Skip to main content

தனக்குள்ளே சிந்தும் ஒளி

 



If music be the food of love play on,

Give me excess of it, the surfeiting,

May sicken the appetite, and so die.


நல்ல இசையைக் கேட்க வாய்க்கும் போது எல்லாம் அப்பா இதைச் சொல்வார். ஏற்ற இறக்கத்தோடு உணர்ச்சி பொங்கச் சொல்வார். இத்தனைக்கும் அவர் அதிகம் பேசுபவர் அல்ல. இசை அவரை நெகிழ வைத்திருக்கிறது. கண்களின் விளிம்பில் நீர் கட்டி விடும். கண்ணாடியைக் கழற்றி விட்டு அழகாகத் துடைத்து விட்டுக் கொள்வார். கர்நாடக இசை அவருக்குப் பிடிக்கும். அவர் பக்கத்தில் அமர்ந்து கச்சேரி கேட்பது ஒரு சிறந்த அனுபவம். இசைக்கு முழுவதுமாகத் தன்னைக் கொடுத்து விடுவார். ஓரு அசைவோ சிலிர்ப்போ வெளியில் தெரியாது. ஏதோ ஒரு ஆழத்தில் திளைத்திருப்பவராய் இருப்பார். ஆரம்ப காலத்தில் அவரது இந்த அனுபூதியைக் கலைக்கக் கூடாது என்று தெரியாது. அவசரப்பட்டு பாடகர் பாடும் ராகத்தைத் தவறாக ஊகித்து அவரிடம் சொல்லுவேன். . மெல்ல அவர் உலகத்திலிருந்து மீண்டு சன்னக் குரலில் கவனி என்று சொல்வார். பிறகு எல்லாம் அவருடன் கச்சேரி கேட்கும் போது இசையின் ஒரு சிறு கணத்தைக் கூடத் தவற விடத் தோன்றாது. அவர் கற்பிப்பது எல்லாம் அப்படித்தான். கற்பிக்காமல் கற்பிக்கும் முறை அவருடையது. 


அவர் ஆசிரியராக இருந்த பள்ளியிலே நான் படித்தேன். ஆனால் எனக்குப் பாடம் எடுத்தது இல்லை. அவர் ஆங்கில வகுப்பு எடுக்கும் விதத்தை மற்றவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். What is this life if full of care, We have no time to stand and stare என்று துவங்கும் கவிதை பாடத்தில் வரும். We have no time to stand and stare என்று சொல்லியபடி வார்த்தைகளின் லயத்துக்கு ஏற்பத் தோள்களை உயர்த்தித் தாழ்த்துவாராம். ஆங்கிலத்தின் மேல் அவருக்கு அபாரமான காதல் இருந்தது. ஆங்கிலம் நன்றாக எழுதுவார். பள்ளி ஆண்டு அறிக்கை தயாரிப்பதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு என்று அறிந்திருக்கிறேன். நல்ல ஆங்கிலம் அவர் எல்லோருக்கும் விட்டுச் சென்ற சொத்து. ஏதாவது வார்த்தைக்குப் பொருள் கேட்டால் அகராதியைப் பார் என்பார். அப்படித் தான் அகராதியில் பொருள் தேடும் பழக்கம் உருவானது. 


கல்லூரியில் படிக்கும் போது The Indian Jugglers என்று ஒரு உரைநடைப் பாடம் வந்தது. அது William Hazlitt எழுதியது. அதில் ஒரு பத்தி வரும். அது ஒரே வாக்கியத்தில் அமைந்திருக்கும். To catch four balls in succession …என்று துவங்கி beauty triumphing over skill என்று முடியும். அது மட்டுமே கிட்டத்தட்ட 170 வார்த்தைகள். வார்த்தைகள் பிறழாமல் இதை அப்படியே அப்பா ஒரு முறை சொன்னார். அசந்து போனேன். அவரைப் பின்பற்றி நானும் அதைப் பாடம் செய்து சொல்ல முயன்று இருக்கிறேன். முழுதும் அதில் வெற்றி கண்டது இல்லை.  


பாரதியின் பாடல்களில் மனம் தோய்ந்திருந்த காலம். அப்பாவிடம் கேட்டேன். பாரதி பாடல்களில் எது உங்களுக்குப் பிடிக்கும் என்று. அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்ற பாடலைச் சொன்னார். எத்தனையோ பாடல்கள் இருக்க இதை ஏன் சொன்னார் என்று யோசித்தேன். பல நாட்களுக்குப் பின் பாடல் வரிகளை மனதில் ஓட்டிய போது புரிந்தது. சரண வரியான “பக்தி என்று ஒரு நிலை வகுத்தாய் எங்கள் பரமா பரமா பரமா"என்ற வரி அவருக்கு உவப்பானதாக இருந்திருக்கக் கூடும்.


வாழ்க்கைத் துன்பங்கள் அவரை அலைக்கழித்து இருக்கின்றன. கஷ்டங்களை அவர் பொறுத்துக் கொண்டார். வாய் விட்டு எதுவும் சொன்னதில்லை. ஏழு வயதில் தந்தையை இழந்தவர். தானே தனக்குள்ளே சிந்தும் ஒளி போல ஒரு ஆளுமை, தானே அவருக்கு வாய்த்தது. ஓரு மெளனம் குளிர் மேகம் போல அவரைச் சுற்றி எப்போதும் சூழ்ந்திருந்தது. சிந்தனை வயப்பட்டவராக இருப்பார். காற்றில் ஏதாவது வார்த்தைகளை எழுதிப் பார்த்தபடியே இருப்பார். அவர் எழுதிய கடிதங்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கும். அதில் அன்பும் கரிசனமும் இருக்கும். 


கண்ணாடி அணிந்த அவரது தோற்றம் மனதில் அழுத்தமாகப் பதிந்து இருக்கிறது. நல்ல கண்கள். துயரத்தின் சாயையோ மகிழ்ச்சியின் ததும்புதலோ அதில் இருக்காது. நீண்ட மூக்கு. சிறிய உதடுகள். கன்னத்தில் சதை ரொம்ப இருக்காது. சற்றே நீளமான தாடை. நெற்றியில் புரளும் சிகையை ஒதுக்கி விட்டுக் கொள்வார். அவருடைய அங்க அசைவுகளில் ஒரு மேற்கத்தியத் தன்மை இருக்கும்.


நிறைவான வாழ்க்கை அவருடையது. இறுதி வரை அதில் எந்தப் புகாரும் கிடையாது. தனது திறமைகள் குறித்து எந்தப் பெருமிதமும் கிடையாது.


பள்ளி ஆசிரியரானது அவரது தேர்வு TST என்று அவர் அழைக்கப்பட்டார்.. அந்தப் பெயர், பள்ளி ஆசிரியர் என்ற அடையாளங்களைத் தாண்டி பலதும் உண்டு. எல்லாவற்றையும் முழுமையாக வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.


7.12.2024 இன்று அவரது நூற்றாண்டின் நிறைவு








Comments

  1. அருமையான நினைவு அஞ்சலி.
    எனக்கும் அவரை நன்கு
    நினைவு உண்டு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதி எனக்கு நெருக்கமானவர்கள் நினைவில் அவர் என்றும் இருப்பார். அவர் பிறந்த தினம் இன்று. நூறாவது ஆண்டு

      Delete
  2. Well written Santhanam ! Didn't realize this is his centenary birth anniversary year - for some reason, I thought he was born in 1928. I still remember hearing from him that the word prosecute has an another meaning - to complete to its end.
    -Cheenu

    ReplyDelete
    Replies
    1. 1924 was the year of his birth. Thanks Cheenu for your nice remembrance. He would say Prepositions must not be used to end sentences with. The sentence ends with a preposition

      Delete
  3. Beautifully written. Your vivid memories and keen observations make this a truly unique tribute. What a remarkable man—proud to be part of his family.

    ReplyDelete
    Replies
    1. Thanks Janu. He was a unique person. A gem of purest ray serene among the dark unfathomed caves of the ocean

      Delete
  4. அழகான நினைவுகள். பெரியப்பா மஹா ரசிகர். அமைதியானவர். அன்பான கணவர்.

    சிறு வயதில் ஒரு பயம் உண்டு அவரிடம், அவர் ஒரு ஆசிரியர் என்பதலா அல்லது அவர் தோற்றமா தெரியவில்லை. சற்றே வயதானவுடன் மறைந்தது. பெரியப்பா சொல்லும் பேஷ் எனக்கு பிடிக்கும்.

    எனக்கு நினைவிருக்கிறது 1924 என்று. 1985 ல் விஜயா கல்யாணம் முடிந்து சஷ்டியப்த பூர்த்தி. அது ஒரு வருடம் தாமதமாக கொண்டாடப்பட்டது.

    I was blessed to attend both 60th and 80th birthday celebrations of periyappa. Now seeking his blessings on his 100th.

    ReplyDelete
    Replies
    1. அழகாகச் சொன்னாய். தண்ணென்ற நிலவொளி போலப் பரந்து அவரது ஆசி நம்மெல்லாரையும் குளிர்விப்பதாக

      Delete
  5. அவர் பிறந்த நூற்றாண்டு பூர்த்தியில் நினைவு கூர்ந்தது எண்ணி மகிழத்தக்கது. நானும் அவரோடு உரையாடி மகிழ்ந்திருக்கிறேன். ஆழ்ந்த பார்வை. அதிகம் பேச மாட்டார். குட்ஷெட் தெரு வீட்டின் நினைவுகள். இந்த இனிய நாளில் அவருடைய ஆசிர்வாதங்களை இறைஞ்சுவோம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி குட்ஷெட் தெரு வீட்டில் பணி ஓய்வுக்குப் பின் வாசற்படியில் அமர்ந்திருப்பார். நண்பர்கள் நீங்கள் என்னைத் தேடி வரும் போது பேசியிருப்பார். நல்ல நினைவுகள்

      Delete
  6. ஞான ஒளிவுபுரம் கிளைக்கு வந்தால் கூட அவர் வேளையை counter level ல் முடித்துக் கொண்டு நகர்ந்து விடுவார்.

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான். அவருடைய பென்ஷன் கணக்கு GC கிளையில். அவருடைய மாணவர் காசாளராக இருந்தார். ஒருமுறை அவருடைய டோக்கன் முறை வரும் முன்பே அவரை அழைத்துப் பணம் கொடுத்து விட்டார். அடுத்த முறையிலிருந்து காசாளர் கண்ணில் படாமல் அந்தக் கிளையின் பெரிய தூணுக்குப் பின்னே மறைந்து கொள்வாராம்

      Delete
  7. Very nice tribute! I didn't get to know Thatha as much as I'd love to have when he was still present. This helps to fill that gap 🙏

    ReplyDelete
  8. I have recorded my comments in tamil above but coming as anonymous.

    ReplyDelete
  9. நூற்றாண்டு சிரத்தாஞ்சலி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...