ரொமய்ன் ரோலண்டு என்ற பிரெஞ்சுக்காரர் காந்தியைப் பற்றி ஒரு புத்தகம் எழுதினார். இதை ஜெயகாந்தன் வாழ்விக்க வந்த காந்தி என்ற பெயரில் மொழி பெயர்த்தார். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். நாற்பது வருடங்களுக்கு முன்பு நண்பர் செளந்தர் இந்தப் புத்தகத்தைப் படிக்க தந்தார்.
ரொமய்ன் ரோலண்டின் அறிமுகக் கடிதத்தோடு தான் மிஸ் ஸ்லேட் (Slade) காந்தியை சபர்மதி ஆசிரமத்தில் சந்தித்தார். பல வருடங்கள் காந்தியோடே இருந்தார். கடினமான ஆசிரம வாழ்க்கைக்கு தன்னை பழக்கிக் கொண்டார். காந்தி இவருக்கு மீரா என்று பெயர் மாற்றம் செய்தார். மீராபென் என்று அனைவரும் அவரை அழைத்தனர்.
ரொமய்ன் ரோலண்டு காந்தியை பிரான்ஸில் சந்தித்தது குறித்து தனது நண்பருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் இவ்வாறு சொல்கிறார்.
அந்த சிறிய மனிதன் கண்ணாடி அணிந்திருந்தான். பற்கள் இல்லை. உடம்பின் மேற்பகுதியை வெள்ளை ஆடை மூடியிருந்தது. கால் பகுதியைத் துணியால் மறைக்கவில்லை. கால்கள் ஒல்லியாக இருந்தது. கொக்கு அல்லது நாரையின் கால்களைப் போல. மழிக்கப்பட்ட தலையில் ஆங்காங்கே முடி. மழையில் நனைந்து ஈரமாக இருந்தது. இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு வறண்ட சிரிப்போடு அவர் என்னை நோக்கி வந்தார். அவருடைய வாய் திறந்திருந்தது. நன்றியுள்ள நாய் இரைக்க இரைக்க வருவது போலிருந்தது. என்னுடைய தோளைச் சுற்றி அவரது கைகள் வளைந்தது. அவரது கன்னம் எனது தோள் மேல் பதிந்தது. தலையில் இருந்த புல் போன்ற முடிகள் எனது கன்னத்தில் உராய்ந்தது. புனித பிரான்ஸிஸ் இடம் இருந்து முத்தம் பெற்றது போல உணர்ந்தேன்.
பின்னால் மீரா( மிஸ் ஸ்லேடு) பெருமிதத்தோடு வந்தாள் ஒரு கிரேக்க தேவதையைப் போல. கூடவே மூன்று இந்தியர்கள். காந்தியின் இளைய மகன் தேவதாஸ். வட்டமான மகிழ்ச்சி ததும்பும் முகம். ஏனைய இரண்டு பேர் காந்தியின் உதவியாளர்கள் அல்லது சீடர்கள். அபூர்வமான மனமும் புத்தியும் கொண்ட இளைஞர்கள். மஹாதேவ் தேசாய் மற்றும் பியாரே லால்.
இப்படிக் கடிதத்தைத் துவங்கும் ரோலண்டு மேலும் பல விஷயங்களை தனது நண்பரிடம் பகிர்ந்து கொள்கிறார். காலை மாலை காந்தி நடத்தும் பிரார்த்தனைக் கூட்டங்களைப் பற்றிச் சொல்கிறார். காலை மூன்று மணிக்குப் பிரார்த்தனைக் கூட்டம். காந்தி தான் எல்லோரையும் எழுப்பி விடுகிறார். இரவில் கடைசியாகப் படுக்கப் போவதும் அவரே. இந்த மனிதன் களைப்பு என்ற வாரத்தையே அறிய மாட்டானா என்று வியந்து போகிறார் ரோலண்டு.
பத்திரிக்கையாளர் கூட்டத்தில் சங்கடமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. காந்தியின் முகத்தில் எந்த மாறுதலும் ஏற்படுவது இல்லை. நிதானமாகப் பதில் சொல்கிறார். பதிலில் உள்ள உண்மையும் உறுதியும் கேள்வி கேட்டவரை வாயடைக்கச் செய்து விடுகிறது. அணு ஆயுதம், முதலாளி தொழிலாளி பற்றி எல்லாம் காந்தி தெளிவான கருத்து கொண்டிருக்கிறார்.
எங்கு போனாலும் காந்தியைக் கூட்டம் தொடருகிறது. லாட்டரியில் அதிர்ஷ்ட எண்ணைச் சொல்லுங்கள் என்றெல்லாம் அவரிடம் கேட்பதை வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார் ரோலண்டு. அவர் மேலும் சொல்கிறார்.
இந்த மனிதன் சோதனை செய்தபடியே இருக்கிறான். அந்த வழியிலேயே நடக்கிறான். அது நேரான வழியாக இருக்கிறது. உண்மையைத் தேடும் மனிதனிடம் பத்து வருடங்கள் முன்னால் கொண்ட கருத்து இப்போது இருப்பதில்லை. அது மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கிறது.
இவன் கடவுள் என்பது உண்மை என்று சில வருடங்கள் முன்னால் சொன்னான். இப்போது உண்மையே கடவுள் என்கிறான். கடவுள் மறுப்பாளர்கள் கூட இதை ஏற்க வேண்டியாகிறது.
ஒவ்வொரு நாளும் காந்திக்கும் ரோலண்டுக்கும் இடையில் நீண்ட உரையாடல்கள் நிகழ்கிறது. கடைசி நாள் மாலை ரோலண்டு பியானோவில் பீத்தோவனின் ஐந்தாவது சிம்பனியை காந்திக்கு இசைத்துக் காட்டுகிறார்.மீராவும் கூட இருக்கிறார். காந்திக்குப் பீத்தோவனைத் தெரியாது. ஆனால் பீத்தோவன் தான் மீராவையும் ரோலண்டையும் இணைக்கும் பாலம் என்று தெரியும்.
கலையோ இசையோ எதுவாயினும் காந்தி உண்மையின் வாயிலாகவே அறிகிறார். அது எப்போதும் ஆனந்தத்தைத் தருவதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
சங்கடங்கள் இல்லாமல் ஆனந்தம் வருவதில்லை.
உண்மையைத் தேடுபவன் இதயம் தாமரை போல மென்மையானது. பாறையைப் போலக் கடினமானது.
இப்படி நிறைவு செய்கிறார் ரோலண்டு.
நன்றி Editor the Nation
To realize Brahmam, one is to unassailable; unshakable; unflinching...Gandhiji has been an example...
ReplyDeleteThank you
Deleteஇதற்கு முன் இந்த விஷயத்தைப் படித்ததில்லை. பதிவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி
Deletea different Tribute to father of nation நன்றி நண்பா
ReplyDeleteநன்றி
Deleteஅருமையான நினைவு அஞ்சலி. வாழ்விக்க வந்த காந்தி புஸ்தகம் நானும் படித்துள்ளேன் ஆனால் உன்னளவுக்கு நினைவு வரவில்லை.
ReplyDelete*வாழ்விக்க வந்த* பாரதியிடம் பெற்ற வார்த்தை.
அப்படியா? நாம் இதைப் பற்றிப் பேசியதில்லை. ஆமாம்.. வாழ்விக்க வந்த காந்தி பாரதியின் சொல். வாழ்க நீ எம்மான் என்ற பாடல்
Deleteஎல்லாமே நினைவிலிருந்து எழுதப்பட்டவை அல்ல. ரோலண்டு தனது நண்பருக்கு எழுதிய கடிதத்திலிருந்து குறிப்பெடுத்து எழுதியிருக்கிறேன்
ReplyDelete