அன்னை இல்லம். இந்தப் பெயரில் ஒரு திரைப்படம். எங்கள் வீட்டுக்கு அருகாமையில் ஒரு திரையரங்கம் உண்டு. அங்கே சிறு வயதில் பார்த்திருக்கிறேன். கதை அவ்வளவு ஞாபகமில்லை. ஏனோ தெரியவில்லை சிகப்பு விளக்கு எரியுதம்மா ஒரு ஜீவன் போகுது தெரியுதம்மா என்ற பாடல் ஞாபகம் இருக்கிறது. அப்போதெல்லாம் வகுப்பில் இரண்டு கட்சி உண்டு. ஒன்று எம்ஜியார் கட்சி. மற்றொன்று சிவாஜி கட்சி. நான் பின்னதில் இருந்தேன். தர்மம் தலைகாக்கும் பட போஸ்டர் ஒட்டியிருக்கும். ராஜேந்திரன் மெல்லப் போய் கண்கள் இருக்கும் பகுதியில் போஸ்டரைக் கிழிப்பான். இநே காரியத்தை ஜெயச்சந்திரன் இருவர் உள்ளம் போஸ்டரில் செய்வான்.
சிவாஜியின் இல்லத்தின் பெயர் அன்னை இல்லம் என்று அப்போதெல்லாம் தெரியாது. நடையா இது நடையா என்று சிவாஜி நடை போட்டு வந்தால் கைதட்ட வேண்டும் என்று தெரியும்.
மதுரையிலிருந்து மதராஸுக்கு KB டிராவல்ஸ் என்று ஒரு பஸ் போகும். பறவைகள் ஒலிக்கும் புலராத காலையில் சென்னை வரும். மவுண்ட் ரோடில் திடுமென திரும்பும் போது அன்னை இல்லம் காட்சி தரும்.
சமீபத்தில் சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு வந்ததாகத் தெரிந்தது.
வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியவில்லை. வாரிசுகளில் ஒருவர் திரைப்படம் எடுக்க வாங்கிய கடன்.
நாடகத்தில் சிறு வயதிலிருந்து நடித்த ஒரு மனிதன். தனது திறமையால் சினிமாவில் வளர்ந்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்து. ஜப்தி நடவடிக்கை சிவாஜி ரசிகர்களுக்கு வருத்தம் தந்தது. வீடு ஏலத்துக்கு வரும் போது இடிந்து போனவராய் சிவாஜி வீட்டிற்கு உள்ளே அமர்ந்திருப்பார். அது ஒரு திரைப்படக் காட்சி. அது நடிப்பு. ஆனால் இது நிஜம் அல்லவா?
நான்மணிக்கடிகையில் ஒரு பாடல் உண்டு.
பிறக்குங்கால் பேரெனவும் பேரா இறக்குங்கால்
நில்லெனவும் நில்லா உயிரெனைத்தும் - நல்லாள்
உடன்படின் தானே பெருகும் கெடும்பொழுதில்
கண்டனவும் காணாக் கெடும். . .
பிறக்கும் போது வேண்டாம் போ என்று சொன்னால் போகாது. இறக்கும் பொழுது உயிரை நில் என்று சொன்னாலும் நிற்காது. திருமகள் உடன்படும் போது செல்வம் பெருகும். அல்லாது நீங்கும் போது காண்பது கண் முன்னே மறையும்.
அன்னை இல்லம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கை முடிவு காணட்டும். நல்லது நடக்கும் என்று நம்புவோம்
நல்ல நினைவூட்டல் பதிவு. பாடல்களுக்காகவே பார்த்த படங்களும் உண்டு. நிகழ்கால நிகழ்வைப் பார்க்கும் போது மனது சற்றே வலிக்கிறது. நல்லது நடக்கட்டும்
ReplyDeleteநன்றி ராமனாதன்
Delete