ஒரு மனுஷ்யன்
வைக்கம் முகமது பஷீர்
நீங்கள் என்ன ஏது என்று திட்டமிடவில்லை. வீட்டை விட்டு வெகு தொலைவில் நீங்கள் அலைந்து திரிந்தபடி இருக்கிறீர்கள். அங்கு இருப்பவர் பேசும் மொழி தெரியாது. ஆங்கிலம், கொஞ்சம் ஹிந்தி பேசத் தெரியும். வெகு சிலருக்குத் தான் இந்த இரண்டு மொழியும் தெரியும். என்னவென்றால் இது தேவையில்லாத சங்கடங்களில் முடியும்.
ஒரு ஆபத்தான சூழலில் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். முற்றிலும் பரிச்சயம் அற்ற மனிதர் உங்களுக்கு உதவுவார். பல வருடங்கள் சென்றாலும் நீங்கள் அவரை மறக்க முடியாது. சில போது அவர் ஏன் உதவி செய்தார் என்ற வியப்பு அடங்காமலே இருக்கும். சரி..நீங்கள் நீங்கள் என்று சொல்ல வேண்டாம். நான் தான். நான் அந்த மனிதனை நினைத்த வண்ணம் இருப்பேன்.
நான் இப்போது எனக்கு நேர்ந்த அனுபவத்தைச் சொல்கிறேன். மனிதர்களைப் பற்றி எனக்கு தெளிவில்லாத கருத்துக்கள் உண்டு. என்னைப் பற்றியும் கூட. என்னைச் சுற்றி நல்லவர்கள் இருக்கிறார்கள். திருடர்கள் இருக்கிறார்கள். நோயால் பீடிக்கப் பட்டவர்கள் இருக்கிறார்கள். பித்துப் பிடித்தவர்களும் இருக்கிறார்கள். கவனமாக வாழ வேண்டியிருக்கிறது. உலகத்தில் நல்லதை விடக் கெட்டதே அதிகமும் இருக்கிறது. நாம் எங்காவது காயப்படும் போதுதான் இதை உணருகிறோம்.
நான் ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். ஒரு வேளை அது முக்கியமான ஒன்றாகக் கூட இல்லாமல் இருக்கலாம். அது கொஞ்சம் பெரிய நகரம். மலைப் பள்ளத்தாக்கில் அமைந்த நகரம். வீட்டிலிருந்து ஆயிரத்து ஐநூறு மைல் தூரம் இருக்கும். அங்கு வசிப்பவர்களுக்கு இரக்கம் என்ற ஒன்று தெரியாது. கடுமையானவர்கள். கொலை, கொள்ளை, ஜேப்படி அங்கு தினமும் சாதாரணமாக நடப்பது. பரம்பரையாக அவர்கள் போர் வீரர்கள். சிலர் தொலை தூரம் போனார்கள். வட்டிக்குப் பணம் கொடுத்தார்கள். சிலர் வங்கியில், மில்லில், வியாபாரத் தலங்களில் காவலாளியாக இருந்தார்கள். பணத்தைப் பெரிதும் மதித்தார்கள். பணத்திற்காக எதையும் செய்வார்கள், கொலை உட்பட.
அந்த நகரத்தில் ஒரு சிறிய இருட்டான அறையில் குடியிருந்தேன். அது இருந்தது ஒரு அழுக்கான தெரு. நான் சிலருக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து ஜீவனம் நடத்தினேன். பெரும்பாலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். காலை ஒன்பதரை மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை வேலை பார்ப்பவர்கள். குறிப்பாக நான் அவர்களுக்கு ஆங்கிலத்தில் விலாசம் எழுதக் கற்றுக் கொடுத்தேன். அதை அங்கே ஒரு பெரிய படிப்பாகக் கருதினார்கள். தபாலாபீஸில் அப்படி விலாசம் எழுதித் தருபவர்களை நீங்கள் பார்க்க வேண்டும். எளிதாக ஒரு அணாவிலிருந்து நாலணா வரை அவர்களுக்குக் கிடைத்து விடும். வெறுமனே விலாசம் எழுதித் தருவதற்கு.
நான் பலருக்கு விலாசம் எழுதக் கற்றுக் கொடுத்தேன். கொஞ்சம் காசு சம்பாதித்து சேமிக்கவும் செய்தேன். அப்போது எல்லாம் நான் பகல் முழுதும் தூங்குவேன். சாயங்காலம் நாலு மணிக்கு விழிப்பேன். இதனால் காலை டீ, மதியச் சாப்பாட்டுச் செலவு மிஞ்சும்.
ஒரு நாள் மாலை நாலு மணிக்கு வழக்கம் போல் எழுந்தேன். அன்றாடக் கடன்களை முடித்து விட்டு சாப்பிடக் கிளம்பினேன். நான் கோட்டும் பேண்ட் சர்ட்டும் அணிந்திருந்தேன். பாக்கெட்டில் பர்ஸ் வைத்திருந்தேன். அதில் பதினான்கு அணா இருந்தது. என் மொத்த சேமிப்பு.
கூட்டம் நிறைந்த அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தேன். சப்பாத்தி, கறித் துண்டுகள் என்று முழு சாப்பாடு வரவழைத்துக் சாப்பிட்டேன். டீயும் குடித்து முடித்தேன். பில் வந்தது. பதினோரு அணா. நான் பாக்கெட்டில் கை விட்டேன். எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. சாப்பிட்ட மொத்த சாப்பாடும் அந்தக் கணத்தில் செரிமானம் ஆனது போல் இருந்தது. காரணம் பர்ஸ் பாக்கெட்டில் இல்லை. நான் மெல்லச் சொன்னேன். என் பர்ஸை யாரோ அடித்து விட்டார்கள். அது கூட்டம் நிறைய வரும் ஹோட்டல். கல்லாவில் இருந்த முதலாளி பெரும் சிரிப்பு சிரித்தார். என் சட்டைக் காலரைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தார்.
“இந்த வேலை எல்லாம் செல்லாது. காசை எடுத்து வை. இல்ல, கண்ண நோண்டி வெளியே எடுத்து விடுவேன்” என்று கத்தினார்.
சுற்றிலும் இருந்த மனிதர்களைப் பார்த்தேன். இரக்கம் காட்டும் ஒரு முகம் கூட இல்லை. எல்லோரும் பசித்த ஓநாய் போலத் தெரிந்தார்கள். கண்ணை நோண்டி வெளியே எடுத்து விடுவேன் என்றால் அதைச் செய்தே விடுவார் என்று தோன்றியது.
“இந்தக் கோட்டை வைத்துக் கொள்ளுங்கள், நான் போய் பணம் எடுத்துக் கொண்டு வந்து தருகிறேன்” என்றேன். முதலாளி கோட்டைக் கழட்டச் சொன்னார். நான் கழட்டினேன். சட்டையைக் கழட்டச் சொன்னார். கழட்டினேன். செருப்பைக் கழட்டச் சொன்னார். கழட்டினேன். முடிவாகப் பேண்டை கழட்டச் சொன்னார். என் ஆடையை உருவி விட்டு கண்களை நோண்டி வெளியே எடுக்க உத்தேசம் என்று தெரிந்தது. நான் சொன்னேன் “உள்ளே எதுவும் போடவில்லை” எல்லோரும் சிரித்தார்கள். ஹோட்டல் முதலாளி சொன்னார் “எனக்கு சந்தேகம். நீ கீழே ஏதாவது வைத்திருப்பாய்” சுமார் ஐம்பது பேர்கள் அதையே கூவிச் சொன்னார்கள். என் கைகள் அசைய மறுத்தன. எனது கற்பனையில் ஒரு மனிதன் பொட்டுத் துணி கூட இல்லாமல் கண்கள் நோண்டப்பட்டு கூட்டத்தின் நடுவே நிற்பது போலத் தோன்றியது. இது இப்படித்தான் முடிய வேண்டுமா? முடியட்டும். இதற்கெல்லாம்… போகட்டும். படைத்தவனே… கடவுளே…நான் என்ன சொல்லட்டும். எல்லாம் முடியட்டும். எல்லோருக்கும் திருப்தியாக முடியட்டும். நான் பேண்ட் பட்டனைக் கழட்ட ஆரம்பித்தேன். அப்போது ஒரு குரல் கேட்டது. “ நான் பணம் கட்டலாமா?” குரல் வந்த திசையில் எல்லோரும் பார்த்தார்கள். அவன் நல்ல நிறம். ஆறடி இருப்பான். சிகப்பாக தலைப்பாகை. வெள்ளை டிரவுசர். பெரிய மீசை. நீலக் கண்கள். அந்தப் பிரதேசத்தில் நீலக் கண்கள் அதிகம் பார்க்கலாம். அவன் முன்னால் வந்தான்.
“எவ்வளவு பில் தொகை தர வேண்டும்?”
“பதினோரு அணா”
அவன் பில் தொகையைக் கொடுத்தான். என் பக்கம் திரும்பி சட்டை பேண்ட் போட்டுக் கொள்ளச் சொன்னான். நான் உடைகளை அணிந்து கொண்டேன்.
“வாருங்கள்” என்றான். அவனோடு போனேன். நன்றியைச் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நான் சொன்னேன்.
“உங்களைப் போன்ற நல்லவரை நான் பார்த்ததில்லை”
அவன் சிரித்தான்.
“உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். சொன்னேன். அவன் பெயரைக் கேட்டேன்.
“எனக்குப் பெயர் கிடையாது” என்றான்.
“என்றால் உங்கள் பெயர் தயாளன் என்று இருக்க வேண்டும்”
அவன் சிரிக்கவில்லை. அவன் நடந்தான். ஆள் புழக்கம் இல்லாத பாலம் ஒன்றை அடைந்தோம். அவன் சுற்று முற்றும் பார்த்தான். யாரும் இல்லை.
“இதோ பாருங்க. திரும்பிப் பார்க்காம போயிருங்க. என்னைப் பார்த்ததா யார் கேட்டாலும் சொல்லக் கூடாது.”
எனக்குப் புரிந்தது.
அவன் பையில் கை விட்டு ஒரு ஐந்து பர்ஸுகளை எடுத்து நீட்டினான். அவற்றில் ஒன்று என்னுடையது.
“எது உங்களுடையது?”
நான் சுட்டிக் காட்டினேன்.
“திறந்து பாருங்க”
நான் திறந்தேன். எல்லாப் பணமும் அப்படியே இருந்தது. பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். அவன் சொன்னான். “கடவுள் உங்களுக்கு உதவட்டும்” நானும் சொன்னேன்.
“கடவுள் உங்களுக்கு உதவட்டும்”
மூலம் மலையாளம்
ஆங்கிலத்திலிருந்து தமிழில்
தி சந்தானம்
பிறந்த தினத்தன்று வாழ்த்துப் பெறுவார்கள். ஆசி வழங்குவார்கள். சிலர் புற்று நோயால் பாதிக்கப் பட்ட சிறுவர் சிறுமியருக்கு ஏதாவது வாங்கித் தருவார்கள். கைவிடப்பட்ட முதியவர்களோடு நேரம் செலவிடுவார்கள். முன் பின் அறியாதவர்களுக்கு உதவி செய்வார்கள். இதையெல்லாம் அதிகம் வெளியே சொல்ல மாட்டார்கள். பொதுவாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் பஷீருக்கு நிகழ்ந்தது வேறு. அவருடைய தனிப்பட்ட அனுபவங்கள் எல்லாமே கதையாகி இருக்கிறது. மேலே கண்ட கதை அவரது பிறந்த தினத்தன்று அவருக்கு ஏற்பட்ட அனுபவம் என்று சொல்கிறார்கள்.
அழகான மொழிபெயர்ப்பு. நன்றி பகிர்தலுக்கு..
ReplyDeleteநன்றி படித்ததற்கு
DeleteVery unique voice and view of the world. This incident could have been explained in a few lines but the way he set the stage and conveys the story tells the author's world view as well. Good selection and translation as always.
ReplyDeleteYes. No complications. No complaints. A narration with a sense of detachment.
DeleteThis comment has been removed by the author.
Delete