தினம் தினமும் என்று ஒரு பாடல் சிறிது காலத்திற்கு முன் பிரபலமானது. விடுதலை 2 திரைப்படத்தில். தினம் தினமும் என்ற வார்த்தையை சாதாரணமாக அன்றாடம் என்று குறிப்பிடுவார்கள். பேச்சு வழக்கில் அன்னாடம் என்று சொல்வது உண்டு. அன்றன்று சம்பாதித்துக் காலம் கழிப்பவர்களை அன்றாடங் காய்ச்சி என்று அழைப்பார்கள்.
அன்றாடம், தினம் தினம், தினந்தோறும் என்பதை நல்ல தமிழ் வைகல் என்று சொல்லும்.
வருவிருந்து வைகலும ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
என்பது குறள். தன்னை நோக்கி வரும் விருந்தினரை தினந்தோறும் போற்றுபவன் வாழ்க்கை பாழ்படுவதில்லை என்பது பொருள்.
நற்றிணையில் ஒரு பாடல்.
வைகல்தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து;
காணீர் என்றலோ அரிதே; அது நனி
பேணீர் ஆகுவிர்-ஐய! என் தோழி
தலைவியைப் பிரிந்த தலைவன் பொருள் ஈட்டச் சென்று விடுகிறான். இதைப் பொருள் வழிப் பிரிதல் என்று பழம் தமிழ் இலக்கியம் சொல்லும். பல நாட்கள் ஆயிற்று. அவன் திரும்பவில்லை. இங்கே இவள் வாடுகிறாள். இளமை கழிந்து கொண்டிருக்கிறது. எப்படி? எய்து விட்ட அம்பின் நிழல் போல அவள் இளமையும் இன்பமும் மறைகின்றதாம். தினம் தோறும் குன்றியபடியே இருக்கிறதாம். இவ்வாறு தோழி புலம்புவதாகப் பாடல் அமைந்திருக்கிறது.
நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் ஒரு பாசுரம்.
வைகல் பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்
செய் கொள் செந்நெல் உயர் திருவண்வண்டூர் உறையும்
கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பி சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே
கடலின் அருகே அழகிய நீர் நிலை. அங்கே கொக்குக் கூட்டம் தினந்தோறும் இரையுண்ண வருகின்றன. அவற்றை நோக்கித் தலைவி சொல்கிறாள். கனி போன்ற வாய் கொண்ட என் பெருமான் கையிலே சக்கரம் ஏந்தியபடி திருவண்வண்டூரில் இருக்கிறான். அவனிடம் சென்று கை கூப்பி நான் அவன் மேல் கொண்ட காதலைச் சொல்லுங்கள்.
இப்படி கொக்கின் கூட்டத்தைத் தூது விடுகிறாள் தலைவி.
தினம் தினமும் மற்றும் வைகல் என்ற வாரத்தைகளை வைத்துக் கொண்டு அருமையான பதிவு. என் போன்றவர்கள் யோசிப்பது என்பது முடியாத காரியம். பதிவுக்கு நன்றி
ReplyDeleteநன்றி ராமனாதன்
Deleteநல்ல தகவல் ! வைகல், வைகறை (விடிகாலை) இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?
ReplyDeleteவைகறை என்பது விடியல். வைகு என்று ஏதும் வேர்ச்சொல் இருக்குமா தெரியவில்லை.
Delete