தபாலில் இடாத கடிதம்
சிறுகதை
தி சந்தானம்
வெகு நாட்களாக உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் இருக்கும் இடம் தெரியாது. இந்தக் கடிதம் உங்களிடம் வந்து சேருமா? உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எண்ணம் கொண்டு போகும் வேகத்தில் எழுதிப் போகிறேன். என்னுடைய கையெழுத்து மாறியிருப்பதாக நீங்கள் கருத மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நெல்லின் மணியைப் பொறுக்கி எடுத்துச் சாய்த்து சாய்த்து வைத்தது போல நீண்டு சிறிதான உங்கள் கையெழுத்து ஞாபகம் வருகிறது. கண்ணீர் வருகிறது. இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. காரணம் தெரியவில்லை.
நட்பும் ஆன்மீகம் போலத்தானோ?
உங்களுடைய சிரிப்பு, மென்மையான பேச்சு எல்லாம் எனது மனதில் ஒரு ஆன்மீகத்தையே விதைக்கிறது. நான் மேன்மேலும் நம்பிக்கை பெறுகிறேன். எப்போதும் உங்களைச் சார்ந்து இருக்கவே விரும்புகிறேன். உங்களால் நிராகரிக்கப்படவில்லை என்பதிலிருந்தே ஆறுதல் பெறுகிறேன். உங்களுடைய இங்கிதம் ஒரு குளிர் மேகம் போன்றது. உங்களது அண்மை இதம் தரக் கூடியது. துன்பங்களை மறக்கச் செய்வது.
நாம் இருவரும் சமமானவர்கள் என்று உணர்வில் நமக்கே ஒரு பெருமை இருந்தது.
தெய்வம் போல என் மேல் அன்பும் கருணையும் கொண்டிருந்தீர்கள் இல்லையா? கூடி இருப்பதும் பேசி மகிழ்வதும் அற்றுப் போனது. நீங்கள் தொலைவாகிப் போனீர்கள்.
நினைவிருக்கிறதா? ஓருமுறை நாம் ஒரு திரைப்படத்திற்குச் சென்றோம். அது காலைக் காட்சி. ஆங்கிலப் படம். டீசர்களோ டிரைலர்களோ இல்லாத காலம். பார்க்க வேண்டும் என்ற தேர்வு உங்களுடையதாகக் கூட இருக்கலாம். படத்தைப் பற்றி ஆங்கில வார இதழில் நீங்கள் படித்துக் கூட இருக்கலாம். படத்தின் பெயர் The Killing Fields. தியேட்டர் வாசலில் எனக்காக வியர்க்க விறுவிறுக்கக் காத்திருந்தீர்கள். உங்கள் கைகளை நான் பற்றிக் கொண்டேன். தண்ணென்று இருந்தது. அவசரம் அவசரமாக டிக்கெட்டை வாங்கிக் கொண்டு திரையின் முன்னால் அமர்ந்தோம். கூட்டம் குறைவாக இருந்தது.
கம்போடியாவில் உள்நாட்டுப் போர். கெமார் ரூஜ் (Khmer Rouge) கொரில்லாக்கள் பனாம் பென் (Phnom Penh) ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். அமெரிக்கப் போர் விமானங்கள் வானத்திலிருந்து குண்டு மழை பொழிகின்றன. எங்கும் ரத்தக் களரி. அமெரிக்க அதிபர் நிக்ஸனின் செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது. படத்தின் பின்னணி இது தான். உள்நாட்டுப் போர்க்களத்தில் செய்தி சேகரிக்கச் செல்கிறான் ஒரு அமெரிக்கப் பத்திரிக்கையாளன் ஸிட்னி.அவனுக்கு கம்போடியாவைச் சேர்ந்த ஒரு இளைஞன் பிரான் பழக்கமாகிறான். அவனும் ஒரு பத்திரிக்கையாளனே. பழக்கம் ஒருவர் மீது ஒருவர் நட்பு கொள்ள வைக்கிறது. உள்ளூர் கார நண்பன் உதவியுடன் செய்தி சேகரிக்கிறான் அமெரிக்கப் பத்திரிக்கையாளன். நாளுக்கு நாள் நிலைமை மோசமடைகிறது. உள்நாட்டிலேயே அனைவரும் அகதியாகி விடுகிறார்கள். ஸிட்னியின் உதவியுடன் பிரான் தனது மனைவி மக்களை அமெரிக்காவிற்கு அனுப்பி விடுகிறான். ஸிட்னிக்கு உதவும் பொருட்டு இங்கேயே இருக்கிறான். ஒரு சமயம் ஆயுதம் ஏந்திய போராளிகளிடம் ஸிட்னி சிக்கிக் கொள்கிறான். கிட்டத்தட்ட அவனைக் கொல்லப் போகும் நேரத்தில் கம்போடிய நண்பன் அவர்களுடன் பேசி உயிரைக் காப்பாற்றுகிறான். உள் நாட்டுப் போர் தீவிரம் அடைகிறது. அமெரிக்கனாக இருப்பதால் ஸிட்னி தனது நாட்டுக்குத் தப்பிச் செல்ல முடிகிறது. எவ்வளவோ முயற்சி செய்தும் பிரானைத் தன்னோடு அழைத்துச் செல்ல முடியவில்லை. ஸிட்னி மிகுந்த குற்ற உணர்வுக்கு ஆளாகிறான். நண்பர்கள் பிரியும் கட்டம் உணர்ச்சிகரமாக இருக்கும். .ஆனால் அடங்கிய தொனியில் இருக்கும். கம்போடிய நண்பன் அங்கேயே இருந்து பல துன்பங்களைச் சந்திக்க நேரிடுகிறது. அமெரிக்காவில் இருந்தபடியே ஸிட்னி கம்போடிய நண்பனைத் தேடிக் கொண்டே இருக்கிறான். ஏதாவது சேதி கிடைக்குமா என்று காத்து இருக்கிறான். பலவிதமாக முயற்சி செய்தபடி இருக்கிறான். அமெரிக்கப் பத்திரிக்கையாளன் ஸிட்னிக்கு அந்த ஆண்டின் சிறந்த பத்திரிக்கையாளன் விருது கிடைக்கிறது. ஏற்புரையில் பிரான் செய்த உதவியை நினைவு கூருகிறான் ஸிட்னி. உண்மையில் விருதுக்கு உரியவன் தன் கம்போடிய நண்பனே என்கிறான். கம்போடிய நண்பன் பிரானுக்காக அவன் மனம் கசிகிறது. அவனைத் தேடிக் கொண்டே இருக்கிறான். கதை இப்படி வளர்ந்தது. உணர்வு பூர்வமான நட்பு அழகாகப் படமாக்கப்பட்டிருந்தது.
திரைப்படம் பார்த்து முடித்து நாம் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. மெளனமாகவே பிரிந்து சென்றது நினைவிருக்கிறதா?
நீங்கள் தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் வசித்து வந்தீர்கள். தந்தையை சிறு வயதில் இழந்தவர் நீங்கள். உங்கள் அப்பா ஒரு தொழிற்சங்கத் தலைவர் என்று நானாக கருதிக் கொள்வேன். நிர்வாகத்தின் சதியால் அவர் உயிர் இழந்தார் என்று நினைத்துக் கொள்வேன். உங்கள் வீட்டு வாசலில் இருக்கும் பழைய அம்பர் சைக்கிளைப் பார்க்கும் போது எல்லாம் அப்படி நினைப்பேன். அது உங்கள் அப்பா ஓட்டிய சைக்கிள். சிறு வயதிலேயே உங்களுக்குப் புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தார். இப்படி எல்லாம் உங்களைப் பற்றி எனக்குக் கற்பிதங்கள் உண்டு. ஆனால் உங்களிடம் சொன்னதில்லை. என்னைப் பற்றி உங்களுக்கு எந்த விதமான கற்பிதமும் கிடையாது.
நமது நட்பு இறுதி காணாதது. ஆனால் பழக்கமோ அற்றுப் போனது. நமது அண்மையும் தொலைந்து போனது. காலம் நம்மை வேறு வேறு திசையில் எறிந்தது. நான் உங்கள் நினைவை எப்போதும் ஏந்தியபடியே இருந்தேன். உங்கள் முகம் அணையாத சுடராய் எனக்குள் எப்போதும் இருந்தது.
நான் மேலே சொன்ன திரைப்படத்தை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு வகையில் நாம் எல்லோருமே அகதிகள் தானோ என்றே தோன்றுகிறது. ஒருவரை ஒருவர் தேடிக் கொண்டே இருக்கிறோம்.
நினைப்பவை எல்லாவற்றையும் எழுதி விட முடிகிறதா? இந்த்க் கடிதம் உங்களைச் சேராது. எனக்குத் தெரியும். அதனால் தானோ என்னவோ எழுதி முடித்தும் பாரம் குறையவில்லை.
ஆஹா அட்டகாசம் சந்தானம்.👏👏
ReplyDeleteநன்றி ஜெயந்தி
Deleteஅருமையான பதிவு. கடிதம் வந்து சேர்ந்துவிட்டது
ReplyDeleteநன்றி ராமநாதன்
Delete
ReplyDeleteஅலுவலக வேலை சில வாரங்களாக அதிகமாக இருந்ததால் இப்போதுதான் படிக்கிறேன்.நன்றாக இருக்கிறது உனது நினைவோட்ட எழுத்து. இன்றைய அதிவேக சமூக வலைதள செய்திகள் நிறைந்த காலகட்டத்தில் உடனுக்குடனே கவனிக்காவிட்டால் அவைகளுமே தபாலில் தொலைந்து போன கடிதங்கள் போல் அடுத்தடுத்து வரும் செய்திகளின் கீழே காணாமல் போகின்றன. படித்தாலும் அதே நிலைதான் - மூளையிலும் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று நினைவில் அதிகம் இருப்பதில்லை. ஆற்று நீரை கையில் எடுக்கும்போதே ஆறு நம்மை கடந்து விடுகிறது !
-சீனு
அள்ளி
Deleteகைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலை புரளும் அதில்
கை நீரை கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?
சுகுமாரனின் இந்தக் கவிதை ஞாபகம் வந்தது சீனு
மேலும் மேலும் என்று சமூக வலைத்தளத்தில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. "மேன்மேலும் புதிய காற்று எம்முள் வந்து மேன்மேலும் புதிய உயிர் விளைத்தல் கண்டீர்" என்று சொல்லும் பாரதியின் கவிதை. மேல் மேலும் வரும் எல்லாச் செய்திகளும் அப்படியா இருக்கின்றன?
ReplyDelete