வெண்பா ஒரு சுவையான பா வகை.
பள்ளி படிக்கும் காலத்திலேயே ஆர்வம் ஏற்பட்டு விட்டது. இது தான் வெண்பா என்று தெரியாமலே மனப்பாடம் ஆன ஒரு பாடல்.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்– சவைநடுவே
நீடடோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதான் அவன்நல் மரம்
வெண்பாவின் இலக்கணம் ஓரளவு பிடிபட்டது. தனிச்சீர் தளை எல்லாம் பரிச்சயமாயிற்று. இறுதிச் சீர் நாள், காசு, மலர் பிறப்பு என்றபடி அமைய வேண்டும் என்று புரிந்தது. பன்னிரெண்டு வயதில் நான் முதலாக வெண்பா எழுதிப் பார்த்தேன். எனக்கு இருந்த அரைகுறையான புரிதலோடு.
ஏற்றமிகு கல்வியை ஏழையும் அறிந்திருப்பின்
போற்றிப் புகழப் படுவான்- நற்றமிழா
சேற்றிலே பூப்பினும் செழுமையாய்ச் சிரிக்குமே
நாற்றமிகு நல்ல மலர்.
இறுதிச் சீர் நாள் காசு மலர் பிறப்பு என்றே அமைய வேண்டும் என்று பேதமையாகப் புரிந்து கொண்டேன். அப்படி இருக்க வேண்டியதில்லை. அது போன்று ஒலிக்கும் வேறு வார்த்தைகளும் வரலாம் என்று பின்னாட்களில் தெரிந்தது.
நளவெண்பாவில் ஒரு பாடல் பாடமாக வரும். அது மனதில் பதிந்து போனது.
நெஞ்சால் இம்மாற்றம் நினைந்திருக்க நீயல்லால்
அஞ்சாரோ மன்னர் அடுமடையா- எஞ்சாது
தீமையே கொண்ட சிறுதொழிலாய் எங்கோமான்
வாய்மையே கண்டாய் வலி
என்னுடைய சகோதரி கவி காளமேகத்தின் பாடலைச் சொல்லுவார்.
காரென்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீரென்று பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததன்பின்- வாரொன்று
கார்குழலார் ஆய்ச்சியர்கை வந்ததன் பின்
மோரென்று பேர்படைத்தாய் முப்பேறும் பெற்றா யே
எனது ஒன்று விட்ட சகோதரர் ஒரு வெண்பா எழுதினார்
அடிமேலடி பட்டு அவதியுறு வோரையே
துடிதுடிக்கத் துன்புறுத்தும் உலகம்- இடத்தில்
அசையவும் இயலாது ஆணி இருக்கையில்
விசைகொடு அடிப்பதே வழக்கு
பட்டினத்தார் பாடல்களில் வெண்பாக்கள் உண்டு. அதில் ஒன்று.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினையுன் னாதே - பருத்ததொந்தி
நம்மது என்று நாம் இருப்ப நாய்நரிகள் பேய் கழுகு
தம்மது என்று தாம் இருக்கும் தான்.
காந்திமதி நாதனைப் பாரதி சின்னப் பயல் என்ற பாடலை எனக்குச் சொன்னது தமிழாசிரியர் இல்லை. பூகோள ஆசிரியர். அது ஒரு வெண்பா என்று அப்போது தெரியவில்லை.
கல்லூரியில் படிக்கும் போது எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டது. We march to a better tomorrow என்று அரசாங்கப் பேருந்துகளில் எழுதி வைத்தார்கள். ரயில்கள் குறித்த நேரத்தில் வந்து போயின. ஒரு ரூபாய் கொடுத்தால் ஓட்டலில் சாப்பாடு போட்டார்கள். கல்லூரியில் மாணவர் தேர்தல் நடக்கவில்லை. பின்பு 1977ம் வருடம் பொதுத் தேர்தல் நடந்தது. ராஜ்நாராயண் என்பவர் இந்திரா காந்தியைத் தோற்கடித்தார். மொரார்ஜி தேசாய் பிரதமரானார். இந்த இருவரும் சிறுநீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அதைச் சொல்லவும் எல்லா செய்தித்தாட்களிலும் அதைப் போட்டுவிட்டார்கள். அப்போது சுஜாதா ஒரு வெண்பா எழுதினார்.
மீசா மறைந்து எமர்ஜென்ஸி விட்டுப்போய்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் - பேசாமல்
பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண் டெல்லாரும்
…………… குடிக்க வாரும்!
அப்போது எல்லாம் தினமணி கதிர் என்று பத்திரிகை வரும். சாவி அதன் ஆசிரியர். சுஜாதாவின் கதைகள் நிறைய வெளியாகும். அதிலே ஒரு கதையில் ஆகாய விமானத்தைப் பற்றி இப்படி ஒரு வெண்பா வந்ததாக நினைவு.
என்னை அடைந்தே எனக்குள் நுழைந்துவிட்டீர்!
சென்னைக்குச் செல்கின்ற சிந்தனையோ? - என்னைப்
பறக்கவைக்கும் சக்தி சிலசமயம் உன்னை
இறக்கவைக்கும் எச்சரிக் கை.
ஆகாசம்பட்டு சேஷாசலம் என்பவர் எண்பதுகளில் கவிதை எழுதினார். மீரா நடத்திய அன்னம் விடு தூது பத்திரிக்கையில் அவர் எழுதிய கவிதைகளைப் படித்திருக்கிறேன். விவசாயியின் பேச்சு மொழியில். அவருடைய வெண்பா ஒன்று.
சாமரம் வீசும் சவுக்குநிழல் கொடுக்கும்
ஆமாம், கனவுங் களைவளர்க்கும்- போமையா
நட்டுவச்ச அன்னிக்கே நாம கிளம்பிடறோம்
வட்டிக்கு வாங்கி வர.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெண்பா எழுதினேன்.
தோசைக்கு வரி தொங்குமீசை எடுக்கவரி
ஆசைக்கு எல்லாம் வரி-தேசமே!
யோசிக்க வரியில்ல யாசிக்க வரியில்ல
வேசிக்கு இல்ல வரி.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட இரண்டு வரிக் குறள் வெண்பா வடிவத்தையே தரித்துக் கொண்டது. இன்று வரை வெண்பா எழுதப்படுகிறது. நாளையும் எழுதப் படலாம்.
இது போல் வேறு எந்த மொழியிலாவது உண்டா?
நக்கீரியா தளை கண்ல படறதே🙂
ReplyDeleteஅப்படியா?
DeleteEg. சவுக்குநிழல் கொடுக்கும்
Deletevarikku vari vaasiththapin arivukku vandha vari...arivaar arindhadhellam yaarivaar enrillaadhu-ariyavaithaan vennbaavai Yen (my) Santana Bharathi..
ReplyDeleteநன்றி
Deleteசுபர்ணா கல்யாணம் ஃபிக்ஸ் ஆனப்ப எழுதினது.
ReplyDeleteமூவெட் டகவையில் என்னைவிட்டு வேறில்லம்
போவதால் நீவளர்ந்து விட்டாயா? தாவிவந்து
கொஞ்சு மொழிபேசி கொள்ளைகொண்ட நீயென்றும்
நெஞ்சுக்குள் நிற்கும் நிலா.
இந்த ஈற்றடிக்கு பலரும் வேறு மாதிரி எழுதினாங்க.
அருமை
Deleteசில பேர்லாம் மாத்தி மாத்தி தாக்குவாங்க வெண்பாலயே. படிக்க செம்மயா இருக்கும். நான் ஸ்டாப்பா போகும். எனக்கு சொல்வளம் கம்மி அதான் ரொம்ப எழுத வரல.
ReplyDeleteஇப்பதான் டைட்டில் பிரிச்சு எழுதினத பார்த்தேன்.
ReplyDeleteபண்பட்ட சொல்லாலே பாங்கோ டமைந்த
வெண்பாவைக் கொண்டாடு வோம்