்தா பார்வை மங்கிய பிறகு, புதிதாக வீடு மாறி வந்தால், ஒரு முறை தான் புழங்க வேண்டிய இடத்த கேட்டு புரிஞ்சு வச்சுப்பா. அடுத்த நாள் ல இருந்து யார் உதவியும் இல்லாமல் தன் வேலைகளை தானே பார்த்துப்பார். கைகளால் தடவி, எட்டணா, நாலணா, ஒரு ரூபாய் காயின் தனியா பிரிச்சு வச்சுப்பா. ரூபாய் நோட்டுகளும் அப்படியே. காது ரொம்ப கூர்மையா கேட்கும். தாத்தா சொல்ல சொல்ல லெட்டர் எழுதுவது ஒரு சுவாரசியம். தாத்தா கதை சொல்லி கேட்டுருக்கியா? சசேமிரான்னு ஒரு கதை அப்றம், ராதையோ ஸம் கோபிகையோ கோச்சுண்டு கதவை திறக்க மாட்டா. உடனே க்ருஷ்ணர் தன்னுடைய ஒவ்வொரு பெயரா சொல்லி தான் வந்திருப்பதாகவும், கதவை திறக்கனும்னும் கேட்டுப்பார். அதுக்கு அவ, ஒவ்வொரு பெயருக்கும், இன்னொரு அர்த்தம் சொல்லி, வந்திருப்பது கண்ணன் என்பது புரியாத பாவனையில் பதிலளிப்பாள். சுவாரசியமாக இருக்கும்.

    கஸ்தூரிதிலகம் லலாடபலகே தாத்தாதான் சொல்லிக் கொடுத்தா..

    சரி போ விட்டு கமெண்ட்டயே ப்ளாக் ஆக்கிடுவேன்.

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி. நிறைய விஷயங்கள் பகிர்ந்தாய். ஆமாம் தனியாக ப்ளாக் எழுதும் அளவுக்கு

      Delete
  3. உன்னால் மேலும் நான்கு கதைகள் படித்தேன். 😀

    ReplyDelete
    Replies
    1. நல்லது. மகிழ்ச்சி

      Delete
    2. நான் விரும்பியும் அது தான்

      Delete
  4. விரும்பியதும்

    ReplyDelete
  5. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை அவரவர் கற்பித்துக்கொள்ளும் அர்த்தத்தின் அடிப்படையில்தான். அவ்வகையில் எதிர்நோக்கல், சிறியதோ, பெரியதோ பற்றுதலை உண்டாக்கும். இந்த சிறுகதை ஜெயகாந்தன் பின் 70களில் டி.ஆர்.ரமசாமியின் அலிபாபா பத்திரிகையில் எழுதிய இன்னொரு சிறுகதையை நினைவூட்டுகிறது - சென்னை துறைமுகத்துக்கு அருகில் வாழும் ஒரு ஏழைப் பெண்மணி இரண்டாம் உலகப் போர் காலத்தில் கப்பலில் ஏறி வெளிநாடு சென்ற அவள் கணவன் திரைம்பி வருவான் என்ற எதிர்ப்பார்ப்பில் இரைப்பதைப் பற்றியது. அது திரைப்படமாக மனோரமா நடித்தரா அல்லது அந்த கதைக்கு மட்டும் அவரை வைத்து போட்டோ எடுக்கப்பட்டதா என்று நினைவில்லை.
    நன்றி நினைவூட்டலுக்கு
    - சீனு

    ReplyDelete
  6. ... எதிர்ப்பார்ப்பில் இருப்பதைப் பற்றியது

    ReplyDelete
  7. நன்றி சீனு. இந்தக் கதை ஜெயகாந்தன் தனது படைப்பூக்கத்தின் உச்சத்தில் இருந்த அறுபதுகளில் எழுதப் பட்டிருக்க வேண்டும். பாசத்தில் விழுந்த இந்த வயோதிகன் அதிகாலையில் பனி மூட்டத்தின் ஊடே ஒளி பாய்ச்சியபடி வரும் ரயிலை எதிர் நோக்கியபடி இருப்பது மனதில் காட்சியாக விரிகிறது.

    ReplyDelete
  8. ஜெயகாந்தனின் இதுவரை படிக்காத கதை இது. அவர் சொல்லும் விதமே தனி. அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ராம். இதுவரை படிக்காத கதை. நன்றி

      Delete
  9. ஜெயகாந்தன் சிறுகதைகள் நான்கு தொகுதிகளும் ஆண்ட்ராய்ட் ப்ளே ஸ்டோர்ல இருக்கு. Go to play store and search for jayakanthan

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...